Published:Updated:

கழுகார் பதில்கள்

இ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
இ.பி.எஸ்

இது தெரியாம ஏகப்பட்ட ஏக்கர்களை வாங்கிப்போட்டிருக்கேனே!

கழுகார் பதில்கள்

இது தெரியாம ஏகப்பட்ட ஏக்கர்களை வாங்கிப்போட்டிருக்கேனே!

Published:Updated:
இ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
இ.பி.எஸ்

சுகன்யா, சென்னை-110.

“அ.தி.மு.க-வை வீழ்த்தும் ஆற்றல் எந்தக் கட்சிக்கும் இல்லை” என்ற இ.பி.எஸ் பேச்சு..?

“அதை நாங்களே பார்த்துக்குவோம்னு சொல்றாரோ?”னு அவங்க கட்சி வட்டாரத்துலேயே கலாய்க்கிறாங்க!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சினிமாவில் ஹீரோவாக பட வாய்ப்புகள் குறையும்போது வில்லன், காமெடி பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அரசியலில் பதவிக்கான வாய்ப்பு குறையும்போது இப்படி மாறுவார்களா?

அரசியலில்தான் பதவியில் இருக்கும்போதே காமெடியனாகவும், சில விஷயங்களில் மக்களுக்கு வில்லனாகவும் பல அரசியல்வாதிகள் இருக்கிறார்களே!

மு.மதனகோபால், ஓசூர்.

தேர்தலில் யார் நியாயப்படி நடந்துகொள்கிறார்கள்?

உங்கள் கேள்விதான் பதிலுமே!

மாணிக்கம், திருப்பூர்.

‘உயிர்கள் வாழத் தகுதியற்றதாக பூமி மாறிக்கொண்டிருக்கிறது’ என்று விஞ்ஞானிகள் கூறியதைக் கேட்டவுடன், நம் அரசியல்வாதிகளின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

ஆத்தி... இது தெரியாம ஏகப்பட்ட ஏக்கர்களை வாங்கிப்போட்டிருக்கேனே!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

இந்த உள்ளாட்சித் தேர்தலில், கமலின் டார்ச்லைட் ஒளி வீசுமா?

பேட்டரியிலிருக்கும் சார்ஜைப் பொறுத்து!

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர்.

ஒரு எம்.பி அல்லது எம்.எல்.ஏ., ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவுகிறார் என்றால், அவருக்குத் துணிச்சல் பிறந்துவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா..?

எதற்கான துணிச்சல்னு நீங்க சொல்லவே இல்லியே?!

அருண்குமார், குன்னூர்.

‘அப்டேட்’டாக இருப்பது எவ்வளவு முக்கியம்?

இல்லையென்றால், உங்களுக்கான இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டேயிருக்கும். பீகாரின் ‘பெட்டியா’ ரயில் நிலையத்தில், கழுத்தில் க்யூ ஆர் கோடு அட்டையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் ராஜூ படேல் என்ற ஒருவர். டெக்னாலஜி முன்னேற முன்னேற நாமளும் அப்டேட் பண்ணிக்கணும் பாஸ்!

சண்முகம், திருப்பத்தூர்.

வீட்ல மனைவி சொல்றதைக் கேட்கலைன்னா என்ன ஆகும்?

ஜான் - லிண்டா என நியூஸிலாந்தில் ஒரு தம்பதியர். மனைவி சொல்லைக் கேட்காமல், ஒருநாள் ஜாலியாக வெளியே போய்விட்டார் ஜான். கோபத்தில் அவரின் மனைவி லிண்டா, ‘கணவன் விற்பனைக்கு’ என்று இணையதளம் ஒன்றில் விளம்பரம் கொடுத்துவிட்டார். அந்த இணையதளத்தின் அட்மின், அதை கவனித்து அந்த விளம்பரத்தை நீக்குவதற்குள், அவரை வாங்குவதற்கு 12 பேர் விருப்பம் தெரிவித்திருந்தார்களாம். இதில், சோகம் என்னவென்றால், அவருக்கு அதிகபட்ச விலையாக வந்தது, இந்திய மதிப்பில் 7,400 ரூபாய்தான். ‘என் மதிப்பு இவ்ளோதானா?’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் ஜான். பார்த்து கவனமா இருங்க சண்முகம்!

லட்சுமி, கேளம்பாக்கம்.

ஜூ.வி-யில் ஜோக் போடலாமே?

“யோகி ஆதித்யநாத்தின் ஆட்சிக்காலத்தில், குற்றவாளிகள் தாங்களாகச் சிறைகளுக்குள் ஓடிச் சென்று தங்களை அடைத்துவைக்குமாறு கேட்டுக்கொண்டனர்” என்று உ.பி தேர்தல் பிரசாரத்தில், மோடி பேசியிருக்கிறாரே அந்த மாதிரி ஜோக்குகளா?

கழுகார் பதில்கள்

சுபகா, நெல்லை.

ஒரு சமூகத்தில் கவிஞனின் வேலைதான் என்ன?

‘வெகு காலத்துக்கு முன்பே

நமது இசை

நமது வயல்களுக்குள்

நுழைந்த

நெடுஞ்சாலையில்

அடிபட்டு நசுங்கிப்போனது.

கரும்பாறைகளின்

சதைகளில் பிய்ந்த

கிரானைட்

மார்பிள்களின் அடியில்

மலைகளைப் புதைத்தார்கள்.

அழிந்தது அழிகிறது

கடந்தது கடக்கிறது

காலம் ஒரு

பட்டுப்போர்வையை

எடுத்து

எல்லாவற்றையும்

அழகாக மூடிவிடுகிறது.’

- சமயவேல்

ஒரு சமூகத்துக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவூட்டுவதுதான் கவிஞனின் வேலை!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!