Published:Updated:

கழுகார் பதில்கள்

எடப்பாடி பழனிசாமி, தங்கம் தென்னரசு
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, தங்கம் தென்னரசு

வார இறுதி நாட்களில்தான் புத்தக விற்பனை சூடுபிடித்திருக்கிறது என்கிறார்கள் பதிப்பாளர்கள்.

கழுகார் பதில்கள்

வார இறுதி நாட்களில்தான் புத்தக விற்பனை சூடுபிடித்திருக்கிறது என்கிறார்கள் பதிப்பாளர்கள்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, தங்கம் தென்னரசு
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, தங்கம் தென்னரசு

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

அரசியல்வாதிகள் காலத்துக்கேற்றவாறு தங்கள் பார்வையை மாற்றிக்கொள்வதுபோல, மக்களும் தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்கிறார்களா?

“அடடா... காலம் மாறிவிட்டது. நம் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும்!” என்ற எண்ணத்தை அரசியல்வாதிகளுக்குத் தருவதே மக்கள்தானே!

மாணிக்கம், திருப்பூர்.

‘நீங்கள் என்னை வெற்றிபெறவைத்தால், நமது வார்டில் வெப்பநிலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்று சென்னை 150-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் வேட்பாளர் வாக்குறுதி கொடுத்திருக்கிறாரே... இதெல்லாம் சாத்தியமா?

இப்படிப் பல செய்திகளை வாட்ஸ்அப்பில் கிண்டலுக்காகப் பரப்புகிறார்கள். “மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தேவையான மரங்களை நட்டு, வெப்பநிலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்றுதானே சொல்லியிருக்கிறார். சாத்தியம்தானே... ஒரு கவுன்சிலர் வேட்பாளர் தன்னளவில் அப்படிச் சிந்திப்பதே நல்ல விஷயம்தானே மாணிக்கம்!

பெ.பச்சையப்பன், கம்பம்.

சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி சென்று வந்தீர்களா..?

வார இறுதி நாட்களில்தான் புத்தக விற்பனை சூடுபிடித்திருக்கிறது என்கிறார்கள் பதிப்பாளர்கள். கொரோனாவால் இன்னும் சீராகாத நிதி நிலைமையிலும் புத்தகம் வாங்க ஆர்வம் காட்டும் மக்களைப் பாராட்டியே ஆக வேண்டும். கடற்கரை விசிட் போல ஆங்காங்கே மக்கள் வாங்கிய புத்தகங்களைப் பக்கத்தில் வைத்தபடி, குடும்பத்தோடு சுண்டலும் காபியுமாக மகிழ்ந்திருப்பது அற்புதமான காட்சி. சினிமா ஆளுமைகளை மட்டுமே கொண்டாடுகிற சமூகம் என்கிற விமர்சனத்தை உடைத்து, எழுத்தாளர்கள் கவிஞர்களோடு செல்ஃபி, ஆட்டோகிராப் என இளைஞர்கள் கொண்டாடுவது நம்பிக்கையளிக்கிறது. வாங்கிய புத்தகங்களின் பட்டியலைச் சமூக ஊடகங்களில் பகிர்வதோடு நின்றுவிடாமல், அவற்றை வாசித்து உரையாடுவதும் விவாதிப்பதும் தமிழ்ச் சமூகத்துக்கு நல்லது!

சண்முகம், தூத்துக்குடி.

தேர்தலில் போட்டியிடுபவர்கள் நாமினேஷனுக்கு முன்பிருந்தே, தங்களுக்கு எதிராக நிற்கும் வேட்பாளர் குறித்து ஆர்வம் காட்டுகிறார்களே..?

`எதிரிகளை முழுமுற்றுமாக அறிந்துகொள்வது பாதிப் போரில் வென்றதற்குச் சமம்’ என்றொரு பழமொழி இருக்கிறதே. அதுதான் காரணம்!

கழுகார் பதில்கள்

ப. திருக்காமேஷ்வரன், புதுச்சேரி.

“கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் எனக் காத்திருந்து, குடல் வற்றிச் செத்துப்போன கொக்கின் நிலைதான் எடப்பாடி பழனிசாமி”க்கு என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதைக் கேட்டதும் என்ன எண்ணினீர்கள்?

நாட்டில் ஆயிரத்தியெட்டு பிரச்னை இருந்தாலும், ரைமிங், டைமிங் பழமொழிகளுக்கு மட்டும் பஞ்சமில்லை என்ற எண்ணம் வந்தது!

சௌந்தர், அரியலூர்.

மக்கள்மீது அரசியல்வாதிகளுக்கு எப்போது அக்கறை வரும்?

நாளுக்கொரு ரூபாய் பொழுதுக்கொரு பைசா என்று ஏறிக்கொண்டிருந்த பெட்ரோல் விலை, 100 நாள்களுக்கும் மேலாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் இருக்கிறதே கவனித்தீர்களா? ஐந்து மாநிலங்களில் நடக்கும் தேர்தல்தான் இதற்குக் காரணம் என்று சொல்லி அரசியல்வாதிகளின் ‘மக்கள் மீதான அக்கறையை’ குறைசொல்ல விரும்பவில்லை!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சென்னையில் வாக்குப்பதிவு சரிந்துள்ளதே..?

அரசும், தேர்தல் ஆணையமும் சந்தித்திருக்கும் தோல்வி இது. அதேசமயம், மக்களும் தங்கள் உரிமையை, கடமையை அலட்சியப்படுத்தக் கூடாது!

சுந்தரம், குன்னத்தூர்.

கவிதையில் கதை சொல்ல முடியுமா?

‘சற்று முன்

இறந்தவனின்

சட்டைப்பையில்,

செல்போன்

ஒலித்துக்கொண்டேயிருந்தது.

கையில் எடுத்த

காவலர்

“சார்... யாரோ அம்முன்னு கால் பண்றாங்க”

என்கிறார்.

ஒரு நொடி

இறந்தவனின் கண்கள்

திறந்து

மூடுகின்றன.

- வே.பாபு

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!