சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்

ஓ,பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ,பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் / புன்கணீர் பூசல் தரும்’ என்கிறார் வள்ளுவர். உங்கள்மீது அன்பு இருந்தால், அது தானாக வெளிப்பட்டுவிடும்.

மாணிக்கம், திருப்பூர்.

“தைரியமிருந்தால் தனிக்கட்சி ஆரம்பித்துக் காட்டுங்கள்” என்று எடப்பாடிக்கு சவால்விடுகிறாரே பன்னீர்?

நடிகர் வடிவேலு காமெடி ஒன்றில், “யோவ்... தைரியமிருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாய்யா’ என்று டீ குடித்துக்கொண்டிருப்பவர்களை ஒரு சிறுவன் கிட்னியை எடுக்க அழைப்பானே ஞாபகம் இருக்கிறதா... அதுதான் நினைவுக்கு வருகிறது.

கழுகார் பதில்கள்

ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 55 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும்கூட மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையும் வேகமும் காங்கிரஸாருக்கு இல்லையே, ஏன்?

ஆசை இருக்கிறது. வேகம்தான் இல்லை.

@சரோஜா பாலசுப்ரமணியன்.

கேரளா, கர்நாடகா மாநிலங்களெல்லாம் காடுகளைப் பாதுகாக்க கவனம் செலுத்துகின்றன. தமிழகம் மட்டும் காடுகளை ஒட்டியுள்ள கல்குவாரிகளைத் திறக்க அனுமதி அளித்திருக்கிறதே?

‘திராவிட மாடலில்’ காடுகள், கனிம வளப் பாதுகாப்புகள் வராதுபோல.

சின்னச்சாமி, மதுரை.

நல்லவனாக, வாழ்வது கஷ்டமா... நடிப்பது கஷ்டமா?

ரெண்டுமே கஷ்டம்தான். நடிப்பது கூடுதல் கஷ்டம்.

முருகம்மாள், நெல்லை.

மரணம், யாருக்கு முடிவு... யாருக்குத் தொடக்கம்?

சாதாரண மனிதனுக்கு முடிவு. போராளிக்குத் தொடக்கம்!

கதீஜா பானு, நாகூர்.

அன்பை யாசகம் செய்து பெற முடியுமா?

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் / புன்கணீர் பூசல் தரும்’ என்கிறார் வள்ளுவர். உங்கள்மீது அன்பு இருந்தால், அது தானாக வெளிப்பட்டுவிடும். அதை யாசித்துப் பெறும்போது, அது அன்பாக இருக்காது. இரக்கமாக மாறிவிடும்.

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

‘நாட்டில் இன்னும் அதிகமாக அரசியல் கட்சிகள் இல்லையே’ என்று ஏக்கம்கொள்பவர்கள் மக்களா... அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிகளா?

தேர்தல் வியூக வகுப்பாளர்கள்!

வாசுதேவன், பெங்களூரு.

சங்கடம் - தர்ம சங்கடம் என்ன வித்தியாசம்?

ஊர் ஊராகத் தொண்டர்களைச் சந்திக்க, உட்கார்ந்தபடியே காரில் பயணம் செய்வது ஒரு அரசியல்வாதிக்குச் சங்கடம். போகிற இடத்தில் ‘ஆள் தெரியலையே... யார் நீங்கள்?’ என்று மக்கள் கேட்பது தர்மசங்கடம்.

கே.குமார். மயிலாடுதுறை.

அறிவாகப் பேசுகிற, மிகத் திறமையான அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது, தவறான கொள்கையின் பக்கம் நிற்கும்போது கழுகாருக்கு என்ன தோன்றும்?

குடப்பால் கறந்தாலும், கூரை பிடுங்குகிற மாடு ஆகாது.

தே.அண்ணாதுரை, தேனி.

அ.தி.மு.க உடைந்துவிட்டதா?

தேனியில் இருந்துகொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா அண்ணாதுரை... அதுவும் இப்படி ஒரு பெயரை வைத்துக்கொண்டு!

@ஆர்.ஹரிகோபி, புது டெல்லி.

அ.தி.மு.க தலைவர்கள் தங்கள் சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்திருக்கும் உருவப்படம் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறதா?

2024-ல் மாற வாய்ப்பில்லை. 2026-ல் மாறலாம்!

கழுகார் பதில்கள்

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்.

ராகுல் காந்தி யாத்திரையில் கலந்துகொண்டு, அகில இந்திய அளவில் பேசப்படுபவர் ஆகிவிட்டாரே கமல்ஹாசன்?

மிகச்சரியாக விஷயத்தைப் புரிந்து கொண்டுவிட்டீர்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

“எங்களுக்கு அழைத்துச் செல்ல ஆசை இருந்தது. ஆனால், வெளிநாட்டில் சிகிச்சை பெற ஜெயலலிதா மறுத்துவிட்டார்” என்று சசிகலா சொல்லியிருக்கிறாரே?

ஓ... பாட்டாவே பாடிட்டாங்களா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!