Published:Updated:

கழுகார் பதில்கள்

கவிஞர் தேவதச்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
கவிஞர் தேவதச்சன்

போகாத நாடுகளுக்கெல்லாம் ஒரு எட்டு போயிட்டு வந்துரணும்’ங்கற அவரோட மைண்ட் வாய்ஸ்தான் கேட்குது!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

ஆன்லைன் சூதாட்டம் ஓய்ந்தபாடில்லையே கழுகாரே?

எப்படி ஓயும்! தமிழக அரசு தடைவிதித்து சட்டமியற்ற, நீதிமன்றம் அந்தத் தடையை நீக்க.. பிரபலங்கள் பலரும் விளம்பரம் செய்ய.. வாரச் சம்பளம் வாங்கும் பாமரர்கள் முதல் லட்சங்களில் சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் ஊழியர்கள் வரை இந்த வலையில் வீழ்ந்து மடிகிறார்கள். இந்த நேரத்தில் வந்திருக்கும் ‘மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் அரசு முற்றுப்புள்ளி வைக்கும்’ என்ற முதல்வரின் அறிவிப்பு, அறிவிப்பாகவே நின்றுவிடாமல் இருந்தால், ஓய்வதென்ன... ஒழியவே செய்யும்!

கழுகார் பதில்கள்

பெ.வேலுமணி, நாராயணபாளையம்.

அண்ணாமலை?

கவிதாலயா தயாரிப்பில், ரஜினி நடிக்க தேவா இசையமைத்த முதல் படம். 1992-ல் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானபோது, ரஜினி படத்துக்கு தேவா இசையா என்று ரசிகர்கள் பரபரப்பாகப் பேசிக்கொண்டனர். ஆனால், அந்த டைட்டில் கார்டு இசைதான், ரஜினிக்கு டிரேட்மார்க்காக அமைந்தது. படமும் பாடல்களும் ஹிட்டாக, இன்றளவும் பேசப்படுகிறது `அண்ணாமலை!’ ஆமா... நீங்க கேட்ட பதில் கெடைச்சதுதானே!?

பொன்விழி, அன்னூர்.

பிரதமர் மோடியின் புத்தாண்டு சபதம் என்னவாக இருக்கும்?

`இந்த வருஷத்துலயாவது கொரோனா, ஒமைக்ரான் பிரச்னையெல்லாம் முடிஞ்சு... போகாத நாடுகளுக்கெல்லாம் ஒரு எட்டு போயிட்டு வந்துரணும்’ங்கற அவரோட மைண்ட் வாய்ஸ்தான் கேட்குது!

பெ.பச்சையப்பன், கம்பம்.

‘மீண்டும் லாக்டௌன்’ என்பதை நினைத்தால் தலைசுற்றுகிறதே... தவிர்க்க முடியாதா?

தேவையில்லாத விஷயங்களுக்கு வெளியில் செல்வதைத் தவிர்த்து முகக்கவசம், கிருமிநாசினி என்று நம் பாதுகாப்பை எப்போதும்போல உறுதிப்படுத்திக்கொண்டால் பரவலும் குறையும். லாக்டௌனையும் தவிர்க்கலாம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

`சட்டசபையில் ஆளுநரின் உரை எதற்கும் உதவாத கட்டுக்கதைகளின் கூட்டுத்தொகுப்பு’ என்ற ஓ.பி.எஸ் விமர்சனம்?

இவங்க ஆட்சில அவங்க இப்படிச் சொல்றதும், அவங்க ஆட்சில இவங்க இப்படிச் சொல்றதும் வாடிக்கைதானே வண்ணை கணேசன்?

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

வெல்கமா... கோ பேக்கா?

ஆமாம்.. இந்தப் புத்தாண்டிலிருந்து நல்ல விஷயங்களுக்கு ‘வெல்கம்’ சொல்வோம். தீய எண்ணங்களுக்கு ‘கோ பேக்’ சொல்வோம்!

தே.மாதவராஜ், ராமநாதபுரம்.

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் ராஜேந்திர பாலாஜி பிடிபட்டது பற்றி..?

அடுத்த பக்கத்துல கவர் ஸ்டோரியைப் படிச்சுடுங்க!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

`வீட்டிலிருந்தே உங்கள் கைப்பேசி மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ என்று விளம்பரம் கொடுக்கப்படுவதன் நோக்கம் என்ன?

அப்படி அனுப்புகிறவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கத்தான்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறார்’ என ஆஹோ ஓஹோ என்று புகழ்கிறாரே?

கண்ணு முன்னால நடக்கறதெல்லாம் பயமுறுத்துமா... இல்லையா!

கழுகார் பதில்கள்

பிரபா, நெல்லை.

எல்லா விஷயங்களுக்கும் குறுக்குவழி இருக்கிறதா?

கவிஞர் தேவதச்சனின் ஒரு கவிதை இதற்கு பதில் சொல்கிறது...

வேறு வழியில்லை

ஒரு

சின்னஞ்சிறு மலரை

மலரச் செய்யணுமா

வேறு வழியில்லை

உன் புஜபலத்தால்

பூமியைச்

சுற்றி விடு!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!