அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

விஜய், ஷாலினி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய், ஷாலினி

ஒரு வளரும் நடிகர் எந்தக் கதைக்களத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்-3.

நடிகர் விஜய் தன்னை ஆரம்பகாலத்தில் அடையாளம் காண்பித்த காதல் கதைகளின் பக்கமே செல்வதில்லையே ஏன்?

ஒரு வளரும் நடிகர் எந்தக் கதைக்களத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் சூப்பர் ஸ்டாரான பிறகு, அவரது சம்பளமும் படத்தின் வியாபாரமும் வேறு உயரத்துக்குப் போன பிறகு, அவர் எந்தக் கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பெரும்பாலும் அவர் முடிவுசெய்ய முடியாது. மார்க்கெட்தான் முடிவுசெய்யும்.

கழுகார் பதில்கள்

தே.மாதவன், கோயம்புத்தூர்-45.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ரஜினி குரல் கொடுப்பாரா?

மறுபடியும் முதல்லருந்தா?!

வைகை சுரேஷ், தேனி.

ஜெயலலிதா அவர்கள் மறைந்த தினம் டிசம்பர் நான்கா... டிசம்பர் ஐந்தா கழுகாரே?

சசிகலா தலைமையில் அன்றிருந்த அ.தி.மு.க சொன்ன தேதி டிசம்பர் ஐந்து. ஆறுமுகசாமி ஆணையம் முன்வைத்த தேதி டிசம்பர் நான்கு. நீங்கள் எந்தத் தேதியை நம்புகிறீர்கள்?

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அரசியலில் சில நேரங்களில் பொய்கூட உண்மையாகிவிடுகிறதே?

சில நேரங்களில் மட்டும்தானா?

வாசுதேவன், பெங்களூரு.

ஒரு மாஸ் திரைப்படத்துக்கும், யதார்த்தத் திரைப்படத்துக்கும் என்ன வித்தியாசம்?

ஒருமுறை இயக்குநர் லிங்குசாமி இப்படியொரு விளக்கம் கொடுத்தார்: ‘மகாநதி’ படத்தின் இறுதிக் காட்சியில் கதாநாயகனான கமல், தன் மகளைச் சீரழித்த வில்லனைப் பழிவாங்கத் துரத்துவார். இருவரும் ஒரு இரும்புச் சங்கிலியால் தாக்கிக் கொள்வார்கள். அப்போது ஓர் உயரமான கட்டடத்தின் மேலிருந்து தவறி விழுவான் வில்லன். கமல் - வில்லன் இருவரின் கைகளையும் சங்கிலி பிணைத்திருக்கும். போலீஸ் வேறு அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது வேறு வழியின்றி, தனது கையை வெட்டிக்கொண்டு தொங்கும் வில்லனை மேலிருந்து கீழே விழச்செய்து கொல்வார் கமல். இது யதார்த்தப் படத்தின் காட்சியமைப்பு. இதுவே ஒரு மாஸ் படமாக இருந்தால், சங்கிலியை ஒரே இழுப்பில் சுலபமாக இழுத்துத் தூக்கி, வில்லனின் கையை ஸ்டைலாக வெட்டுவார் ஹீரோ!

கழுகார் பதில்கள்

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

‘வேறு தேசியச் சின்னமே இல்லையா... ஜி20 சின்னத்திலிருக்கும் தாமரையை மாற்றுங்கள்’ என்று மம்தா பானர்ஜி கூறியிருக்கிறாரே?

சரிதானே... அப்பட்டமான பா.ஜ.க விளம்பரமாக இருக்கிறது ஜி20 லோகோ. ஜி என்றதும் மோடி ஜி, அமித் ஷா ஜி, ஜே.பி.நட்டா ஜி உட்பட 20 ஜி-க்கள் பங்கேற்கும் மாநாடு என்று நினைத்துவிட்டார்கள்போல லோகோ டிசைன் செய்தவர்கள். கொடுமை!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

`பா.ஜ.க-வுடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று திருச்சி சூர்யா கூறியிருக்கிறாரே?

பிறகு ஏன் இன்னும் அவரது வாட்ஸ்அப் புரொஃபைல் பிக்சரில் அண்ணாமலையின் படத்தையும், about குறிப்பில் ‘அண்ணாமலையார் வழியில்’ என்ற வாசகத்தையும், அதன் அருகில் காவி ஹார்ட்டினையும் வைத்திருக்கிறாராம்?

கழுகார் பதில்கள்

ஆனந்த், நெல்லை.

ராஜஸ்தானில் ஒற்றுமை நடைப்பயணத்தின்போது, பா.ஜ.க-வினருக்கு ராகுல் காந்தி முத்தம் கொடுத்திருக்கிறாரே?

பறக்கும் முத்தம்தானே கொடுத்திருக்கிறார், தப்பில்லை. மேலும் அரசியல், கருத்தியல் எதிரிகளுக்கு ஸ்நேக முத்தம் கொடுப்பது நாகரிகமான, அழகான விஷயம்தான்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!