அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

`பா.ஜ.க’-வை வம்புக்கு இழுப்பதே ஜெயக்குமாருக்கு வேலையாகிப்போய்விட்டது!

ம.தமிழரசி, திருப்பூர்.

ஜெயலலிதாவுடன் இருந்த வரையில் சசிகலாவுக்கு நல்ல மரியாதையை அ.தி.மு.க-வினர் தந்தார்கள். ஆனால் இப்போது அவரைக் கடுமையாக விமர்சித்துப் பேசுகிறார்களே..?

‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது... கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே. கருடன் சொன்னது... அதில் அர்த்தம் உள்ளது!’ - கவிஞர் கண்ணதாசன் தமிழ்நாட்டு அரசியலிலும் இருந்ததால், உங்கள் கேள்விக்கான பதிலை அவ்வளவு ஷார்ப்பாக முன்பே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்!

கழுகார் பதில்கள்

வாசுதேவன், பெங்களூரு.

சென்னை புத்தகக் காட்சியில் எத்தனை புத்தகங்கள் வாங்கினீர்கள்?

20,000 புத்தகங்கள் வாங்கலாம் என்றுதான் கிளம்பிச் சென்றேன். ‘சரி... நாம் என்ன கம்ப ராமாயணம் எழுதிய சேக்கிழாரா?’ என்று சுயவிமர்சனம் செய்தபடி, 234 புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். அவற்றில் ஒன்று, ஆன்மிகக் கருத்து நீக்கம் செய்யப்பட்ட திருக்குறள் உரை.

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

“ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால், தமிழ்நாட்டில் நாங்கள்தான் வெற்றிபெறுவோம்” என்கிறார்களே அ.தி.மு.க-வினர்?

ஒரே நாடு ஒரே தேர்தல்லாம் இருக்கட்டும்... முதல்ல ஒரே கட்சியா நில்லுங்க பாஸ்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

ஏழு அதிசயங்களில் கழுகாருக்குப் பிடித்தது எது?

ஏழு அதிசயங்களுக்கும் ஆதாரமாக அதன் பின்னாலிருக்கும் மனித உழைப்பு.

கழுகார் பதில்கள்

``ஓ.பி.எஸ்-ஸுக்கு `நோட்டா’வைவிடக் குறைந்த வாக்குகளே கிடைக்கும்’’ என்ற ஜெயக்குமாரின் கருத்து?

`பா.ஜ.க’-வை வம்புக்கு இழுப்பதே ஜெயக்குமாருக்கு வேலையாகிப்போய்விட்டது!

தே.மாதவன், கோயம்புத்தூர்.

“குறித்து வைத்துக்கொள்ளுங்கள்... 2047-ல் இந்தியா வல்லரசாக மாறும்” என்று எல்.முருகன் எதைவைத்துச் சொல்கிறார்?

நிச்சயம் அவர் சொல்வதை நாம் மறந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தான்.

கி.சீனிவாசன், சிவகங்கை.

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு கழுகார் சொல்ல விரும்புவது?

உஷாரம்மா... உஷாரு... உஷாரய்யா... உஷாரு!

சுப்புத்தாய் பலவேசம், பாளையங்கோட்டை.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படி?

இப்போதானே கிரவுண்டில் இறங்கியிருக்கிறார். கொஞ்சம் டைம் கொடுப்போம்.

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

கேரள ஆளுநர், மாநில அரசின் உரையை அட்சரம் பிசகாமல் வாசித்திருக்கிறாரே... இதனால் அறியப்படும் நீதி?

அடி மேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்!

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

மனிதன் எப்போது ‘மாமனிதன்’ ஆகிறான்..?

சாதாரண மனிதர்களால் செய்ய முடியாததைச் செய்யும்போது.

பெ.பச்சையப்பன், கம்பம்.

ஈரோடு இடைத்தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டால், வாகை சூட வாய்ப்பிருக்கிறதா கழுகாரே?

வாகை மலர் கிடைத்தால், வாங்கிச் சூடிக்கொள்ள வேண்டியதுதானே... யார் தடுக்கப்போகிறார்கள்?

திலகர் ஈஸ்வரன், சேலம்.

தி.மு.க கூட்டணிப் பக்கம் கமலும் வந்துவிட்டாரே?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

கழுகார் பதில்கள்

V.பாலசுப்ரமணியன், காளவாய்க்கரை, மன்னார்குடி.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குவதில்கூட சாதியப் பாகுபாடு இருப்பதைப் பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறதே?

இந்தியாவைப் பொறுத்தவரை எதில்தான் சாதி இல்லை... இது காலங்காலமாக நடந்துவரும் அவலம்தான். 1959-ல் வெளிவந்த சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவல் வாசித்திருக்கிறீர்களா?

ப.த.தங்கவேலு, பண்ருட்டி-6

சமீபத்திய அரசியல் காமெடி ஏதாவது உண்டா?

அப்படியே, அடுத்த பக்கத்தைப் புரட்டுங்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!