அரசியல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
News
குஷ்பு

இந்திய இசைக்கு விருது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ரசிக்கும்படியான பாடல்தான். ஆனால், இதைவிடச் சிறந்த பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் கீரவாணி

சிவக்குமார், காரைக்கால்.

குஷ்பு பா.ஜ.க-வில் தொடர்ந்து நீடிப்பாரா?

“எல்லாம் ‘மேல’ இருக்கிறவன் செயல்” என்கிறார்கள் கமலாலயத்தார்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்.

மோடியும் அமித் ஷா-வும் தமிழ் மொழி மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்களே?

நெசமாத்தான் சொல்றீங்களா?

கழுகார் பதில்கள்

செண்பகம், தென்காசி.

`RRR’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு... நாட்டு...’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்திருப்பதைப் பற்றி..?

இந்திய இசைக்கு விருது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ரசிக்கும்படியான பாடல்தான். ஆனால், இதைவிடச் சிறந்த பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் கீரவாணி. விருது என்பது எப்போதும் சிறந்த படைப்புகளுக்கு என்று அல்லாமல், அதிகம் கவனம் பெறும் விஷயங்களுக்கே கிடைக்கிறது. ரஹ்மானுக்கும் அதுதானே நடந்தது?!

நடராஜன், பாளையங்கோட்டை.

அண்ணாமலை அடுத்து என்ன செய்யப்போகிறார்?

பொறுங்க... பொறுங்க... அவசரப்படாதீங்க... ஏதாவது ஒரு புது ‘ஆபரேஷன்ல’ இருப்பார். உங்க ஆர்வம் புரியுது... சீக்கிரம் கலகலன்னு வருவார். கவலைப்படாதீங்க!

வாசுதேவன், பெங்களூரு.

2023 வெகு வேகமாகச் செல்லுமா..?

ஆமா பாஸ்... கண்ணை மூடித் திறப்பதற்குள் முக்கால் மாசம் முடிஞ்சுபோச்சே!

மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை.

இறந்த பிறகும் தன்னைப் பற்றிப் பேசவைப்பவர்கள் யார்?

வாழும்போதே பிறருக்கு நன்மை பயக்கும்படி வாழ்ந்தவர்கள்.

தாமரைச்செல்வி, தூத்துக்குடி.

எப்போதுதான் காமராஜர் ஆட்சியைத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமைக்கும்?

எப்போ ‘டைம் மெஷின்’ கண்டுபிடிக்கப்படுகிறதோ... அப்போ!

செல்வி, மயிலாடுதுறை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் யார் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பார்?

அந்த நாலு பேர்! (மூணு பேரைக் கண்டுபிடிக்கிறது ஈஸி. அந்த நாலாவது ஆள் யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.)

அய்யாக்கண்ணு, செங்கல்பட்டு.

தனது பெரியப்பாவான மு.க.அழகிரியைச் சந்தித்திருக்கிறாரே அமைச்சர் உதயநிதி?

பகைகளைக் குறைப்பதும் யுத்தத்தில் ஒரு வகை உத்தி.

கிருஷ்ணா, திருப்பூர்.

ஆளுநரால் உச்சகட்ட கடுப்பில் இருக்கும் மாநில முதல்வர் யார்?

அந்த லிஸ்ட் பெரிது. ஆனாலும், தற்சமயம் அதிகமும் கடுப்பில் இருப்பவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான். சமீபத்தில், டெல்லி சட்டப்பேரவையில் “கவர்னர் என்பவர் யார்... எங்கிருந்து வந்தார்... எனது வீட்டுப் பாடங்களை எனது ஆசிரியர்கூட இவ்வளவு ஆய்வு செய்ததில்லை. அந்த அளவுக்கு இவர் என் கோப்புகளை ஆய்வுசெய்கிறார். என்னை முதல்வராக்கியது மக்கள்தான்... கவர்னர் அல்ல” என்று வெடித்துத் தள்ளியிருக்கிறார்.

கழுகார் பதில்கள்

தவமணி, திண்டிவனம்.

ஓர் அரசியல் கவிதை ப்ளீஸ்?

‘எல்லோரும் ஒரே குழியில்

பதுங்கிக்கொள்வதற்குப்

பெயர்தான் சனநாயகம்.

நாம் இப்போது இன்னும்

மூர்க்கமாகியிருக்க வேண்டும்.

ஆனால்,

சிறு தொலைவில்

பற்றியெரிந்துகொண்டிருக்கும்

நெருப்பை

வெறும் சிவப்பு கலரெனவே

பார்த்துக்கொண்டிருக்கிறோம்.’ - ஜீவன் பென்னி

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்” என்று பிரியங்கா அறிவித்திருக்கிறாரே?”

‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பது பழமொழி!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

நாராயணி, கடலூர்.

சமீபத்தில் மனதை கனக்கவைத்த காட்சி?

பாகிஸ்தானில் உணவு லாரியை இரு சக்கர வாகனத்தில் மக்கள் பின்தொடரும் காட்சி ரொம்பவே பாதித்தது. இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களின் கதியே இதுவென்றால், அங்கே ஏழைகளின் நிலை?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!