Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

அரசியல்வாதிகளில் சிலர் தவறு செய்தாலும், ஒட்டுமொத்த அரசியலையே குறை கூறுவதுபோலத்தான் இதுவும்.

கழுகார் பதில்கள்

அரசியல்வாதிகளில் சிலர் தவறு செய்தாலும், ஒட்டுமொத்த அரசியலையே குறை கூறுவதுபோலத்தான் இதுவும்.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பணத்தை வாங்கிக்கொண்டு சிலர்தான் ஓட்டுப்போடுகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த மக்களையும் குறை கூறுவது நியாயமா?

அரசியல்வாதிகளில் சிலர் தவறு செய்தாலும், ஒட்டுமொத்த அரசியலையே குறை கூறுவதுபோலத்தான் இதுவும். மேலும், பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் அந்தச் சிலர், பெருகி... பலர் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம்!

சுகன்யா, சென்னை-110.

ஒருவேளை அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை இல்லாமல், ஒற்றைத் தலைமை இருந்திருந்தால் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்திருக்குமா?

தலைமையின் எண்ணிக்கையில் இல்லை பிரச்னை! அந்தத் தலைமையின்மீது அபிமானம் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கைதான் பிரச்னை!

மணிவண்ணன், சூலூர்.

கொரோனா கட்டுப்பாடுகள் அரசியல்வாதி களுக்கும் பொருந்தும்தானே?

ஒரு சமீபத்திய நிகழ்வைச் சொல்கிறேன்... நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில், ஒமைக்ரான் பரவல் அதிகமானதைத் தொடர்ந்து, கடும் கட்டுப்பாடுகளை விதித்தார் அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா. இந்நிலையில், தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் கொரோனா, ஒமைக்ரான் பரவல் குறித்துப் பேசிய பிரதமர் ஜெசிந்தா, மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும் என்று தனக்கும், தன் காதலர் கிளார்க் கேபோர்ட்டுக்கும் விரைவில் நடக்கத் திட்டமிட்டிருந்த திருமணத்தையும் தள்ளிவைப்பதாகத் தெரிவித்தார். ‘ஒட்டுமொத்த தேசமும் ஒன்றிணைந்து போராடி, கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைத்த பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார் அவர்!

மஞ்சுவாசுதேவன், பெங்களூரு.

கிரிக்கெட் விளையாட்டு கற்றுக்கொடுக்கும் பாடம்?

உங்களால் இவ்வளவுதான் முடியும் என்று நினைத்து, உங்களை காலிசெய்ய சுற்றிலும் நின்றுகொண்டிருப்பவர்களின் தலைக்கு மேலே, எல்லையைத் தாண்டி உங்கள் பந்தை அடிக்க வேண்டும்!

விஜயகுமார், டாடாபாத், கோவை.

“ஜெயிச்சா கட்சி மாற மாட்டோம்” என்று சாமி சத்தியமெல்லாம் வாங்கறாங்களே?

இதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் கண்ணுல வந்துபோகுமால்லியா?!

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

அ.தி.மு.க - பா.ஜ.க உறவு எந்த அளவில் இருக்கிறது?

“சட்டமன்றத்தில் ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அ.தி.மு.க-வை நான் பார்க்கவில்லை” என்று பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் சொல்ல, அதற்குக் கட்சித் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கிற அளவில் இருக்கிறது!

கழுகார் பதில்கள்

மாணிக்கம், திருப்பூர்.

“யோகியும் மோடியும் இருந்தால், கொரோனாவே பயப்படும்” என்று திருவாய் மலர்ந்திருக்கிறாரே யோகி ஆதித்யநாத்?

உத்தரப்பிரதேசத்தில், கொரோனா இரண்டாம் அலை வந்த சமயத்தில், அதீத ஆக்சிஜன் பற்றாக் குறையும், மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் மருத்துவமனை வாசலிலேயே பலர் உயிரிழந்த சம்பவமும் தொடர்ந்து செய்திகளில் வந்துகொண்டே இருந்ததே... கங்கையில் பிணங்கள் மிதந்துவந்ததும், கங்கைக்கரையில் வரிசையாகப் பிணங்கள் புதைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும் உலக அளவில் வெளியாகி சந்தி சிரித்ததெல்லாம் நடந்ததே! என்னமோ போங்க... `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ன்னு கடந்துபோக வேண்டியதுதான்!

கழுகார் பதில்கள்

ஜீவன், காரைக்கால்.

கவிதையால் கோபப்பட முடியுமா?

‘ஆரியபட்டா

வானத்தைக் கிழித்தது

அணுகுண்டுச் சோதனை

பூமியைக் கிழித்தது

அரைக்கைச் சட்டை

கிழிந்தது மட்டுமே

மனதில்

நிற்கிறது

பிள்ளை

வேண்டாமென்று

கருப்பையைக்

கிழித்தார்கள்

உணவு எதற்கென்று

இனி

இரைப்பையையும்

கிழிப்பார்கள்

எல்லாம் கிழிந்த

எங்கள் தேசத்தில்

வாய் கிழிவது மட்டும்

வகை வகையாய்

இருக்கும்.’

- கந்தர்வன்

அதிகாரத்துக்கு எதிராக அநேகமுறை கோபப்பட்ட வரலாறு கவிதைக்கு உண்டு!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism