Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

நடக்கிறதையெல்லாம் வெச்சு, அதுலயும் ஏதோ அரசியல் கணக்கு இருக்குமோன்னு பயப்படாதீங்க பாஸ்.

கழுகார் பதில்கள்

ஜி.வி.மனோ, கொலுவை நல்லூர்.

எதிர்க்கட்சியினர்மீது நடத்தப்பட்ட ரெய்டுகளெல்லாம் வெற்று மிரட்டல்கள்போல முடிந்துபோகின்றன. வேறொன்றும் நடப்பதில்லையே?

உங்க சந்தேகம் நியாயமானதுதான் மனோ... சில பட்டாசுகளுக்குத் திரி ரொம்ப நீளமா இருக்கும்ல... அப்படி இருக்குமோ? இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்!

P.அசோகன், கொளப்பலூர்.

மௌனமாக இருந்து சாதிக்க முடியுமா?

நிச்சயமா! மௌனமும்கூட ஒரு செய்திதான். ஆனா, அதைச் சரியான நேரத்தில் சொல்லலைன்னா, முதலுக்கே மோசமாப் போயிடும்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘ஓஹோ’ என வாழ, சினிமாவில் நடிக்கலாமா... அரசியலில் குதிக்கலாமா... ஆன்மிகத்தில் இறங்கலாமா?

நீங்க சொல்ற மாதிரி நடிச்சு, குதிச்சு, இறங்கிய ஒருத்தரை உங்களுக்கு நல்லாவே தெரியுமே பாஸ்! என்ன... ‘ஓஹோ..!’னு யோசிக்கிறீங்களா?

மாதவன், கோவை.

நாட்டுக்கு மோடியைப்போல இனியொரு பிரதமர் உண்டா?

நிச்சயமா வாய்ப்பில்லை!

க.பூமிபாலன், கோவை.

எந்தச் சூழ்நிலையிலும் ‘உண்மையை மட்டுமே பேசும் அரசியல் தலைவர்கள்’ எந்தக் கட்சியிலாவது இருக்கிறார்களா?

இருந்தார்கள்! இனி வருவார்கள்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

படைப்புலகம், பதிப்பாளர் உலகம், வாசிப்பவர்கள் உலகம் எப்படி இருக்கிறது கழுகாரே?

மூவரின் உலகமும் புத்தகக் கண்காட்சி எப்போது என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது!

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

அதென்ன உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் ஏழு கட்டத் தேர்தல்?

நடக்கிறதையெல்லாம் வெச்சு, அதுலயும் ஏதோ அரசியல் கணக்கு இருக்குமோன்னு பயப்படாதீங்க பாஸ். உ.பி-யில மொத்தம் 403 தொகுதிகள் இருக்கு. அத்தனைக்கும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்த முடியாதுல்ல!

முத்துப்பாப்பா தாசன், தாராபுரம்.

நீங்கள் நானாக இருந்து, நான் நீங்களாக இருந்தால் எப்படியிருக்கும்?

`நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும். நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்!’ - கண்ணதாசனின் மகத்தான வரிகள் இவை. உங்கள் கேள்வியைப் போன்ற கற்பனைகள்கூட, காதலில் மட்டும்தான் சாத்தியம் பாஸ்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

“புதிய கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்?” என்று தினகரன் கேட்கிறாரே?

தம் ‘குடி’மக்களை அரசு ரொம்பவே நேசிக்கிறது என்பதை சிம்பாலிக்காகச் சொல்கிறார்களோ!?

கழுகார் பதில்கள்

தே.மாதவராஜ், ராமநாதபுரம்.

‘எம்.ஜி.ஆர்-தான் எங்களுக்கு எல்லாமே’ என்று சொல்லும் எடப்பாடி, ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏன் தனது சட்டைப்பையில் ஜெ-வின் படத்தை வைத்திருந்தார்?

வைத்திருக்காவிட்டால் என்ன பாடுபட்டிருப்பார் என்று அவருக்கும் தெரியும்... உங்களுக்கும் தெரியும்!

வெங்கடேஸ்வரன் செல்லப்பன், சத்துவாச்சாரி.

தமிழக அரசியலில், உதயநிதியைவிட வயதில் மூத்தவர்கள்கூட அவரை ‘அண்ணன்’ என்று அழைப்பது ஒரு மாதிரியாக இல்லையா?

‘அண்ணனுக்கே’ ஷாக் ஆனா எப்படி?

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

போலீஸுக்கு மீசை கம்பீரத்தைத்தானே தரும்... மத்தியப்பிரதேசத்தில் பெரிய மீசை வைத்ததற்காக ஒரு போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாரே?

முதலில், கம்பீரம் மீசை சார்ந்தது அல்ல. நேரு, நேதாஜி, அம்பேத்கர் போன்றோரின் மீசையில்லாத முகத்தில் எவ்வளவு கம்பீரத்தைப் பார்க்கிறோம். சரி... விடுங்கள். நீங்கள் குறிப்பிடும் அந்தக் காவலர், ராணுவ வீரர் அபிநந்தன் ஸ்டைலில் மீசைவைத்திருந்ததாகவும், அதிகாரிகள் அதை மாற்றிக்கொள்ளச் சொல்லியும் அவர் கேட்கவில்லை என்பதாகவும், அதன் விளைவாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் சொல்கின்றன செய்திக்குறிப்புகள். விஷயம் இதுதான்... அந்தக் காவலரின் மீசை, மேலதிகாரிகளின் கண்களை உறுத்தியிருக்கிறது, அவ்வளவுதான். மீசை என்பது வெறும் மயிர்தான். ஆனால், அதற்குப் பின்னால், பெரிய அரசியலும் வரலாறும் இருக்கிறதுதானே!

சௌந்தர், அரியலூர்.

என்ன சொன்னாலும், “தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டோம்” என்று உளறிக்கொண்டிருப்பவர்களை என்ன செய்வது?

எல்லாத் தரப்பிலும், இப்படி ஒரு கூட்டம் கிளம்பியிருப்பது வேதனையான விஷயம். `மும்பையில், கொரோனா பாதிப்பால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் படுக்கையில் இருப்பவர்களில் 96% பேர் தடுப்பூசி போடாதவர்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஒருவர் தடுப்பூசி போடாமல் இருப்பதால், அவரை மட்டுமல்ல, மற்றவர்களையும் ஆபத்துக்குள் தள்ளுகிறார்!

கழுகார் பதில்கள்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!