அரசியல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

‘முடியவே முடியாது’ என்பதைத்தானே இத்தனை வருடத் தேர்தல் முடிவுகள் நமக்குச் சொல்கின்றன!

மாணிக்கவேல், கயத்தாறு.

2022 எப்படி இருக்க வேண்டும் கழுகாரே?

எல்லோரும் இன்புற்றிருக்க!

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி.

`சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது’ என்கிறாரே ஜெயக்குமார்... சசிகலா எப்போது ஜெயக்குமாரிடம் மன்னிப்புக் கேட்டார்?

அரசியல்ல அதெல்லாம் ஒரு ஃப்ளோவுல சொல்றதுதான்... இப்படி ஆதாரமெல்லாம் கேட்டா எப்படி பாஸ்!?

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

அ.தி.மு.க-வினருக்குப் பிடித்த ஊர் சேலமா... தேனியா?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா, அ.தி.மு.க-வினருக்குப் பிடித்த ஊர் ‘மன்னார்குடி’ ஆகிடக் கூடாதேன்னு பயப்படுறாங்க அந்தக் கட்சித் தலைவர்கள்!

கழுகார் பதில்கள்

ஜெ.நெடுமாறன், ராமாபுரம்.

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா - இருவருக்கும் என்ன வேறுபாடு?

முன்னவர், கருணாநிதிக்காகவே வாழ்ந்தார். பின்னவர், (மனதுக்குள்) ஜெயலலிதாவாகவே வாழ்கிறார்!

கதிர்வேல், கிருஷ்ணகிரி.

திருவொற்றியூர் கட்டட விபத்து சொல்லும் உண்மை என்ன?

கட்டடத்தின் தரத்தை கமிஷன்களே நிர்ணயிக்கின்றன என்பதைத்தான்!

குணசேகரன், சத்தியமங்கலம்.

‘அருள்வாக்கு’ அன்னபூரணி?

கொரோனா, ஒமைக்ரான், விலையேற்றம், பொருளாதாரப் பிரச்னைகள்னு ரொம்பவே மன அழுத்தத்தில் இருக்கிற மக்களுக்கு, சிரித்துக் கவலைகளை மறக்க அப்பப்ப இது மாதிரி காமெடி சம்பவங்களும் நடந்துட்டுப் போகட்டுமே. ஆனா, இப்படி ஆரம்பிச்ச பல காமெடி சம்பவங்கள், பின்னால சமூகத்துக்குப் பெரிய ஆபத்தா மாறின கதைகளும் நடந்திருக்கு. ஜாக்கிரதை!

சுப்ரமணியன், சாத்தூர்.

‘ஒன்றிய அரசு என்று கூறுவதை அனுமதிக்கக் கூடாது’ என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, தமிழக கவர்னரிடம் மனு அளித்திருக்கிறாரே?

‘உங்களைப் பொறுத்தவரை, இப்போ தீர்க்கப்படவேண்டிய முதல் பிரச்னை இதுதானா மிஸ்டர் கிருஷ்ணசாமி?’ என்று மக்கள் கேட்பது, உங்களுக்குக் கேட்கிறதா?

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

உருட்டல் மிரட்டல் மூலம் மக்கள் மனதில் அரசியல்வாதிகள் இடம்பிடிக்க முடியுமா?

‘முடியவே முடியாது’ என்பதைத்தானே இத்தனை வருடத் தேர்தல் முடிவுகள் நமக்குச் சொல்கின்றன!

மேகவண்ணன், புலியூர்.

‘அரசியல்வாதிகள்’ என்றாலே சாமானிய மக்கள் கோபப்படுவது எதனால்?

உத்தரப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டம், பிசண்டா பகுதியின் சந்திரயால் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வெல்டிங் மெஷின் தொழிலாளியின் வீட்டில், பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருட்டுப் போய்விட்டன. கடன் வாங்கித் தொழில் செய்துவந்த நிலையில், இப்படி ஆனதால் வருத்தப்பட்டவர், போலீஸில் புகாரளித்தார். சில நாள்களில் அவர் வீட்டருகே மூட்டை ஒன்று இருந்தது. ‘தினேஷ் திவாரி வீட்டில் திருடிய பொருள்கள் உள்ளன. உங்கள் வறுமை குறித்து வெளியில் அறிந்து, வருந்தினோம். இனிமேல் ஏழைகள் வீட்டில் திருட மாட்டோம்” என்று எழுதிவைத்திருந்தனர் திருடர்கள். இந்தக் குறைந்தபட்ச ஈரம்கூட சில அரசியல்வாதிகளிடம் இல்லாததால்தான் மக்கள் கோபப்படுகிறார்கள்!

ஞானக்கூத்தன்
ஞானக்கூத்தன்

கிருஷ்ணன், எழும்பூர்.

`கவிதைக்குப் பொய் அழகு’ என்கிறார்கள். பொய்யில் அழகுண்டா?

பொய்யைப் பற்றிய அழகான ஒரு கவிதை எழுதியிருக்கிறார் ஞானக்கூத்தன். வாசித்துவிட்டு நீங்களே முடிவுசெய்யுங்கள்!

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி

கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறத் தவிட்டுக்காக

வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனை பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனை பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை

இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?

உன்பிள்ளை உன்னை விட்டால்

வேறெங்கு பெறுவான் பொய்கள்?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!