சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

மனிதனின் இடது மூளை - வலது மூளை இரண்டும், நீதிமன்றத்தில் இரண்டு பக்கம் நின்று வாதாடும் வக்கீல்கள் போன்றவை. ஒன்று உணர்ச்சியை முக்கியத்துவப்படுத்தி வாதாடும். மற்றொன்று தர்க்கரீதியாக வாதாடும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அ.தி.மு.க-வை இணைக்காமல் விட மாட்டேன் என்று சசிகலா முழங்கிவருகிறாரே?

உண்மையைச் சொல்லுங்கள். இந்தக் கேள்வியை எழுதி அனுப்பும்போது, சிரித்துக்கொண்டேதானே அனுப்பினீர்கள்?!

கழுகார் பதில்கள்

வாசுதேவன், பெங்களூரு.

உரைநடை மொழி, வட்டார மொழி... வித்தியாசம்?

உரைநடை மொழி, நம் அறிவிலிருந்து வருகிறது. கூடுதல் தெளிவுக்காகவும் துல்லியத்துக்காகவும் அது தேவைப்படுகிறது. வட்டார மொழி, நம் இதயத்திலிருந்து வருகிறது. மனிதர்கள் உயிர்ப்போடு தங்கள் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ள அதுவே சிறந்ததாக இருக்கிறது. “உணவு உண்டீர்களா தம்பி?” என்று கேட்பதற்கும், “சாப்டியா ராசா?” என்று கேட்பதற்குமான வேறுபாடு உண்டு அதில். இரண்டும் அவசியமானதே.

பெ.பச்சையப்பன், கம்பம்.

இந்த நியூ இயர் சபதம் என்ன கழுகாரே..?

ஆண்டின் முதல் நாளில் எடுக்கும் சபதத்தை, இந்த முறையாவது மறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அப்புறம் சாரி... மறந்துட்டேன்... ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே!

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

மனம் சொல்வதை அறிவு ஏற்றுக்கொள்வதில்லை. அறிவு எடுக்கிற முடிவுகளுக்கு மனம் உடன்படுவதில்லை. இந்தச் சிக்கலை எப்படிக் கையாள்வது?

மனிதனின் இடது மூளை - வலது மூளை இரண்டும், நீதிமன்றத்தில் இரண்டு பக்கம் நின்று வாதாடும் வக்கீல்கள் போன்றவை. ஒன்று உணர்ச்சியை முக்கியத்துவப்படுத்தி வாதாடும். மற்றொன்று தர்க்கரீதியாக வாதாடும். இரண்டு உரையாடல்களையும் மிகக் கவனமாக, கூர்மையாகக் கேளுங்கள். இரண்டின் வாதப் பலன்களை வைத்து ஒரு நீதிபதிபோல முடிவெடுங்கள். உணர்ச்சி, தர்க்கம் எதற்கு அதிகம் காது கொடுக்க வேண்டுமென்பது கேஸுக்கு கேஸ் மாறுபடும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

ம.ராகவ்மணி, ஆந்திரா.

கொசு அளவு கட்சிகள்கூட மலையளவு பெரிதாக இருப்பதாகத் தம்பட்டம் அடிப்பது ஏன்?

தொடர்ந்து அடிக்கப்படும் அந்தத் தம்பட்டம்தான், தேர்தல் நேரத்தில் டீல் பேச உதவும் என்பதால்!

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்.

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தன்று அ.தி.மு.க-வினர் கோஷ்டி கோஷ்டியாகச் சென்று அஞ்சலி செலுத்தியது குறித்து எம்.ஜி.ஆரின் ஆன்மா என்ன நினைக்கும்?

‘காக்கையைப் பாரு... கூடி பிழைக்கும். நம்மையும் பாரு... நாடே சிரிக்கும். எத்தனை பெரிய மனிதனுக்கு..எத்தனை சிறிய மனமிருக்கு...’ என்கிற பாடலை முணுமுணுக்கும்.

@மாரியப்பன், சிவகாசி.

மீண்டும் மிரட்டும் கொரோனா..?

அச்சம் வேண்டாம். ஆனாலும், பாதுகாப்பாக இருப்போம்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசனை, ராகுல் காந்தி தமிழில் பேசச் சொன்னது..?

நல்ல விஷயம். இந்திய மண்ணில் முளைத்த அத்தனை மொழிகளையும் மதித்துப் போற்றுகிற, பாதுகாக்கிற பன்மைத்துவப் பண்புதான் இன்றைய அரசியலுக்கு அவசியத் தேவை.

பரமேஸ்வரன், திருநள்ளாறு, காரைக்கால்.

“இந்துக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, வீட்டில் கூர்மையான கத்தி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கத்திகூட போதும். அதைக் கூர்தீட்டி வைத்துக்கொள்ளுங்கள்” என்று பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூர் பேசியிருக்கிறாரே?

நாம் எப்போதும் நம் புத்தியை மட்டும் தீட்டிவைப்போம். இது போன்ற பிரிவினைவாதக் கருத்துகளைக் குப்பைத் தொட்டியில் வீசுங்கள். நம் கைகளில் எப்போதும் சமாதானப் பூக்களின் வாசம் நீங்காதிருக்கட்டும்!

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

கமல் தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதுபோல் தெரிகிறதே?

‘நாள்தோறும்தான் ஆள் மாறுவேன்... நான்தான் சகலகலா வல்லவன்!’

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

அரசியல்வாதிகள் எப்போது ஜோக் அடிப்பார்கள்?

தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும்போது!

கழுகார் பதில்கள்

@ஜெயலட்சுமி, கன்னியாகுமரி.

“பா.ஜ.க-வில் அண்ணாமலை இணைந்த பிறகு வீடியோ, ஆடியோ கலாசாரம் பெருகிவிட்டது” என்ற காயத்ரி ரகுராமின் பேச்சு?

‘தொழில்நுட்பரீதியாகவும் கட்சியை மேம்படுத்துங்கள்’ என்ற மேலிட யோசனையை, கட்சித் தலைவர் அண்ணாமலை தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்போல.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!