அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

‘அன்பிலும், அறிவிலும், திறமையிலும் தன் பாட்டியைப்போலவும் அம்மாவைப்போலவும் பெண் வேண்டும்’ என்கிறார் ராகுல்.

திலகர் ஈஸ்வரன், சேலம்.

நீங்க சொல்லுங்க பாஸ்... நடிகர் விஜய்க்கு ‘அந்த எண்ணம்’ இருக்கா, இல்லையா?

நிச்சயமா இருக்கு!

ராஜ், மன்னார்குடி.

யாரையும் புண்படுத்தாமல் வாழக் கற்றுக்கொள்வது எப்படி?

எந்த விஷயமெல்லாம் உங்களைப் புண்படுத்துகிறது என்று நினைக்கிறீர்களோ, அந்த விஷயத்தை யாருக்கும் நீங்கள் செய்யாதீர்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“அ.தி.மு.க நான்காக உடைந்து கிடக்கிறது. தி.மு.க-மீது மக்களுக்கு விமர்சனம் உள்ளது. ஆக, ஆட்சியில் இல்லாமலேயே சாதித்தது பா.ம.க-வின் வளர்ச்சி அரசியல்” என்று அன்புமணி பேசியிருக்கிறாரே?

“இவுங்க உடைஞ்சு கிடக்கிறாங்க. சரி... அவுங்க மேல விமர்சனம் இருக்கு... ஆமா. ஆனா, நீங்க என்ன சாதிச்சீங்க... கட்சிய எந்தவிதத்துல வளர்த்திருக்கீங்க?”னு பாட்டாளிகளே கேட்கிறாங்க!

எம்.கல்யாணசுந்தரம், கோவை.

சசிகலா கோட்டைவிட்டது எந்த இடத்தில்?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா போலவே கெட்டப் மாற்றிக்கொண்டவுடன், தானும் ஒரு ஜெயலலிதா என நம்பத் தொடங்கிய இடத்தில்!

பவளக்கொடி, தஞ்சாவூர்.

‘வாரிசு’ ட்ரெய்லர் பார்த்ததும் கழுகாருக்கு என்ன தோன்றியது?

`காதல்தான் எவ்வளவு மாறிவிட்டது’ என்று தோன்றியது. “காதல் ஒரு பூ மாதிரி. அது ஒரு முறை உதிர்ந்துட்டா... மறுபடியும் எடுத்து ஒட்டவைக்க முடியாதுப்பா” என்று யோகி பாபு சொல்ல, அதற்கு விஜய், “அதெல்லாம் கம் போட்டு ஒட்டிக்கலாம்ப்பா” என்பார். ‘பூவே உனக்காக’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், அந்த வசனத்துக்காகக் கண்ணீர் வடித்த நாள்கள் நினைவுக்கு வந்ததாகச் சொன்னார் என் நண்பர்.

ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு எந்த நிலையில் இருக்கு?

அந்தச் சம்பவத்தைவிட மர்மமாவே இருக்கு!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

“பதவி வரும்... போகும்!” என்கிறாரே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

அவரும் எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிப்பாரு?!

கழுகார் பதில்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

சபரீசன் - சசிகலா ஒப்பிடுக?

பதிலையே கேள்வியாகக் கேட்டால் எப்படி?

மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை.

உணர்ச்சிகள் உயிருக்குச் சொந்தமா... உடலுக்குச் சொந்தமா?

உயிருள்ள உடலுக்கு!

செண்பகம், நெல்லை.

`உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்’ என்கிறாரே ரஜினி?

இதையெல்லாம் 50 வருஷத்துக்கு முன்னாடியே ஆட்டோவுல எழுதியாச்சே பாஸ்!

சண்முகநாதன், நெல்லை.

ரஃபேல் கடிகாரத்துக்கான பில் அண்ணாமலையிடம் இருக்கிறதா, இல்லையா?

ஹலோ சண்முகநாதன்... நீங்க எந்த மீடியா பாஸ்... ஐ.டி கார்டு இருக்கா... ஆதார் கார்டு காட்டுங்க... யூடியூப் சேனலா நீங்க... எத்தனை சப்ஸ்கிரைபர் வெச்சுருக்கீங்க?

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

``தமிழக அமைச்சரவையில், கூடுதலாகப் பெண்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்’’ என்கிறாரே சீமான்?

வரவேற்கத்தக்க கருத்துதான். அத்தனை மாநிலங்களிலும், மத்திய அரசிலும்கூட அது நிகழ வேண்டும்!

கழுகார் பதில்கள்!

கண்ணன், செங்கல்பட்டு.

அரசியலில் தாத்தாவின் சாணக்கியத் தனம், சமயோஜிதம், சாதுர்யம், ராஜதந்திரத்தையெல்லாம் பேரனிடம் எதிர்பார்க்கலாமா?

‘தாத்தாவின்’ என்று கேட்டிருக்கிற இடத்தில் ‘பாட்டியின்’ என்றும் சேர்த்திருந்தால், இந்தக் கேள்வி இரண்டு பேரன்களுக்குப் பொருந்தியிருக்கும்.

கழுகார் பதில்கள்!

தே.மாதவராஜ், கோவை.

ராகுலுக்குத் திருமண ஆசை வந்தால் எந்த நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வார்?

‘அன்பிலும், அறிவிலும், திறமையிலும் தன் பாட்டியைப்போலவும் அம்மாவைப்போலவும் பெண் வேண்டும்’ என்கிறார் ராகுல். அப்படி ஒரு காம்பினேஷனில் உங்களுக்குத் தெரிந்து பெண் இருந்தால் தகவல் சொல்லுங்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!