
‘நிதி ஆயோக்’ வெளியிட்ட சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில், அதே உத்தரப்பிரதேசம் கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது.
இல.கண்ணன், நங்கவள்ளி.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த மின்விசிறிகள், மிக்ஸி, கிரைண்டர்கள் ஆகியவை துருப்பிடித்த நிலையில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி பற்றி..?
அவை மட்டும்தானா துருப்பிடித்த நிலையில் கிடக்கின்றன?!
வினோத்குமார், கவுண்டம்பாளையம்.
‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ - சமீபத்திய உதாரணம்?
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்திடம் “ஏன் முகக்கவசம் அணியவில்லை?” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்... “நான் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடி முகக்கவசம் அணிவதில்லை. நானும் அவரைப் பின்பற்றுவதால் அணியவில்லை!”
மன்னன் எவ்வழி...
மணிவண்ணன், சூலூர்.
“அடடா... பார்த்து ரொம்ப நாளாச்சே!” என்று கழுகார் சமீபத்தில் நினைத்தது எதை?
2,000 ரூபாய் நோட்டை!

பெ.பச்சையப்பன், கம்பம்.
‘முதல்வராகும் எண்ணம் இல்லை. ஆனால், தமிழகத்தை ஆள வேண்டும்’ என்கிறாரே அன்புமணி ராமதாஸ்..?
கவலைப்படாதீங்க. 2026 தேர்தல் வர்றதுக்குள்ள, என்ன நினைக்கிறார்னு தெளிவா சொல்லிடுவாரு!
மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.
எம்.பி கனிமொழியின் பலம் என்ன... பலவீனம் என்ன?
அமைதியாக இருப்பதுதான்!
@சரோஜா பாலசுப்ரமணியன்
‘வானிலையை முன்கூட்டியே கணிப்பதற்கு இன்னும் சில உபகரணங்கள் வேண்டும்’ என்று அமித் ஷா-வுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறாரே ஸ்டாலின்?
இந்தக் கோரிக்கையை டீ-கோடிங் செய்தால், வேறு ஏதாவது அரசியல் அர்த்தம் கிடைக்குமோ என்று யோசிக்கிறது மூளை!
மாணிக்கம், டாடாபாத், கோவை.
ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாத விவகாரத்தில், 10 முறை சம்மன் அனுப்பியும் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் ஆஜராகாத விஷாலுக்கு அபராதம் விதித்திருக்கிறதே எழும்பூர் நீதிமன்றம்?
வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், 500 ரூபாய் அபராதம் என்று படித்தபோது, கொஞ்சம் அதிகமோ என்று தோன்றியது. அவ்வளவு பெரிய தொகைக்கு விஷால் என்ன செய்வாரோ!?
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட பிரமாண்ட விழா இப்போதுதான் முடிந்தது. தொடர்ந்து, மதுரையில் மோடியின் வருகையையொட்டி, நிகழ்ச்சியில் பத்தாயிரம் பேர் கூடி பொங்கல் வைக்க ஏற்பாடு நடக்கிறது. இவையெல்லாம் நமக்குச் சொல்வது என்ன?
மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு உபதேசமெல்லாம் பேருக்குத்தான். அரசியல்னு வந்துட்டா கொரோனா, ஒமைக்ரான்லாம் பறந்து போயிடுது!
செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.
நாட்டின் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பதிவாகும் மாநிலங்களில், உ.பி மாநிலம் முதலிடத்தில் இருக்கிறதாமே?
‘நிதி ஆயோக்’ வெளியிட்ட சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில், அதே உத்தரப்பிரதேசம் கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது. அரசே வெளியிடும் இந்தப் புள்ளிவிவரங்கள் உ.பி-யின் யதார்த்த நிலையை, அவலத்தை முகத்திலடித்தாற்போலச் சொல்கின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்தச் செய்தி இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி-635 001.
2021-க்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் அம்பை பற்றி...
சி.எஸ்.லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை, அரை நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தில் பரந்துபட்டு இயங்கிவரும் தவிர்க்க முடியாத ஆளுமை. குடும்ப அமைப்பு, மதம், பண்பாட்டு அமைப்புகள் பெண்கள் மீது ஏற்றிவைத்திருக்கும் விதிகளை, சுமைகளை, மதிப்பீடுகளை நொறுக்கிச் சிதைக்கும்விதமாக எழுந்த புதுக்குரல் அவருடையது. பல பெண் எழுத்தாளர்களின் ஆதர்சமாக இருந்துவரும் அம்பை, தன்னைப் ‘பெண் எழுத்தாளர்’ என்று பால் அடையாளத்துக்குள் சுருக்கிக் குறிப்பிடுவதைக் கண்டிப்பவர். ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. வழக்கம்போல, ஒரு தகுதியான நபருக்கு தாமதமாக விருது வழங்கியிருக்கிறது சாகித்ய அகாடமி!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!