அரசியல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

அஜித், விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
அஜித், விஜய்

‘ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே..!’ ஆடியோவை ரீமிக்ஸ் செய்து, நடைப்பயண வீடியோக்களில் பயன்படுத்தலாம்

இல.கண்ணன், நங்கவள்ளி.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக, சட்ட ஆணையத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியிருக்கிறாரே?

‘ஒரே தலைவராக’ வரத் துடிப்பவர் வேறு என்ன செய்வார்?

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

எல்லா பண்டிகை நாள்களிலும் திருவள்ளுவரையே மேற்கோள் காட்டிவருகிறாரே பிரதமர் மோடி?

அதெல்லாம் பிரமாதமா பண்ணுவாரு. மொழி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கப்படுறப்ப மட்டும் கரெக்டா வள்ளுவரையும் தமிழையும் மறந்துடுவாரு!

மஞ்சுவாசுதேவன், பெங்களூரு.

கவிஞர் கண்ணதாசனின் கொண்டாட்டப் பாடல்கள்... தத்துவப் பாடல்கள்... இரண்டில் எதில் வரிகள் சிறந்திருக்கும்?

“அப்பாவும் தாத்தாவும்

வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள்...

த‌ப்பென்ன‌ ச‌ரியென்ன‌

எப்போதும் விளையாடு...

அப்பாவி என்பார்க‌ள்

த‌ப்பாக‌ நினைக்காதே...

எப்பாதை போனாலும்

இன்ப‌த்தைத் த‌ள்ளாதே..!

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் அவர் எழுதிய இந்தப் புகழ் பெற்ற பாட்டைக் கேட்டுப் பாருங்கள். தத்துவமும் கொண்டாட்டமும் ஒன்றாய் நுரைத்துப் பொங்கும்

பெ.பச்சையப்பன், கம்பம்.

இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் பிடித்த விஷயம்?

மேடைகளில், அரங்கங்களில் நிறைய அரசியல் பேசப்படுவது; அதற்கு அரசு இடமளித்திருப்பது!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

நீங்கள் தெய்வமாக நினைப்பது..?

‘அறிவொன்றே தெய்வம்’ என்கிறார் பாரதி. நாமும் அவர் வழி!

அல்லிராஜ், கோவை-15.

கவர்னர் ஆர்.என்.ரவியின் தற்போதைய ‘மைண்ட் வாய்ஸ்’ என்னவாக இருக்கும்?

“ம்... த... வந்து... இப்ப... நான்... என்னான்னு உங்ககிட்ட சொல்றது?!” என்கிற நடிகர் வடிவேலுவின் வாய்ஸ்தான் மைண்டில் வருகிறது!

எல்.தவமணி, பாளையங்கோட்டை.

ஒரு ஜோக் சொல்லுங்களேன் கழுகாரே?

அடுத்த கேள்வியை வாசியுங்கள்!

பி.மணி, திருப்பூர்.

“ஆளுநரை விமர்சனம் செய்யாமல் இருந்தால், தி.மு.க தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளலாம்” என்று கூறுகிறாரே ஹெச்.ராஜா?

நல்ல ஜோக்!

டி.ஜெயசிங், கோயம்புத்தூர்.

பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு?

கட்சிக்குள் தனக்குப் பாதுகாப்பு இல்லையென்று நினைக்கிறாரோ என்னவோ?

கழுகார் பதில்கள்

ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்.

இந்தப் பொங்கலில் வசூல் சக்கரவர்த்தி யார்... தலையா... தளபதியா?

‘தலை’யைச் சுற்றவைக்கும் ‘தளபதி’ டாஸ்மாக்தான்!

திலகர் ஈஸ்வரன், சேலம்.

இன்றைய தி.மு.க எதில் தடுமாறுகிறது?

அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகளின் நாக்கையும் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதில்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

‘பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்போவதாக காயத்ரி ரகுராம் அறிவித்திருக்கிறாரே?

‘ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே..!’ ஆடியோவை ரீமிக்ஸ் செய்து, நடைப்பயண வீடியோக்களில் பயன்படுத்தலாம். ஏதோ நம்மால் முடிந்த யோசனை!

கழுகார் பதில்கள்

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

அண்ணாமலையைவிட ஆளுநர் ரவியை தமிழக பா.ஜ.க தலைவராக நியமித்திருந்தால், அரசியல் களம் இன்னும் சூடாக இருந்திருக்குமே?

சரவணகுமார், தாராபுரத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்... நீங்களெல்லாம் டெல்லியில் இருக்கவேண்டிய ஆள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!