Published:Updated:

கழுகார் பதில்கள்

த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
த்ரிஷா

இதுதான் ‘தென்னை மரத்துல ஒரு குத்து... பனை மரத்துல ஒரு குத்து’ அரசியல்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

வேஷங்கள் பலவாறு இருந்தாலும், கோஷங்கள் ஒன்றாக இருப்பது எந்த விஷயத்தில்?

“உங்கள் ஓட்டு எங்களுக்கே!”

கணேசன், சென்னை-110.

‘நீட் தேர்வு தேவையற்றது’ என ஆளுநர் தனது சட்டசபை உரையில் கூறியிருக்கிறார். அது தமிழக அரசே எழுதிக்கொடுத்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதேசமயம், ‘நீட் விலக்கு மசோதாவை முடக்கிவைத்திருக்கும் ஆளுநர், ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று டி.ஆர்.பாலு வலியுறுத்துகிறாரே?

இதுதான் ‘தென்னை மரத்துல ஒரு குத்து... பனை மரத்துல ஒரு குத்து’ அரசியல்!

சுகன்யா, சென்னை.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்குச் சமீபத்திய உதாரணம்?

தேர்தல் நேரத்தில் பிற கட்சிகளிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் விலகி பா.ஜ.க-வுக்கு வருவதைத்தான் கடந்த சில வருடங்களாகப் பார்த்துவருகிறோம்.

உ.பி-யில், தேர்தல் நடக்கவுள்ள இந்தச் சமயத்தில் பா.ஜ.க அமைச்சர்கள் இருவரும், எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரும் விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் இன்னும் கூடும் என்கிறார்கள்!

நீ பற்றவைத்த நெருப்பொன்று...

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

சசிகலாவின் பின்னால் மாபெரும் கூட்டம் இருக்கிறதா?

இதுக்கு பதில் தெரிஞ்சாத்தான் அவங்க களத்துல இறங்கிடுவாங்களே!

பெ.பச்சையப்பன், கம்பம்.

‘மக்களுக்கு எதிராக ஏதாவது நடந்தால், அ.தி.மு.க குரல் கொடுக்கும்’ என்கிறாரே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ?

‘குரல் மட்டும் கொடுத்தா போதுமா?’னு அவங்க கட்சித் தொண்டர்களே கேட்கறாங்களே பாஸ்!

கழுகார் பதில்கள்

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

நடிகை த்ரிஷாவுக்கு கொரோனாவாமே?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பாகவே அவருக்கு உடல்நிலை சரியாகி, கொரோனா ‘நெகட்டிவ்’ ரிசல்ட் வந்துவிட்டது. இந்த மூன்றாம் அலை கொரோனா பாதிப்பில், முறையாகத் தனிமைப்படுத்திக்கொண்டு, உரிய மருந்துகளை எடுத்துக்கொண்டால் இரண்டொரு நாளில் குணமாகிவிடலாம் என்பதுதான் நல்ல செய்தி. கவனமாக இருங்கள் கதிரேசன்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

இன்றைய அரசியலில் மௌனம் காப்பது, சிரித்துக்கொண்டே செல்வது, எது நல்லது?

ரெண்டுமே நல்லதில்லை!

கழுகார் பதில்கள்

பிரபா, திருநெல்வேலி.

குற்ற உணர்ச்சி நல்லதா... கெட்டதா?

நல்லதா, கெட்டதா என்பதைத் தாண்டி அவசியமானது!

‘நச்சுப் பாம்புகளைவிட

கொடிய விஷம் கொண்டவை

குற்ற உணர்ச்சிகள்

நச்சுப் பாம்புகள்

ஒருமுறை கொத்திவிட்டு

மறு வேலையைப் பார்க்க

போய்விடுகின்றன

அதுவும்

அதன் வாலையோ தோலையோ

மிதிக்கும்போதுதான்

எப்போதாவது நடக்கிறது

குற்ற உணர்ச்சிகள் அப்படியில்லை

அவை நம்மை

அம்மி கொத்துவதுபோல்

கொத்திக்கொண்டேயிருக்கின்றன

செத்துத் தொலையும்வரை!’

சமீபத்தில் மறைந்த தமிழின் முக்கியமான கவிஞர், ஜெ.பிரான்சிஸ் கிருபா எழுதிய கவிதை இது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!