அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்

பெட்ரோல் விலை
பிரீமியம் ஸ்டோரி
News
பெட்ரோல் விலை

ஆசைப்படுவதற்கும் பேராசைப்படுவதற்கும் அப்படி என்ன பெரிய வேறுபாடு?

திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

வேலம்மாள் பாட்டி?!


2,000 ரூபாய் என்பது இந்த நாட்டில் பலருக்கும் எண்ணியதும் கிடைக்கும் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், அந்தப் பணம் இந்தப் பாட்டி வசமானதும், அவர் முகத்தில் தோன்றும் பரவசத்தைப் பார்க்கும்போது, இந்தச் சமூகத்தில் நிலவும் வறுமையும் ஏற்றத்தாழ்வும் முகத்தில் அறைகின்றன!

கழுகார் பதில்கள்

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

“கட்சி என்பது அனைவருக்கும் தாய் போன்றது. தாய்க்குக் கட்சியினர் யாரும் துரோகம் செய்யக் கூடாது” என்று பீகார் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் கூறியது சரியா சார்?


எந்தத் தாயும் தன் குழந்தைகளின் நலனுக்கு எதிராகச் செயல்பட மாட்டார். கட்சிகள், தொண்டர்களை அதே போன்ற தாயுள்ளத்தோடு பாவித்தால், நிச்சயம் தொண்டர்களும் துரோகம் செய்ய மாட்டார்கள். இது போன்ற அறிக்கைகளை விடுவதற்கு முன்பு கட்சிகள், ‘நாம் தாய்போல நடந்துகொள்கிறோமா?’ என்று தங்களைத் தாங்களே மறு விசாரணை செய்துகொள்வது நல்லது!

சம்பத்குமாரி, பொன்மலை.

உடுப்பியைச் சேர்ந்த ராமதாஸ் ஷேட் என்பவர், கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தனக்கு உடலில் காந்த சக்தி உண்டாகியிருப்பதாகவும், அதனால் இரும்புப் பொருள்களைத் தன் உடல் ஈர்த்துக்கொள்கின்றன என்றும் சொல்கிறாரே..?


நம் நாட்டில் நகைச்சுவைக்கா பஞ்சம்? இது போன்ற சித்து விளையாட்டுகளைப் பார்த்து, கைதட்டிச் சிரித்துவிட்டுக் கடந்துபோக வேண்டியதுதான். இது மாதிரியான அறிவியல் உண்மையற்ற விஷயங்களைப் பெரிதுபடுத்தாமல் இருப்பதுதான் நல்லது. இது போன்ற செய்திகளை ஃபார்வர்டு செய்யாமல், தடுப்பூசியின் அவசியத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பது முக்கியம்.

வாசுதேவன், பெங்களூரு.

ஆசைப்படுவதற்கும் பேராசைப்படுவதற்கும் அப்படி என்ன பெரிய வேறுபாடு?

நல்லவங்க அரசியலுக்கு வரணும்னு நினைக்கிறது ஆசை. வந்தவங்க எல்லாருமே நல்லவங்களா இருக்கணும்னு நினைக்கிறது பேராசை!

டி.ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்.

கடந்த ஆட்சியின் ஆளும்தரப்பின் மீது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் (இப்போதைய முதல்வர்) கவர்னரிடம் கொடுத்த ஊழல் புகார்கள் எப்போது விசாரணைக்கு வரும்?


கவர்னரிடம் புகார் அளித்தவர்களே இப்போது விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தில் இருப்பதால், எப்போது நடக்கும் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டதே கழுகாரே?


ஐந்து மாநிலங்களில், தேர்தல் நடந்துகொண்டிருந்த 34 நாள்களில் ஒருமுறைகூட பெட்ரோல், டீசல் விலை ஏறவில்லை. இப்போதைய விலை ஏற்றத்தைப் பார்க்கும்போது, நாட்டில் எப்போதும், எங்காவது ஒரு பகுதியில் தேர்தல் நடந்துகொண்டே இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது!

கழுகார் பதில்கள்

மாயா, நெல்லை.

அடையாளத்தை மறைத்துக்கொண்டு புகழ்பெற்றவர்கள் யாரும் உண்டா?

வில்லியம் சிட்னி போர்ட்டர் என்பவருக்கு, மோசடிக் குற்றத்துக்காக ஐந்தாண்டு சிறைவாசம் விதிக்கிறது அமெரிக்க நீதிமன்றம். சிறையில் இருக்கும்போது, தன் மகளுக்காகப் பணம் சேர்க்க வேண்டி, கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு நண்பன் மூலம் அனுப்பு கிறார். தான் சிறையில் இருப்பதால், அந்த அடையாளத்தோடு பார்க்கப்படும் என்பதால், எப்போதோ தேர்ந்தெடுத்த ஒரு புனை பெயரை வைத்துக்கொள்கிறார். நன்னடத்தை காரணமாக மூன்றே ஆண்டுகளில் வெளிவந்தபோது சொந்தப் பெயரைவிட அந்தப் பெயர் பிரபலமாகி, புகழ்பெற்ற எழுத்தாளராகப் பார்க்கப்படுகிறார் வில்லியம். தன் சிறுகதைகளுக்காகவே பேசப்பட்ட எழுத்தாளர் ஓ.ஹென்றிதான் அவர்!

கழுகார் பதில்கள்

ஜெய்சிங், கோவை.

சிவசங்கர் பாபா - நித்யானந்தா ஒப்பிடுங்கள்?


மாட்டிக்கிட்டவருக்கும் மாட்டாதவருக்குமான வேறுபாடுதான்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!