Published:Updated:

கழுகார் பதில்கள்

பெண் காவலர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் காவலர்கள்

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி அ.தி.மு.க-வா... இல்லை பா.ஜ.க-வா?

குரு சண்முகசுந்தரம், குளச்சல்.

அரசியல்வாதிகள் தங்களைச் சுயவிமர்சனம் செய்து கொள்வதுண்டா?


1937-ல் ‘த மாடர்ன் ரிவ்யூ ஆஃப் கல்கத்தா’ என்ற இதழில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த நேருவை விமர்சித்து சாணக்யா என்பவர் எழுதிய ஒரு கட்டுரை வெளியானது. “நேரு போன்றவர்கள் ஜனநாயகத்தில் ஆபத்தானவர்கள். ஒரு சிறு திருப்பமும் இவரை சர்வாதிகாரி ஆக்கிவிடலாம். ஒரு சர்வாதிகாரிக்கு வேண்டிய புகழ், மன உறுதி, செயல்திறன், கர்வம் எல்லாமே அவரிடம் இருக்கின்றன. இவரது முன்கோபம் எல்லோருக்கும் தெரிந்தது. இவருடைய தற்பெருமை ஏற்கெனவே பயங்கரமானது. அதை அடக்க வேண்டும்!” என்பது உள்ளிட்ட கடுமையான விமர்சனங்களை நேருமீது வைத்திருந்தார் சாணக்யா.

அடுத்து சில இதழ்களுக்குப் பிறகுதான் அந்தக் கட்டுரை எழுதிய சாணக்யா வேறு யாருமல்ல... நேருதான் என்பதைப் பத்திரிகை குறிப்பிட்டது. மக்கள் தன்னைப் பற்றி நினைப்பதை உண்மையாக அறியவேண்டி, சாணக்யா என்ற பெயரில் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார் நேரு.

கழுகார் பதில்கள்

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

தி.மு.க - அ.தி.மு.க ஆட்சிகளில் மாறக்கூடியது எது... மாறாமல் இருப்பது எது?


மாறாமல் இருப்பது டாஸ்மாக் திறப்பு. மாறக்கூடியது தலைவர்கள்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

அ.தி.மு.க - பா.ம.க தேனிலவு முடிந்துவிட்டது போலிருக்கே?


தேனிலவா? அப்படின்னாலும், அடிக்கடியா போக முடியும்... ‘அலையன்ஸுக்கு 60 நாள்... ரிசல்ட்டுக்கு 30 நாள்’னு புதுமொழி சொல்வீங்கபோல!

பி.சிவகுமார், கோவை.

இந்தியா சுதந்திரம் அடைந்த 25-வது ஆண்டு தொடங்கிய 1971-ல் தி.மு.க ஆட்சி, 50-வது ஆண்டு தொடங்கிய 1996-ல் தி.மு.க ஆட்சி, இந்த 2021-ல் 75-வது ஆண்டு வரவிருக்கிறது. இதிலும் தி.மு.க ஆட்சி. இதைப் பற்றிய உங்கள் கருத்து?


இந்தக் கணக்குகளை நினைவுகூர்ந்து கேட்ட உங்கள் கேள்விக்கு ஒரு சபாஷ்!

@சரோஜா பாலசுப்ரமணியன்

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி அ.தி.மு.க-வா... இல்லை பா.ஜ.க-வா?


உங்க காமெடிக்கு அளவில்லாமப் போச்சே... ரெண்டும் வேற வேறயா என்ன?! - இந்த பதிலை எதிர்பார்த்துத்தானே இப்படிக் கேள்வி கேட்டீங்க!?

எஸ்.பஷீர், உடுமலைப்பேட்டை.

ஆரம்பித்துவைத்த சீனாவில் இறப்பு விகிதமும் குறைவு. இரண்டாவது, மூன்றாவது என்று அலைகளும் இல்லையே?


புள்ளிவிவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், அங்கே ஊரடங்கு என்பது ஊரடங்காக இருந்தது. அவ்வளவு ஸ்ட்ரிக்ட்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

எம்.எல்.ஏ உதயநிதி மக்கள் பணிகளைச் செய்து பாராட்டுகளை அள்ளுகிறாரே?


அது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதிதான் ஜெய்சிங்!

கழுகார் பதில்கள்

எஸ்.சேகர், அத்திப்பட்டு.

`முதல்வன்’ திரைப்படத்தில் வரும் சம்பவங்கள்போல நடக்கும் நம் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில், அடுத்து என்ன நடக்கலாம்?

எவ்ளோ ராஜதந்திரமா செயல்படறதா அவங்க சொல்லிக்கிட்டிருக்காங்க... பொசுக்குனு அதை சினிமானு சொல்லிட்டீங்களே!

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

ஐந்து, ஆறு அமைச்சர்களைத் தவிர, மற்ற அமைச்சர்களெல்லாம் மிகவும் அமைதிகாக்கிறார்களே?

இதென்ன பட்டிமன்றமா அடுத்தது மணியடிச்சு ஆளாளுக்குப் பேச... ஆட்சி நடத்தட்டும் பாஸ்!

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘பந்தோபஸ்துக்காக, சாலையில் பெண் போலீஸாரைப் பாதுகாப்புப் பணியில் நிறுத்த வேண்டாம்’ என்ற அறிவிப்பு குறித்து..?


எவ்வித வசதிகளுமற்ற நெடுஞ்சாலைகளில், பெண் காவலர்களைப் பார்க்கும்போது இயற்கை அழைப்புகளுக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்ததுண்டு. இப்போதாவது ஆட்சியாளர்கள் கவனம் அவர்கள் பக்கம் திரும்பி, இப்படி ஓர் அறிவிப்பு வந்திருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!