
வாரிசுக்கு, `வாரிசால’ பிரச்னை வரும்னு வாரிசுக்கு நெருக்கமானவங்க பதற்றப்படுறாங்க.
பா.ஜெயப்பிரகாஷ், தேனி.
தெலங்கானா முதல்வர் வீட்டை முற்றுகையிடச் சென்ற ஆந்திர முதல்வரின் சகோதரி ஷர்மிளாவின் காரை, கிரேனுடன் தூக்கிக் கைதுசெய்த போலீஸாரின் செயல் குறித்து..?
தெலுங்கு அரசியலும் தெலுங்குப் படங்களைப்போலவே இருக்கிறது!
இல.கண்ணன், நங்கவள்ளி.
“ஒற்றுமை நடைப்பயணத்தின் மூலம் எனக்குள் பொறுமை அதிகரித்திருக்கிறது” என்று ராகுல் காந்தி கூறியிருப்பது பற்றி..?
நல்ல விஷயம்தான். கோஷ்டிச் சண்டையில் அடித்துக்கொண்டு உருளும் அவர்களது கட்சி நிர்வாகிகள் அத்தனை பேரையும், பொறுமை அதிகரிக்கும் வரை நடக்கச் சொல்லி கட்சி அறிவுறுத்தலாம்!

தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45.
எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறிவருகிறாரே?
அ.தி.மு.க-வுக்குள் சொல்கிறாரோ?
வண்ணை கணேசன், சென்னை-110.
இன்று எந்த விஷயத்தில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்?
நல்ல விஷயங்களைச் செய்ய நேரமே இல்லை என்கிற விஷயத்தில்தான்!
கிருஷ்ணா, சென்னை-17.
‘வாரிசு’ படம் வெளியாவதில் நிறைய அரசியல் இருக்கும்போலவே?
வாரிசுக்கு, `வாரிசால’ பிரச்னை வரும்னு வாரிசுக்கு நெருக்கமானவங்க பதற்றப்படுறாங்க. வாரிசோ ‘வாரிசு எனக்கு நண்பர்தான்’ என்கிறார். நேரடியாகவே வாரிசும் வாரிசும் பேசி, சுமுகமா போயிட்டா `வாரிசு’ வெளியாவதில் பிரச்னையே இருக்காது!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
நடிகை ரஞ்சிதா எங்கே இருக்கிறார் கழுகாரே?
உங்களிடம் கைலாசாவுக்கு பாஸ்போர்ட் இருக்கிறதா மிக்கேல்ராஜ்?
மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை-625 009.
உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசும் கலையை மனிதர்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்?
மனிதர்களிடமிருந்துதான்!
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்-45.
நேற்று அ.தி.மு.க-வில் மந்திரியாக இருந்தவர், இன்று தி.மு.க-வில் மந்திரி... என்றால்?
நாளை பா.ஜ.க-விலும் மந்திரியாக இருப்பார். அவ்வளவுதான்!
@வாசுதேவன், பெங்களூரு.
விரைவில் வெளிவரப்போகும் ‘அவதார் 2’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறதே?
`அவதார்’ படத்தில் காடு, மலைகள், பிரமாண்டப் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என இயற்கையும் மனிதனும் ஒன்று கலக்கும் அதியற்புத கணங்களை கற்பனை ஓவியங்களாக வார்த்து அசரடித்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். இந்த முறை கடல். மனிதர்களால் கற்பனைகூட செய்ய முடியாத எத்தனையோ அதிசயங்களைக்கொண்டது கடல். சொல்லவும் வேண்டுமா? `அவதார்’ டீம் என்னதான் மேஜிக் செய்யவிருக்கிறது என்று எனக்குமே ஆவலாக இருக்கிறது!
தேவ் ஆனந்த், பாளையங்கோட்டை.
‘காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 581 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டன’ என்று உ.பி போலீஸ் சொல்லியிருக்கிறதே?
அது மட்டுமா... இன்னும் எலியின் தலையில் எத்தனை கேஸ்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை வாசிக்க 26-ம் பக்கம் செல்லுங்கள். உங்களுக்காகவே இரண்டு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறோம்!

எஸ்.மோகன், கோவில்பட்டி.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்... தற்போது யார் கை ஓங்கி இருக்கிறது?
இருவர் கைகளுமே பரஸ்பரம் ஓங்கித்தான் இருக்கின்றன... ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும்விதமாக!