
உமர் அதை விரும்பவில்லை என்பதுதான் முக்கியம். ஓவியர், எழுத்தாளர், தொழிலதிபர் எனப் பன்முகம்கொண்ட உமர், தற்போது பிரான்சில் வசித்துவருகிறார்.
அன்னூரார் பொன்விழி, அன்னூர்.
தமிழக அரசிடமிருந்து மக்களுக்குப் பொங்கல் பரிசாக என்ன கிடைக்கும்?
கடந்த முறை வழங்கிய பரிசுப்பொருள்களால் கிடைத்த கெட்ட பெயரை இந்த முறையும் வாங்க வேண்டாம் என்று நினைக்கிறார் முதல்வர். ஒரு ரேஷன் கார்டுக்கு 1,000 ரூபாய் கொடுக்க வாய்ப்பிருக்கிறது!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்கும் இந்தியாவின் இலக்கு ‘ஒரே பூமி... ஒரே குடும்பம்... ஒரே எதிர்காலம்’ என்று மோடி கூறியிருப்பது?
ஜி20 தலைமைப் பொறுப்பு மகிழ்ச்சிதான். ஆனால், இந்த ஒரே... ஒரே... ஒரே-வுக்கு ஒரு எண்டே இல்லையா?
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45.
அன்புமணி ராமதாஸ் இப்போதெல்லாம் வெளியே செல்லும்போது கேமராவுடனேயே செல்கிறாரே?
பிரதமராக ஆசைப்படுகிறாரோ?
@பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
“நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் விருப்பம்” என்றிருக்கிறாரே பின்லேடனின் மகன் உமர்?
ஆனால், உமர் அதை விரும்பவில்லை என்பதுதான் முக்கியம். ஓவியர், எழுத்தாளர், தொழிலதிபர் எனப் பன்முகம்கொண்ட உமர், தற்போது பிரான்சில் வசித்துவருகிறார். அவரது சிறு வயதில், அவரது செல்ல நாயை ரசாயன ஆயுதங்களைச் சோதிக்க அப்பாவின் உதவியாளர்கள் பயன்படுத்தியது அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. “அந்த வயதில் எனக்கு பயங்கரவாதப் பயிற்சி முகாமில் ஏ.கே 47 துப்பாக்கியால் சுடப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால், அந்த மோசமான தருணங்கள் அனைத்தையும் மறக்கவே விரும்புகிறேன்” என்றே குறிப்பிட்டிருக்கிறார். தந்தையும் மகனும் பரஸ்பரம் ‘குட் பை’ சொல்லிக்கொண்ட தருணம் பற்றியும் சொல்லியிருக்கிறார். சினிமாவின் ஆரம்ப அல்லது க்ளைமாக்ஸ் காட்சி போன்றது அது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
“சட்டத்துக்கு உட்பட்டே ஆளுநர் செயல்படுகிறார்” என்ற ஜி.கே.வாசனின் பேச்சு?
அவர் இப்படியெல்லாம் பேசாமல், யதார்த்த நிலைமையைப் பேசினால்தான் ஆச்சர்யம்!
பி.மணி, ஆந்திரா-517 425.
சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மரப்பாதை..?
மிகச் சிறப்பான முன்னெடுப்பு. எத்தனையோ ஆண்டுக்காலமாகத் தங்கள் மனதில் இருந்த கடல் அலைகளில் கால் நனைக்கும் ஆசையை அவர்கள் நிறைவேற்றிக்கொள்வதைப் பார்க்கும்போது, இதை இன்னும் கொஞ்சம் முன்பே செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது. “அந்தப் பாதையை மாற்றுத்திறனாளிகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரியானதல்ல. அது மாற்றுத் திறனாளிகளைத் தனிமைப்படுத்தும்விதமாக அமையும். இந்தப் பாதையில் மற்றவர்களும் இணைந்து நடந்தால்தான் மாற்றுத்திறனாளி என்ற தனிப்பார்வை மறைந்து குறைபாடுகள் எனக் கருதப்படுபவை ‘நார்மலைஸ்’ ஆகும். பத்து சக்கர நாற்காலிகளோடு சேர்ந்து எனது சக்கர நாற்காலியும் ஊர்வலமாகச் செல்வதை நான் விரும்ப மாட்டேன். நான் நடக்கிற, ஓடுகிற மனிதர்களுடன் இணைந்து செல்லவே விரும்புகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்குச் சில கூடுதல் வசதிகள் தேவை. ஆனால், அது ஒருபோதும் அவர்களைத் தனிமைப்படுத்துவதாக இருக்கக் கூடாது” என்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் முன்வைத்திருக்கும் கருத்து முக்கியமானது!

இல.கண்ணன், நங்கவள்ளி.
கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் அ.தி.மு.க-வில் பதவி தேடிவரும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?
பொதுச்செயலாளர் பதவியுமா?
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!