Published:Updated:

கழுகார் பதில்கள்

லதா மங்கேஷ்கர்
பிரீமியம் ஸ்டோரி
லதா மங்கேஷ்கர்

காந்தியின் ‘சத்திய சோதனை’ படியுங்களேன். உங்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்!

கழுகார் பதில்கள்

காந்தியின் ‘சத்திய சோதனை’ படியுங்களேன். உங்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்!

Published:Updated:
லதா மங்கேஷ்கர்
பிரீமியம் ஸ்டோரி
லதா மங்கேஷ்கர்

மு.நடராஜன், திருப்பூர்.

லதா மங்கேஷ்கர்?

சிறுவயது முதலே சங்கீதம் கற்றுக்கொண்ட லதா, ரெகார்டிங் ஸ்டூடியோவில் நின்று தன் முதல் பாடலைப் பாடியபோது அவரின் வயது 13. பொதுவாக இந்திப் பாடகர்களுக்கு இரட்டைக்கிளவிகளை உச்சரிப்பதில் சற்று சிரமமிருக்கும். `சத்யா’ படத்தின் ‘வளையோசை கலகலவென’ பாடலில் `கலகல, குளுகுளு, சிலுசிலு, படபட’ என்று அள்ளித்தெளிக்கப்பட்டிருக்கும் இரட்டைக்கிளவிகளைத் தெள்ளத் தெளிவாகப் பாடியிருப்பார் லதா. ஆரம்பகாலங்களில் ‘மிகவும் மெலிதான குரலாக இருக்கிறது’ என்று சில தயாரிப்பாளர்களால் புறந்தள்ளப்பட்ட அவர்தான், பின்னர், ‘இந்தியாவின் மெலடி குயின்’ என்று அழைக்கப்பட்டார்! அவருக்கு நம் அஞ்சலிகள்!

கழுகார் பதில்கள்

மாணிக்கம், திருப்பூர்.

“அ.தி.மு.க விரைவில் என் கைக்கு வரும்” என்று சசிகலா கூறியிருக்கிறாரே?

அப்படி வாரத்துக்கு ஒரு முறை அவர் சொல்லாமல் இருந்தால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

ஆசிரியரின் சாக்பீஸ்... பத்திரிகையாளரின் பேனா... ஆள்பவர்கள் பேசும் வார்த்தைகள்... எது வலிமை?

என்ன பாஸ்... இதுலயும் குரூப்புல டூப்பா?

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

சுயசரிதை என்றாலே, அறிந்தோ அறியாமலோ செய்த குறைகளை மறைத்து அல்லது மழுப்பி நிறைகளை மிகைப்படுத்தியே எழுதப்படுவதேன்?

காந்தியின் ‘சத்திய சோதனை’ படியுங்களேன். உங்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்!

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

கூட்டணியிலிருந்து பா.ஜ.க-வை அ.தி.மு.க விரட்டியதா அல்லது பா.ஜ.க-வே விலகியதா?

கொஞ்சம் விரட்டி... கொஞ்சம் விலகி என ‘அரசியல் சாதுர்யத்துடன்’ தாமரை - இலைத் தண்ணீர்போல 2024 வரை ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கலாம் என இரு தரப்பிலுமே முடிவுசெய்திருக்கிறார்கள்!

கழுகார் பதில்கள்

கே.விஸ்வநாதன், கோயமுத்தூர்.

மேயர், மாநகராட்சி, பஞ்சாயத்துத் தேர்தலில்களில்கூட அ.ம.மு.க., தே.மு.தி.க-வினரிடமிருந்து சத்தம் குறைவாகவே இருக்கிறதே?

இரண்டு கட்சித் தலைமை அலுவலகங்களிலும் ‘போனால் போகட்டும் போடா...’ என்கிற பாடல் சத்தமாகக் கேட்கிறதாம்!

வினோதினி.பா, சூளைமேடு

கொரோனாவை மக்கள் மறந்துவிட்டார்கள்தானே?

ஆனால், கொரோனா மக்களை மறக்கவில்லை என்பதை மட்டுமாவது நினைவில்கொண்டால் சரி!

பொன்விழி, அன்னூர்.

இசைஞானி இளையராஜாவின் இசை விண்வெளி வரை செல்லவிருக்கிறதே... இன்னும் மத்திய அரசு அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது தரவில்லையே...

மொத்த இந்தியத் திரைத்துறையாலும் ‘இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்’ என்று புகழப்பட்டவர் நடிகர் நாகேஷ். ஐம்பது வருடங்கள் தமிழ்த் திரைத்துறையில் பல்வேறு வேடங்களில் ஆயிரம் படத்துக்கு மேல் நடித்த அவருக்கு ஒரு விருதும் தரப்படவில்லையே... சிலரின் புகழை, திறமையை விருதுகள் தீர்மானிப்பதில்லை!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

தனித்துப் போட்டியிட்டுத் தங்களின் பலத்தைக் காட்டிட சில அரசியல் கட்சிகள் முன்வராதது ஏன்?

அவர்களுக்குத் தங்கள் பலம் தெரிந்திருப்பதால்தான்!

தியாகராஜன், வல்லக்கோட்டை.

தமிழ்நாட்டை கர்நாடக நெட்டிசன்கள் பாராட்டுகிறார்களாமே?

ஆமாம்! “பசுக்கள் பாதுகாப்பு, ஹிஜாப் பிரச்னை, கோயில், மதம் என்று ஆபத்துக்குரிய பரபரப்போடு இருக்கிறது கர்நாடகா. இந்தச் சமயத்தில், தமிழகத்தைப் பாருங்கள்... நீட் விலக்கு, கல்விக் கொள்கை, சாலை மேம்பாடு, சமூகநீதி, மாநில உரிமைகள் என எவ்வளவு ஆக்கபூர்வமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!” என்று நெட்டிசன் ஒருவர் சொன்னதை வழிமொழிந்து ஏராளமானோர் தமிழகத்தைப் பாராட்டுகிறார்கள்!

குணசீலன், நாட்டரசன்கோட்டை.

சீமான், தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பது எதனால்?

தன்னைப் பலரும் ஆதர்சமாக நினைக்கிறார்கள், தான் சொல்வதை நம்பிக் கேட்கிறார்கள் என்பதை அறிந்தும்... சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு, மிகையாகவும் பொறுப்பற்றும் பேசுவதால்தான். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் “தடுப்பூசி நான் போடவில்லை. போட்டுக்கொள்ளப்போவதுமில்லை” என்று பேசியிருக்கிறார் சீமான். மருத்துவரீதியாக உலகமே முன்மொழியும் ஒரு தீர்வை, போகிற போக்கில் அலட்சியம் செய்வதன் வழியே பலரது உயிரோடு விளையாடுகிறார். பிறகு விமர்சனம் செய்யாமல்..?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism