சுகுமாரன், திண்டுக்கல்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வைரங்கள் மற்றும் நவரத்தின ஆபரணக் கற்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது?
வேறென்ன, இது யாருக்கான பட்ஜெட் எனத் தெளிவாகத் தெரிகிறது. 2019-ல் நாடெங்கும் வெங்காய விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருந்தபோது, நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனிடம் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், “நான் வெங்காயம், பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை” என்று ‘மிகப் பொறுப்பான’ பதில் ஒன்றைச் சொன்னார். வைரங்களுக்கான இறக்குமதி வரி குறித்தும் ‘அற்புதமாக’ ஏதேனும் விளக்கம் சொல்வார். காத்திருப்போம்!
பெ.பச்சையப்பன், கம்பம்.
தி.மு.க., அ.தி.மு.க இந்த இரு கட்சிகளில் கூட்டணி தர்மத்தைப் பின்பற்றும் கட்சி எது..?
தர்மமா... இந்தக் கால அரசியலிலா... போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு!
சந்திரகுமார், கிருஷ்ணகிரி.
பழமொழி சொல்லி நாளாச்சே கழுகாரே?
ஒரு துருக்கிய பழமொழி… “ஒரு கோமாளி அரண்மனைக்குள் நுழைந்தால், அவன் ராஜாவாக மாட்டான். அதற்கு பதிலாக அந்த அரண்மனையையே சர்க்கஸ் கூடாரமாக்கிவிடுவான்!”

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.
அரசியல்வாதிகள் எதை வேடிக்கை பார்க்கக் கூடாது?
தனக்குக் கீழும் மேலும் நடக்கும் அநீதியை!
ப.திருக்காமேஷ்வரம், குயவர்பாளையம், புதுச்சேரி.
‘உங்களுக்குத்தான் என் ஓட்டு’ என மக்களும், ‘நான் வெற்றிபெற்றால் தொகுதியில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என வேட்பாளரும் சத்தியம் செய்கின்றனரே... இரண்டிலும் உள்ள ஒற்றுமை என்ன?
ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இருவருக்குமே தெரியும்!
சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.
தாடியில்லா மோடி... தாடியோடு மோடி... இந்தியாவுக்கு எது அழகு?
என்னங்க இது கொடுமையா இருக்கு..? அழகு ஆட்சியிலதானே இருக்கணும். தாடியிலயா இருக்கணும்?
ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
லஞ்சம் வாங்க, ஊழல் செய்யத் தூண்டும் காரணிகள் எவை?
பேராசையும், பேர் ஆசையும்!
மணிவண்ணன், சூலூர்.
ஆசிரியரை மிஞ்சும் மாணவன் உண்டா?
நிறைய உண்டே! ஓர் ஆசிரியர் “பட்டியில் இருக்கும் பத்து ஆடுகளில், ஒரு ஆடு குதித்து தப்புகிறது. இப்போது பட்டியில் எத்தனை ஆடுகள் இருக்கும்?’’ என்று கேட்டார். எல்லாரும் `ஒன்பது’ என்று சொல்ல, ஒரு மாணவன் “ஒன்றும் இருக்காது சார்” என்றான். “என்னடா... உனக்குக் கணக்கு தெரியலையே” என்று ஆசிரியர் சொன்னதும், “இல்லை சார். உங்களுக்குத்தான் ஆடுகள் பத்தித் தெரியலை” என்றானாம் மாணவன்!
குரு.சண்முகம், குளச்சல்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டி என்று அண்ணாமலை அறிவித்ததுமே, பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய இளைஞரணித் துணைத் தலைவர், ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்று ட்வீட் போட்டிருக்கிறாரே?
ஆளாளுக்கு இப்படித்தான் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லுங்கள்... அறிவியல் உண்மை அதுவல்ல. பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உயிரினங்களைவிட சிங்கம்தான் தனித்து வாழாதது. எப்போதும் கூட்டமாகக் கூடி வாழுகிற இயல்புடையது. இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும், ‘ஆம்பள சிங்கம்’ என்று பெருமை பேசித் திரிபவர்கள் அறிந்துகொள்ளவேண்டியது, ஆண் சிங்கம் இயல்பில் மிகப்பெரிய சோம்பேறி. பெண் சிங்கம்தான் பொறுப்போடும் மன உறுதியோடும் வேட்டையாடும்!

ஜீவன், காரைக்கால்.
தற்போதைய கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கும்போது, கழுகாருக்கு என்ன நினைவுக்கு வந்தது?
இந்தக் கவிதைதான் நினைவுக்கு வந்தது.
ஆளுநர் மாளிகையில்
விருந்து
அனைத்துக்கட்சி
தலைவர்களுக்கும்.
பரிமாறிக்கொண்டிருந்த
பணியாளர்கள் தமக்குள்
பேசிக்கொண்டனர்.
‘யார்
யாரைச்
சாப்பிடப் போகிறார்களோ..?’
- மு.மேத்தா
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!