அலசல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்

திருவள்ளுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருவள்ளுவர்

கரப்பான் டைனோசர் காலத்துக்கு முன்பிருந்தே வாழ்ந்துவரும் பூச்சி. அதைக்கூட அழித்துவிடலாம்.

சிவா நித்யானந்தம், புதுச்சேரி.

தாம்பத்ய உறவு என்பது சிற்றின்பமா... பேரின்பமா?

ரெண்டுமேதான். ஆனால், வயது, உடல் ஆரோக்கியம், மன ஒருமைப்பாடு, பார்ட்னரின் ஒத்துழைப்பு, சூழல் என அனைத்தும் சரியாக அமைவதைப் பொறுத்து இரண்டில் ஒன்று சாத்தியப்படும்.

மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை.

மனிதனுக்கு கம்பீரத்தைக் கொடுப்பது அவனது உழைப்பா, உடையா?

உடனடியாகக் கொடுப்பது உடை. தாமதமாக, அதேநேரம் நிரந்தரமாகக் கொடுப்பது உழைப்பு.

அனுரார் பொன்விழி, அன்னூர்.

உப்பு விற்கப்போனால் மழை வருகிறது. மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது. என்ன செய்யலாம்?

மழையில் கரைந்துவிடாமல் உப்பை எப்படிப் பாதுகாப்பது; காற்றில் பறந்துவிடாமல் மாவை எப்படி எடுத்துச்செல்வது என்று புதிதாக உங்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது இயற்கை. எனவே, என்ன செய்யலாம் என யோசிக்கலாம்.

நாகராஜ், கன்னியாகுமரி.

காதல், காமம்... அடுத்தது என்ன?

பிரேக்அப்தான்!

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

`சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்கிற பதத்தை வள்ளுவர் கையாண்டிருப்பதன் மூலம், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்கிற தொழிலின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என்கிற வேற்றுமை உருவாக ஆரம்பித்துவிட்டது என்று எச்சரிக்கை மணி அடித்திருக்கிறாரே?

உண்மைதான். அதனால்தான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற சமூகநீதிக் கருத்தை, அன்றே மிகத் தெளிவாக முதல் வரியாக ஆணி கொண்டு அழுத்தமாகக் கீறியிருக்கிறார்.

பா.ஜெயப்பிரகாஷ், தேனி.

புரட்சியாளர் சே குவேராவின் மகள் டாக்டர்.அலெய்டா குவேரா சென்னை வந்து சென்றிருக்கிறாரே?

ஆமாம். சென்னையில் அவர் பங்கேற்ற நிகழ்வில், ``அமெரிக்கா எத்தனை பொருளாதாரத் தடைகளை கியூபாவின்மீது கொண்டுவந்தாலும், கியூப மக்களின் மகிழ்ச்சியை அமெரிக்காவால் ஒன்றுமே செய்ய முடியாது’’ என்று அவர் சொன்னபோது, அலெய்டாவின் குரலில் சே குவேராவின் கம்பீரமும் தெளிவும் ஒலித்தன!

கழுகார் பதில்கள்

அன்பரசி, கடலூர்.

கனிமொழி அவர்கள் துணை முதல்வர் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா?

உதயநிதியின் மகன், இன்பநிதி முதல்வராக வேண்டும் என விரும்புகிற எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் தி.மு.க-வில் இருக்கையில், கனிமொழியைத் துணை முதல்வர் ஆக்க விரும்பும் எம்.எல்.ஏ-க்களோ, அமைச்சர்களோ தி.மு.க-வில் இருக்க மாட்டார்களா என்ன?

செல்வமுருகன், தூத்துக்குடி.

மு.க.அழகிரி இப்போது முணுமுணுக்கும் பாடல் என்னவாக இருக்கும்?

‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை... லாலலா... லாலலா...’

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் என்னதான் நடக்கிறது?

உங்களுக்காகத்தான் இந்த இதழின் கவர் ஸ்டோரியே... 42-ம் பக்கம் பார்க்க!

பருத்தி இக்பால், நெல்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் ‘தமிழகம் - தமிழ்நாடு’ விவகார அறிக்கை, சறுக்கலா... பதுங்கலா?

சறுக்கலால் மேற்கொண்டிருக்கும் பதுங்கல்!

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறதா?

கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்!

ஜெ.நெடுமாறன், சென்னை.

லஞ்சம், கொசு, கரப்பான் - இவற்றில் எதை ஒழிக்க முடியாது?

கரப்பான் டைனோசர் காலத்துக்கு முன்பிருந்தே வாழ்ந்துவரும் பூச்சி. அதைக்கூட அழித்துவிடலாம். ஆனால், லஞ்சம்... ம்ஹூம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!