Published:Updated:

கழுகார் பதில்கள்

ரமா - அம்பேத்கர்
பிரீமியம் ஸ்டோரி
ரமா - அம்பேத்கர்

சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம்தான் உருவாக்க வேண்டும்.

கழுகார் பதில்கள்

சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம்தான் உருவாக்க வேண்டும்.

Published:Updated:
ரமா - அம்பேத்கர்
பிரீமியம் ஸ்டோரி
ரமா - அம்பேத்கர்

@திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

“எடப்பாடி பழனிசாமி, கட்சியை உருவாக்கிக் கொடுத்த ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை. ஆட்சியை உருவாக்கிக் கொடுத்த சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை” என்று கருணாஸ் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறாரே?

கூவத்தூரிலிருந்து வெளியே வந்ததும் இதைச் சொல்லி பதவியைத் துறந்திருந்தால், இந்த விமர்சனத்துக்கு ஆதரவு கிடைத்திருக்கும். இத்தனை வருடங்கள் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, சீட் கிடைக்காத விரக்தியில் பேசுவதை - அதில் உண்மையிருந்தாலும் - மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

@பி.அசோகன், கோபிசெட்டிபாளையம்.

தேர்வு சமயத்தில் மட்டும் படிக்கும் மாணவனுக்கும் - தேர்தல் சமயத்தில் மட்டும் செயல்படும் அரசியல் கட்சித் தலைவருக்கும் என்ன வித்தியாசம்?

“முன்னது மாணவனின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தீர்மானிப்பது; பின்னது ஒரு நாட்டின் மக்களுடைய தலைவிதியையே தீர்மானிப்பது. ரெண்டு பேருமே வெற்றிக்குப் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்!

தி.நகர் கிருஷ்ணா, சென்னை - 17.

பொதுவாக, ‘நல்ல தலைவர்கள், நல்ல குடும்பஸ்தர்களாக இருப்பதில்லை’ என்கிறார்கள். உண்மைதானா?

எல்லா பொதுவிதிகளும் எல்லோருக்கும் பொருந்துவ தில்லை... பாபா சாகேப் அம்பேத்கர், தன் மனைவி ரமாவுக்கு எழுதிய கடிதத்தில் உள்ள வரிகள் இவை: “சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம்தான் உருவாக்க வேண்டும். நம் நிலைமை இப்படியிருப்பதால், யஷ்வந்துக்கு உயர்ந்த கல்வியை நீ வழங்க வேண்டும் என விரும்புகிறேன். அவன் முறையாக ஆடையணிவதை உறுதி செய்வதோடு, சமூகத்தில் பண்புநலன்களோடு பழகவும் பயிற்றுவிக்கவும் நீ அவன் மூளையில் லட்சியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.”

குடும்பமும் சமூகமும் வேறு வேறு இல்லையே!

ரமா - அம்பேத்கர்
ரமா - அம்பேத்கர்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருவரும் பின்வரிசையில் அமர்ந்து அமைதியாக இருப்பது என்?

அப்படி அமைதியாக இல்லாமலிருந்திருந்தா வாரிசுகளுக்கு சீட் வாங்க முடிஞ்சிருக்குமா பாஸ்?

@பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

“ஜெயலலிதா இறந்ததற்குக் காரணம் கருணாநிதியும் ஸ்டாலினும்தான்!” என்று முதல்வர் பழனிசாமி கூறியது சரியா?!

ஆறுமுகசாமி ஆணையத்திடம் சொல்ல வேண்டியதைத் தேர்தல் பிரசாரத்தில் சொல்வது முதல்வருக்கு அழகா?

@பெ.பச்சையப்பன், கம்பம்.

“தேர்தலுக்கு துரோகிகள் பண மூட்டைகளுடன் மக்களைச் சந்திக்க வருகிறார்கள்” என்கிறாரே டி.டி.வி.தினகரன்?

மூட்டைகளைக் குறித்து, 20 ரூபாய் நோட்டு பேசுவது, ஊசியைப் பார்த்து சல்லடை, ‘உன்கிட்ட ஒரு ஓட்டை இருக்கு’ என்று சொல்வதுபோல இருக்கிறது!

@சுகன்யா, பொன்னியம்மன்மேடு.

தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கு, பா.ஜ.க-வில் சேர்ந்த நான்கு மணி நேரத்தில் சீட் கொடுத்திருப்பது..?

ஞாயிறன்று கட்சியில் சேர்ந்த சரவணனுக்கு அன்றே சீட் கொடுத்ததுகூட பரவாயில்லை. ஆனால், ‘அவர் சனிக்கிழமையே ஆன்லைனில் கட்சியில் சேர்ந்துவிட்டார்’ என்று பா.ஜ.க தமிழகத் தலைவர் எல்.முருகன் கொடுத்த முரட்டு முட்டுதான் வேடிக்கையாக இருக்கிறது!

ஆர்.ஜெயலட்சுமி, மதனந்தபுரம் - 600 125.

தன்னலம் கருதாமல் பொதுநலன் கருதும் அரசியல்வாதிகள் இன்றைய சூழலில் இருக்கிறார்களா?

கண்டா வரச் சொல்லுங்க... அவரைக் கையோடு கூட்டிவாருங்க!

வண்ணை கணேசன், சென்னை-110.

ஆரோக்கியமான கூட்டணி என்றால் என்ன?

அட, நீங்க வேற... காலையில் ஒரு கட்சி ஆபீஸில் கேரட் ஜூஸ், மதியம் ஒரு கட்சி ஆபீஸில் ஃப்ரூட் சாலட், மாலை இன்னொரு கட்சி ஆபீஸில் சுண்டல் சாப்பிட்டுவிட்டு கூட்டணி பேசிக்கிட்டிருக்கறதுதான் ஆரோக்கியமான கூட்டணினு ஆகிப்போச்சு பாஸ்!

கழுகார் பதில்கள்

கண்ணப்பன், பொன்னேரி.

மம்தா பானர்ஜி விபத்து வைரலானதை கவனித்தீர்களா கழுகாரே?

“காயம்பட்ட புலி மிகவும் ஆபத்தானது!” என்று சொல்லி அவர் கட்டுப்போட்ட காலோடு வீல்சேர் யாத்திரை நடத்தியதையும் கவனித்தோம்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

பா.ஜ.க-வில் சீனியரான கௌதமிக்கு சீட் கிடைக்கவில்லை. சமீபத்தில் வந்து சேர்ந்த குஷ்புவுக்குக் கிடைத்துவிட்டதே?

முந்தைய இதழின் கழுகார் பதிலில், குஷ்பு போட்ட ட்வீட்டில் நான்கு கும்பிடு போட்டிருந்ததைக் குறிப்பிட்டிருந்தோமல்லவா... அந்தக் குறியீட்டுக்கு அர்த்தம் இப்போது புரிகிறதா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism