Published:Updated:

கழுகார் பதில்கள்!

கமல், லோகேஷ் கனகராஜ், சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
கமல், லோகேஷ் கனகராஜ், சூர்யா

கர்நாடகா, ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்பவரின் வீட்டில், தினமும் மூன்று மணி நேரம்தான் மின்சாரம் செயல்பட்டிருக்கிறது.

கழுகார் பதில்கள்!

கர்நாடகா, ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்பவரின் வீட்டில், தினமும் மூன்று மணி நேரம்தான் மின்சாரம் செயல்பட்டிருக்கிறது.

Published:Updated:
கமல், லோகேஷ் கனகராஜ், சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
கமல், லோகேஷ் கனகராஜ், சூர்யா

சம்பத், பொள்ளாச்சி.

கமல் ரொம்ப மகிழ்ச்சியாக, பரிசுகளை வாரி வழங்கியபடி இருக்கிறாரே?

அரசியல் சோர்வுகளிலிருந்து வெளியேறி, ‘விக்ரம்’ வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார். அவரது மகிழ்ச்சி நீடிக்கட்டும்!

கழுகார் பதில்கள்!

சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

அரசாங்க ஊழல்களைக் கண்டுபிடித்தும் பொதுமக்களிடம் வெளிப்படுத்தவோ, சட்டரீதியாக அணுகவோ செய்யாமல் `விரைவில் வெளியிடுவேன்’, `சமயம் வரும்போது வெளிப்படுத்துவேன்’ என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் கூறுவது எதனால்?

‘என் குடுமியை விடு... உன் குடுமி என் கையில்’ என்கிற கதைதான்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

யார் நினைத்தால் காங்கிரஸை ‘கை’ தூக்கிவிடலாம்?

யார் நினைத்தாலும் முடியாது என்ற நிலை வருவதற்குள், ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைவர் சொல்படி கோஷ்டியின்றி அனைத்துக் கைகளும் ஒன்று சேர்ந்தால்... தூக்க முடியும்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையில், சொந்தங்களின் உறவைக் காட்டிலும் நண்பர்களுடைய உறவு பிரதானமாக இருக்கிறதே, என்ன காரணம்?

சொந்த உறவுகள் உங்கள் விருப்பப்படி அமைவது உங்கள் கைகளில் இல்லை. ஆனால், நட்பு நீங்கள் மனமுவந்து தேர்ந்தெடுக்கும் உறவு. மேலும் அதன் சிறப்பு, நம் குறைகளைப் பெரிதுபடுத்தாதது; நம் பிரச்னைகளில் உடன் நிற்பது!

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி, சேலம் மாவட்டம்.

அண்ணாமலை சில நேரங்களில் தெரியாமலேயே பேசுகிறாரா... இல்லை லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்று அப்படிப் பேசுகிறாரா?

அரசியலில் எது முக்கியம் என்று ‘தெரிந்துகொண்டுதான்’ பேசுகிறார்!

சம்பத், கரூர்.

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் பனிப்போர் இன்னும் நீடிக்கிறதா?

‘ரெட்டைத் தலைமை’ இருக்கும் வரை அந்தப் பனிப்போர் தவிர்க்க முடியாதது!

கணேசன், பேரணாம்பட்டு.

அரபு நாடுகள் நம்மீது கோபமாக உள்ள நேரத்தில், ‘யோகி இதில் தலையிட்டு இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்’ என்று சிலர் சமூக ஊடகங்களில் எழுதி வருகின்றனரே?

யாரோ யோகியை ஜோக்கா விமர்சித்து எழுதியதை, நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டீங்க போல!

மாணிக்கம், திருப்பூர்.

‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்ற எண்ணம், எப்போது அரசியல்வாதிகளிடம் குறைய ஆரம்பிக்கிறது?

ஜெயித்ததும்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

`` ‘திராவிட மாடல்’ என்றால் என்ன... எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்று சசிகலா கருத்து தெரிவித்திருக்கிறாரே?

இப்படிச் சொல்கிறவர், அண்ணா ‘திராவிட’ முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டால் எப்படி?!

மு.நடராஜன், திருப்பூர்.

“பொன்னையன், செல்லூர் ராஜூ ஆகியோர் பா.ஜ.க குறித்துக் கூறிய கருத்துகள், அவர்களுடைய சொந்தக் கருத்துகள்தான்” என்கிறாரே ஓ.பன்னீர்செல்வம்?

‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’, ‘வெற்றிகரமான தோல்வி’, ‘நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்’ என்று அரசியலுக்கென்றே சில டெம்ப்ளேட் வசனங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘அது அவர்களுடைய சொந்தக் கருத்துகள்’ என்பதும்!

கழுகார் பதில்கள்!

மிர்னி, திருப்பூர்.

மௌனமாக இருப்பது எவ்வளவு முக்கியம்?

“இசையமைப்பாளருக்கு நிசப்தம் என்பது ஓவியருக்கு வெற்று கேன்வாஸைப்போல அல்லது ஒரு கவிஞனுக்குத் தூய்மையான வெள்ளைத்தாளைப்போல” என்று சொன்னார் எஸ்தோனியாவைச் சேர்ந்த 86 வயதான இசையமைப்பாளர் அர்வோ பேர்ட். அவர் மௌனத்தைப் பற்றிச் சொன்ன ஒரு விஷயம் மிக முக்கியமானது. ‘`மௌனம் நமக்கு வெளியே இருக்கலாம். உள்ளே இருக்கலாம். உள்ளே உள்ள மௌனம் ஆன்மாவினுடையது. நமது ஆன்மாவின் மௌனம் புறத் தொந்தரவுகளால் பாதிப்புறாதது. அதுதான் மிக முக்கியமானது. அடைவதற்கு அது மிகக் கடினமானது” என்கிறார் அர்வா பேர்ட்!

அரசு லெனின், தாராபுரம்.

சமீபத்தில் படித்த, சிரித்த, சிந்திக்கவைத்த செய்தி?

கர்நாடகா, ஷிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்பவரின் வீட்டில், தினமும் மூன்று மணி நேரம்தான் மின்சாரம் செயல்பட்டிருக்கிறது. புகார்கள் கொடுத்தும் பயனில்லாததால், உயரதிகாரியை அழைத்து “மசாலா அரைக்க, செல்போன் சார்ஜ் செய்ய எத்தனை நாளைக்குத்தான் பக்கத்து வீட்ல உதவி கேட்க முடியும்?” என்று கேட்க, அந்த அதிகாரியோ “அப்படியென்றால் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று அதையெல்லாம் செய்துகொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார். அதையே சீரியஸாக எடுத்துக்கொண்ட ஹனுமந்தப்பா காலையில் மிக்ஸி, செல்போன்களுடன் மின் வாரிய அலுவலகம் சென்று தேவைகளைப் பூர்த்திசெய்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 மாதங்கள் தினமும் இப்படித் தொடர, சோஷியல் மீடியாவில் இந்த விஷயம் வைரலாக, இப்போதுதான் அதிகாரிகள் அவசர அவசரமாக அவர் வீட்டின் மின் பிரச்னையைச் சரிசெய்யக் களத்தில் இறங்கியிருக்கிறார்களாம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism