
கொடுப்பவர் - பெறுகிறவர் இருவரின் முக்கியத்துவத்தின் பேரில், அந்தப் புத்தகம் பொதுவெளியில் பேசுபொருளாகி பரபரவென்று விற்றுத் தீர்வதும் நல்லதே.
பிரபாகர் சுந்தரம், கோட்டைமேடு.
‘என்னமோ போடா மாதவா’ என்று எந்தச் செய்தியைப் பார்த்துத் தோன்றியது?
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கை தசராவை முன்னிட்டு லட்சக்கணக்கானவர்கள் கூடியிருக்கிறார்கள். இதில் கொரோனா டெஸ்ட்டில் நெகட்டிவ் வந்தவர்கள் மட்டும் குளிக்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இப்படி லட்சணக்கணக்கில் கூடிவிட்டு... அப்புறம் குளிக்காமல் போனால் மட்டும் கொரோனா விட்டுவிடுமா என்ன? அந்தச் செய்தியைப் படித்ததும், நீங்க சொன்ன டயலாக்தான் நினைவுக்கு வந்தது!
ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
காங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம் செய்யப்பட்டிருப்பது, காங்கிரஸாரின் ஒற்றுமையைக் காட்டியிருக்கிறதுதானே?
அதற்கு எத்தனை நாள்கள் ஆனது என்பதில் ஒளிந்துள்ளது அந்த ஒற்றுமை!
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.
தலைவர்கள் சந்திக்கும்போது பரிசாகத் தரப்படும் ‘புத்தகங்களை’ சம்பந்தப்பட்டவர்கள் புரட்டிப் பார்ப்பார்களா?
கொடுப்பதன் நோக்கம் என்னவோ படிக்க வேண்டும் என்பதுதான். அதேசமயம், கொடுப்பவர் - பெறுகிறவர் இருவரின் முக்கியத்துவத்தின் பேரில், அந்தப் புத்தகம் பொதுவெளியில் பேசுபொருளாகி பரபரவென்று விற்றுத் தீர்வதும் நல்லதே. புத்தகங்களை மையமிட்ட விழாக்களில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வதும், அவற்றைக் குறித்துப் பேசுவதும் சமூகத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்!

ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில்.
சசிகலாவின் தற்போதைய செயலால், அ.தி.மு.க-வுக்குக் கிடைப்பது பலமா, பலவீனமா?
அ.தி.மு.க-வுக்கு பலமா, பலவீனமா என்பதை விடுங்கள். சசிகலாவுக்கு பலமாகுமா, பலவீனமாகுமான்னே இன்னும் தெரியலையே!
க.சரண்பிரபாகரன், குப்பாயிவலசு.
‘`தி.மு.க அரசு செயல்படத் தவறியதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளன’’ - ஆளுநர் உரைக்குப் பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து பற்றி கழுகார்..?
செயல்படத் தவறியது தி.மு.க அரசா மத்திய அரசா என்பதை விடுங்க... ஒழுங்கா மாஸ்க் போட்டுக்கிட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிச்சு, வெளிய சுத்தாம இருக்கறதுன்னு... நாம சரியா செயல்பட்டோமான்னு கொஞ்சம் யோசிப்போம்!

கணேசன், திருப்பத்தூர்.
அரசு வேலைதான் உசந்ததா என்ன?
எந்த வேலை என்றாலும், நீங்கள் செய்யும் முறையில்தான் முன்னேற்றம் இருக்கிறது கணேசன். “வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை. விரும்பிச் செய்பவன் அரசன்” என்பார் ஓஷோ.
கண்ணு, திருநெல்வேலி.
வீடில்லாதவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறதே... இதைப் பாராட்டவா அல்லது வீடில்லாமல் இன்னும் இருப்பவர்களை நினைத்து வருத்தப்படுவதா?
அவர்களும் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதால், அவர்களையும் கருத்தில்கொண்டமைக்குப் பாராட்டலாம். அவர்களின் நிலையை மாற்றி, அந்த வருத்தத்தைப் போக்கினால் அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்தலாம்!
சீ.பாஸ்கர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி.
ஆன்லைன் வகுப்புகள் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு வரமா, சாபமா?
பள்ளி, கல்லூரிக்குச் சென்று படிக்கும் அனுபவம் என்பது தனி. வெளியுலகம் அறிய அதுதான் மிக முக்கியம். ஆனால் பெருந்தொற்றுக் காலத்தில் இப்படியான ஒரு வாய்ப்பிருப்பது வரம்தான். அந்த வரத்தைச் சாபமாக்கிக்கொள்ளாமல் இருப்பது அவரவர் கையில்தான் உள்ளது!
எம்.ராஜேந்திரன், லால்குடி.
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவருக்குமான புரிதல் இப்போது எப்படி இருக்கு?
‘ஒருவருக்கொருவர் நம்பிக்கையாக இருங்கள். ஆனால் கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு பொன்மொழி உண்டு. அதன்படி இருப்பதாச் சொல்றாங்க பாஸ்!

பச்சையப்பன், கம்பம்.
மாவட்டம்விட்டு மாவட்டம் சென்று மது அருந்துபவர்களைப் பற்றி?
தமிழகக் ‘குடி’மகன்கள் நிலையைக் கணக்கிலெடுத்துக்கொண்டால், இன்றைய சூழலில் கண்டம்விட்டு கண்டம் சென்றுகூடக் குடிப்பார்கள் போல. அந்த அளவுக்கு மதுவுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். நகைச்சுவையாகச் சொன்னாலும், இதுதான் இன்றைய முகத்திலறையும் உண்மை!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!