அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

டி.ஜி.பி சைலேந்திரபாபு
பிரீமியம் ஸ்டோரி
News
டி.ஜி.பி சைலேந்திரபாபு

மக்கள் தாங்கள் செய்கிற தவறுகள் விளையாட்டாக, ஃபன்னாக சினிமாவில் காட்டப்படும்போது ரொம்பவே சந்தோஷப்படுகிறார்கள்.

மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை.

இளையராஜாவின் பாதங்கள் பாதை மாறிச் சென்றுவிட்டதுபோல் தோன்றுகிறதே?

‘பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது... தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது’ இளையராஜாவின் இசையில் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகள் அவ்வளவு பொருள் நிறைந்ததாக இருக்கும். கேளுங்கள். பயணங்கள் முடிவதில்லை பாஸ்!

கழுகார் பதில்கள்!

அன்னூரார் பொன்விழி, அன்னூர்.

தற்போது தமிழகத் திரையுலகக் கதாநாயகர்களில் தமிழக முதல்வராகும் ஆசையில் இருப்பவர் யார்?

அந்த ஆசையில் இல்லாதவர்கள் யார் என்று கேட்டால், மூச்சுவாங்காமல் பதில் எழுதலாம்!

திலகர் ஈஸ்வரன், சேலம்.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி எனத் தனியாக ஒன்று தர வேண்டுமா என்ன?

கட்சி சீனியர்களின் மனக்குமுறலை இவ்வளவு சரியாகக் கேள்வியாகக் கேட்கிறீர்களே... யார் பாஸ் நீங்க?

தே.மாதவராஜ், கோயம்புத்தூர்.

அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்துவைப்பது எதற்காக?

அவைதான் வரதட்சணை கேட்பதில்லை; சாதி மதம் பார்ப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகச் சண்டை சச்சரவுகள் இல்லாமல், டைவர்ஸ் கேட்காமல் சமர்த்துகளாய் வாழ்கின்றன. அதனால் இருக்குமோ?!

சுப்புத்தாய், விருதுநகர்.

பொருளாதார மேதைகளிடம் சமூகப் பார்வை இருக்க வாய்ப்பு உண்டா?

சமூகப் பார்வை இல்லையென்றால், அவர் என்ன பொருளாதார மேதை?

டி.ஜி.பி சைலேந்திரபாபு
டி.ஜி.பி சைலேந்திரபாபு

இல.கண்ணன், நங்கவள்ளி.

தமிழகத்தில் 15 சதவிகிதம் குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு சொல்கிறாரே?

அவர் நாளிதழ்களை, பத்திரிகைகளை, செய்தி சேனல்களைப் பார்ப்பதில்லைபோல!

கமலா, மதுரை.

‘மாமா குட்டி...’ இந்த டயலாக் பட்டிதொட்டியெங்கும் ஓங்கி ஒலிக்கிறதே... அது பற்றி..?

மக்கள் தாங்கள் செய்கிற தவறுகள் விளையாட்டாக, ஃபன்னாக சினிமாவில் காட்டப்படும்போது ரொம்பவே சந்தோஷப்படுகிறார்கள். ‘ஓ... எல்லோரும் நம்மைப்போல்தான் வாழ்கிறார்களா?’ என்று தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ளும் உளவியல் இருக்கிறது அதில். ‘லவ் டுடே’ படத்தில் இடம்பெறும் அந்தக் காட்சியும், வசனமும் நம் கவனம் ஈர்க்க அதுதான் காரணம். மேலும் மாமா குட்டி, பேபி குட்டியெல்லாம் சாதாரணம். இதையெல்லாம் தாண்டி நம் ஆட்கள் மொபைலில் நம்பர்களைச் சேமிக்கும் விபரீதமான பெயர்களையும் வார்த்தைகளையும் இங்கே விவரிக்க முடியாது!

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘2014 முதல் பசியால் ஒருவரும் உயிரிழக்கவில்லை’ என்ற ஸ்மிருதி இரானி பேச்சு?

ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவாது!

நாகமணி, கும்பகோணம்.

ஜெயலலிதா நினைவுநாளில் அவரது டூயட் பாடல்களை ஒலிக்கச் செய்து அ.தி.மு.க தொண்டர்கள் அமர்க்களப்படுத்திவிட்டார்களே?

கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளரே ‘நம் அம்மா மறைந்திட்ட இந்த நன்னாளில்’ என்று அறிக்கை வாசித்தால், அப்பாவித் தொண்டர்கள் மட்டும் என்ன செய்வார்கள்?

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

கலைஞருக்கு மனசாட்சி முரசொலி மாறன். மு.க.ஸ்டாலினின் மனசாட்சி?

அப்படி ஒருவர் இருந்தால்தான், அவர் நிம்மதியாகத் தூங்குவாரே!

வள்ளியம்மை, கடலூர்.

அ.தி.மு.க-வினருக்குப் பிடித்த ஊர் சேலமா... தேனியா?

ஏன்... “கோவையோ, விழுப்புரமோ, திண்டுக்கல்லோ, கிருஷ்ணகிரியோ பிடித்த ஊராக இருக்கக் கூடாதா?” என்று ஆதங்கத்தோடு கேட்கிறார்கள் பின்னால் வரிசையில் நிற்பவர்கள்.

தாமரைச்செல்வி, பாளையங்கோட்டை.

இரட்டை இலை முடக்கப்பட்டால் யாருக்கு லாபம்?

முடக்க நினைப்பவர்களுக்கு!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!