Published:Updated:

கழுகார் பதில்கள்

கங்காதர் திலக்
பிரீமியம் ஸ்டோரி
கங்காதர் திலக்

புதுச்சேரியிலிருந்து எவ்வளவு வேதனையோடு இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்பது புரிகிறது

கழுகார் பதில்கள்

புதுச்சேரியிலிருந்து எவ்வளவு வேதனையோடு இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்பது புரிகிறது

Published:Updated:
கங்காதர் திலக்
பிரீமியம் ஸ்டோரி
கங்காதர் திலக்

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை(மா).

பா.ஜ.க-வின் கிளைக் கட்சியாகவே மாறிப்போன அ.தி.மு.க-வுக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் தராதது ஏன்?

“எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்கடா... இவங்க ரொம்ப நல்லவங்கடா...” என்று நினைச்சிருக்கலாமோ என்னமோ!

எஸ்.கீர்த்திவர்மன், புதுச்சேரி.

பிரித்தாளும் சூழ்ச்சி, பிரிவினைவாதம், பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்தல், குதிரைப் பேரம்... இனி இப்படித்தான் அரசியல் இருக்குமோ கழுகாரே?

புதுச்சேரியிலிருந்து எவ்வளவு வேதனையோடு இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்பது புரிகிறது. பிரித்தாளும் சூழ்ச்சி, பிரிவினைவாதம், பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்தல், குதிரைப் பேரம் இவற்றைச் செய்பவர்களை, கவனத்துடன் தவிர்த்து வாக்களித்தால் இந்த நிலை மாறும்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

``நம் வெற்றி, தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. அதை யாராலும் தடுக்க முடியாது’’ என்கிறாரே தினகரன்?

‘தள்ளிப்போடப்பட்டிருக்கிறது... தடுக்க முடியாது’ த-வுக்கு த... நல்லா ரைமிங்கா இருக்கே!

கழுகார் பதில்கள்

ராஜவர்மன், திண்டுக்கல்.

“இருக்கிறதைவெச்சுப் பொழைக்கறவன் தான் மனுஷன்” என்கிறார்களே... என்னதான் அர்த்தம்?

இசைக்குழுவில், இசைக்கலைஞராக இருக்கும் அப்பாவிடம் தனக்கும் ஒரு கிடார் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கிறான் அந்தச் சிறுவன். நிதி நிலைமையால் “வீட்ல இருக்கறதைவெச்சுக் கத்துக்கோ” என்று சொல்லிவிடுகிறார் அப்பா. சிறுவனின் 10-வது வயதில் அப்பா இறந்துவிட, வீட்டிலிருக்கும் இசைக்கருவிகளைக்கொண்டே கற்றுக்கொண்டு ஆர்க்கெஸ்ட்ராக்களில் வாசிக்கிறான். அப்படி, இருப்பதை வைத்துக்கொண்டே முன்னேறி... தான் விரும்பிய இசையையும் கற்றுக்கொண்டு, குடும்பத்தையும் காப்பாற்றிய அந்தச் சிறுவன்தான் இரு கைகளிலும் ஆஸ்கர் விருதைப் பிடித்துக்கொண்டு இந்தியாவையே பெருமைப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

பச்சையப்பன், கம்பம்.

பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கினால், காங்கிரஸ் அடுத்து ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறதா..?

“அழுதாலும் புள்ள அவதான் பெக்கணும்’னு ஊருக்குள்ள ஒரு சொலவடை இருக்கு பாஸ். ஆலோசனை யார் வழங்கினாலும், அந்தந்தக் கட்சி களத்துல செயல்படற செயல்பாட்டைப் பொறுத்துத்தான் வெற்றியும் தோல்வியும்!

குரு சண்முகராஜன், ஈரோடு.

‘கொங்கு நாடு’ பிரச்னைக்கு மோடி பதில் எதுவும் சொல்வாரா?

அதற்குள்தான் “ஒரே தலைவர், ஒரே நாடு எல்லாம் சரிப்பட்டு வராது. நாடு மொத்தமும் ஏன் டெல்லிக்கு மட்டும் கட்டுப்பட வேண்டும்... இந்தியாவில் நான்கு தேசியத் தலைநகரங்கள் இருக்கக் கூடாதா” என்று கேட்டிருக்கிறாரே மம்தா பானர்ஜி. அவர் போட்ட இந்த குண்டுல ‘பிரிவினைவாதம் வேண்டாம்’னு முடிவு பண்ணியிருந்தாலும் பண்ணியிருப்பாரு!

கழுகார் பதில்கள்

பிரான்சிஸ், மேலூர்.

கழுகாரே... பாராட்டி நாளாச்சே... பாராட்டு யாருக்கு?

இந்தியன் ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 73 வயது கங்காதர் திலக், 64 வயதான அவரின் மனைவி வெங்கடேஸ்வரி இருவருக்கும்தான். ஓய்வுக்குப் பிறகு கங்காதர், ஹைதராபாத்தின் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினீயராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். அப்போதிலிருந்தே ஹைதராபாத்தில் சாலையிலிருக்கும் குழிகள் குறித்து மாநகராட்சிக்குப் புகார்கள் அனுப்புவார். ஒருகட்டத்தில் வேலையை உதறிவிட்டு, மனைவியுடன் களத்தில் இறங்கினார். எங்கே சாலைகளில் குழிகளைக் கண்டாலும் மணல், சிமென்ட் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டுபோய் இருவருமாகச் சென்று அடைத்துவிடுவார்கள். இப்படி, கடந்த 11 வருடங்களில், அவர் அடைத்த குழிகள் மட்டும் 2,030. செய்த மொத்தச் செலவு 40 லட்ச ரூபாய். அனைத்தும் அவரது சொந்தப் பணம்... சொந்த உழைப்பு... பாராட்டாமல் இருக்க முடியுமா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism