Published:Updated:

கழுகார் பதில்கள்

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

‘இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்!’ - பாஸ்... நான் எதையும் யாரையும் குறிப்பிடலை.

கண்ணன், திருநெல்வேலி.

மேற்கு வங்கத்தில், கொரோனா தடுப்பூசிச் சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டு, முதல்வர் மம்தா புகைப்படம் இடம்பெற்றுள்ளதே... யாருடைய புகைப்படம் ‘கொரோனா சான்றிதழில்’ இடம்பெறுவது சரி?

இந்த முதிர்ச்சியற்ற சிறுபிள்ளைத்தனமான சண்டையை விட்டுவிட்டு, மக்களின் வரிப் பணத்தில் போடப்படுகிற தடுப்பூசிச் சான்றிதழில் ஊசி போட்டுக்கொண்டவரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்வதுதான் சரியாக இருக்கும்!

@குரு சண்முகசுந்தரம்

அப்பப்ப நீங்க கோட் பண்ற பழமொழிகள் நல்லாருக்கு கழுகாரே. இந்த வாரத்துக்கு எனக்காக ஒண்ணு சொல்லுங்களேன்!

‘இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்குக் குலை அறுப்பான்!’ - பாஸ்... நான் எதையும் யாரையும் குறிப்பிடலை.

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

பிரதமர் மோடி யாருடைய கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்வதேயில்லை. பதில் வராது என்ற உண்மையை அறிந்தும், தொடர்ந்து நாம் கேள்விகளையும் விமர்சனங்களையும் வைத்துக்கொண்டே இருப்பதை என்னவென்று சொல்வது?

கேள்வி கேட்பது, விமர்சனம் செய்வது நம் அடிப்படை உரிமை. பதில்சொல்ல வேண்டியதும், எதிர்கொள்ள வேண்டியதும் ஆட்சியாளர்களின் கடமை. கதவு திறக்கப்படும் வரை தட்டுவதை நிறுத்தக் கூடாது!

தாமரைச்செல்வன், பெருந்துறை.

சந்தோஷமாக இருக்க இரண்டு வழிகள் கூறுங்கள்?

நேற்று பற்றிய கவலைகளையும் நாளை பற்றிய எதிர்பார்ப்புகளையும் விடுத்து, இன்றைய நாளை சிறப்பாக வைத்துக்கொண்டால் மகிழ்ச்சி நிச்சயம்!

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘`எனக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை’’ என்று இ.பி.எஸ் அழுத்தமாகக் கூறியுள்ளாரே?

அப்படி அழுத்தமாகச் சொல்லச் சொல்லத்தான் பிரச்னை எதுவும் இருக்குமோ என்ற சந்தேகம் நமக்குக் கிளம்புகிறது!

கழுகார் பதில்கள்

மாயா, திருநெல்வேலி.

``மோடி தலைமையிலான மத்திய அரசு, மிக விரைவாக கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா கொரோனாவுக்கு எதிராக மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது” என்று மோடி குறித்துப் புகழாரம் வாசித்திருக்கிறாரே அமித் ஷா?

என்னது கட்டுப்படுத்தினார்களா? மூச்சுத் திணறித் திணறி இறந்தவர்கள் வந்து எதிர்க்குரல் எழுப்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கையா அல்லது அதற்குச் சாட்சியாக இருந்த யாரும் முன்வந்து பேச மாட்டார்கள் என்ற தைரியமா... எது இவர்களை இப்படிப் பேசவைக்கிறது?!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

மணிவண்ணன், ஈரோடு.

வஞ்சனைகள் சவாலாக மாறுவது உண்டா?

பிரபல இயக்குநர் மிருணாள் சென், ‘மிருகயா’ என்றொரு படம் எடுத்தார். பீகாரிலுள்ள மலைவாழ் மக்கள் பற்றிய படம் என்பதால், படம் முடிந்த பிறகு அங்கிருக்கும் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பெரியவரிடம் போட்டுக்காட்டினார். அதில் வில்லிலிருந்து அம்பு விடும் காட்சிகளைப் பார்த்த பெரியவர், “தப்பா இருக்கு. நாங்க அம்பு விடும்போது கட்டைவிரலைப் பயன்படுத்த மாட்டோம். எங்க இனத்தைச் சேர்ந்த ஏகலைவன், ராஜ குடும்பத்துக்குப் போட்டியா வருவான்னு அவனோட கட்டைவிரலை துரோணாச்சாரியார் குருதட்சணையா வாங்கிட்டார்னு புராணம் இருக்கு. அதைச் சவாலா எடுத்துட்டு எங்க இன மக்கள் எப்பவுமே கட்டைவிரலைப் பயன்படுத்தாம, ஆட்காட்டிவிரல், நடுவிரல் இது ரெண்டையும் மட்டும்தான் பயன்படுத்தி அம்பு விடுவோம்” என்று சொன்னாராம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!