அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

பத்திரிகையாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் “திருநங்கைகளுக்கும் இந்தச் சலுகையை அறிவிக்கலாமே” என்று கேட்டதை அடுத்து உடனே அதைப் பரிசீலிப்பதாகக் கூறி, நடைமுறையும் படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

கழுகார் பதில்கள்

கண்ணப்பன், வேளச்சேரி.

ஆட்சியாளர்களின் குறைகளை, பத்திரிகைகள் சொல்லிக்கொண்டே இருப்பதை அவர்கள் கவனிக்கிறார்களா... அதனால் பயன் என்ன?


நிச்சயம் கவனிக்கிறார்கள். அதற்குச் சமீபத்திலேயே இரண்டு உதாரணங்கள் இருக்கின்றன. “பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம்” என்று இந்த அரசு அறிவித்தது. அடுத்த நாள் பத்திரிகையாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் “திருநங்கைகளுக்கும் இந்தச் சலுகையை அறிவிக்கலாமே” என்று கேட்டதை அடுத்து உடனே அதைப் பரிசீலிப்பதாகக் கூறி, நடைமுறையும் படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு என்று முதலில் அறிவித்திருந்தனர். பத்திரிகைகளில் அதற்கு விமர்சனங்கள் எழவே, உடனே அதைத் திரும்பப் பெற்று, ‘நுழைவுத்தேர்வு ரத்து’ என்று அரசு அறிவித்துவிட்டது.

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘தமிழகம் வளமாக இருக்க, நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதால், கொரோனா உடையணிந்து மருத்துவமனைக்குச் சென்று பார்த்தது போன்ற கடினமான, ஆபத்தான பணிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டாம் ‘ என்று முன்னாள் அமைச்சர் ஹண்டே கூறியுள்ளாரே? இதைப் பார்த்து எடப்பாடியார், ஓ.பி.எஸ் ‘மைண்ட் வாய்ஸ்’ என்னவாக இருக்கும் கழுகாரே?


முதல்வரின் அந்தச் செயல் பாராட்டுக்குரியது! “இந்த பி.பி.டி கிட் ஐடியா நமக்குத் தோணலையே” என்பதுதான் நீங்கள் குறிப்பிட்ட இருவரின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்!

கழுகார் பதில்கள்

@சரோஜா பாலசுப்ரமணியன்.

`யோகிதான் இந்தியாவின் அடுத்த பிரதமர்’ என்று சொல்கிறார்களே... இது உண்மையாகிவிடுமா?


அடுத்த பிரதமர் யார் என்பதை வாக்காளர்களான நீங்கதான் முடிவு பண்ணப்போறீங்க. அது இருக்கட்டும்... அதை ஏன் இவ்ளோ பயத்தோட கேக்கறீங்க?

கழுகார் பதில்கள்

ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

கொரோனா பயம் இல்லாமல், ஊரடங்கை அலட்சியப்படுத்துபவர்களை என்ன செய்யலாம்?

இவ்வளவு பார்த்த பின்னும் அலட்சியமாக இருப்பவர்களை கொரோனாவே பார்த்துக்கும்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில் புதிய அமைச்சர்களான பழனிவேல் தியாகராஜன் மற்றும் அன்பில் மகேஷ் எப்படி?

இருவருமே தங்கள் களத்தில் அடித்து ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜிதின் பிரசாத் பா.ஜ.க-வில் இணைந்திருப்பது?


ஜிதின் பிரசாத் மட்டுமா? கேரளாவில் விஜயன் தாமஸ்... அதற்கு முன்னரே நம் தமிழ்நாட்டில் குஷ்பு என்று காங்கிரஸ் டு பா.ஜ.க தாவல் எல்லா மாநிலங்களிலும் தொடர் கதைதானே!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

சசிகலா அரசியல் பிரவேசம் செய்வதை விரும்பாத அரசியல் பிரபலம் யார்?

ஆளைவிடுங்கள் சாமி!

கண்ணு, திருநெல்வேலி

இடப் பிரச்னைக்கு யாரை அணுகலாம்? சட்ட ஆலோசகர்... அரசியல் ஆலோசகர்?


சாட்சிக்காரன் கால்ல விழுறதைவிட, சண்டைக்காரன் கால்ல விழுறது மேல்னு ஒரு பழமொழி இருக்கு மாடக்கண்ணு!

நீலன், கோவை.

தமிழக கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டிருப்பதுபோல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரி, குள விவரங்களையும் மீட்டு இணையத்தில் வெளியிட வாய்ப்பு இருக்கிறதா?

அதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மாதம்தானே ஆகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்!

V.பாலசுப்ரமணியன், மன்னார்குடி.

கொரோனா விவகாரத்தில் மனசாட்சியே இன்றி பிரதமரைப் புகழும் அந்தக் கட்சியினரை என்னவென்று சொல்வது?


காலம் எல்லாவற்றையும் பதிவுசெய்து கொண்டிருக்கிறது. எல்லாரும் நினைவில் வைத்துக்கொண்டால் சரி.