Published:Updated:

கழுகார் பதில்கள்

சரத்குமார் - கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
சரத்குமார் - கமல்

‘குதிரை சவாரி செய்கிறவன் குதிரையாக விரும்ப மாட்டான்’ என்றொரு சீனப் பழமொழி உண்டு

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘அம்மாவின் ஆட்சி அமைப்போம்’ என்று எடப்படி பழனிசாமியும் சொல்கிறார்; டி.டி.வி.தினகரனும் சொல்கிறாரே?


யாரும் மக்களின் ஆட்சி அமைக்கத் தயாரில்லை என்பது தெரிகிறது!

கழுகார் பதில்கள்

ராஜ், விருதுநகர்.

‘கமல்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று சரத்குமார் தைரியமாக அறிவித்துவிட்டாரே?


மூணு சீட்களைத் திருப்பிக் கொடுத்தவர் வேறென்ன சொல்வார்?

கழுகார் பதில்கள்

கே.கே.பாலசுப்ரமணியன், கோவை.

கட்சிகளிடமிருந்து வசூலாகும் பெரும் பணத்தைப் பார்த்து, ‘ஐபேக்’கும் கட்சி ஆரம்பிக்குமா?


‘குதிரை சவாரி செய்கிறவன் குதிரையாக விரும்ப மாட்டான்’ என்றொரு சீனப் பழமொழி உண்டு. ரிலாக்ஸாக சம்பாதிக்கிற விஷயத்தை ரிஸ்க்காக மாற்றிக்கொள்ள யார் முன்வருவார்கள்?

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

தி.மு.க வேட்பாளர் அறிவிப்பில், கலைஞர் கருணாநிதியின் அணுகுமுறை - மு.க.ஸ்டாலினின் அணுகுமுறை எப்படி?


இருவரின் பட்டியலிலும் வாரிசுகளுக்குக் குறையிருக்கவில்லை!

அலெக்ஸ் ராஜ், விருகம்பாக்கம்.

‘வெற்றிநடை போடும் தமிழகத்தில்’ கொரோனா எப்படி வந்தது?


கொரோனாவுக்கு வெற்றிநடையும் தெரியாது... விடியுமா விடியாதா என்றும் தெரியாது... பார்த்து கவனமா இருந்துக்க வேண்டியது நாம்தான்!

மாணிக்கம், கிருஷ்ணகிரி.

‘`விருகம்பாக்கத்தில் போட்டியிடாமலிருக்க என்னை 10 கோடிக்கு விலை பேசினார்கள்’’ என்று சொல்லியிருக்கிறாரே சினேகன்?

“ஒரு கோடிப்பே...”

“நீ பார்த்த..!”

கழுகார் பதில்கள்

ராஜ கண்ணப்பன், கன்னியாகுமரி.

சமீபத்தில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டவர் யார்?

உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவட். “விமானத்தில் போகும்போது, ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் போட்டிருந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் வேறு இருந்தன. அந்த உடை மூலம் அவர் என்ன சொல்ல விரும்புகிறார் இந்தச் சமூகத்துக்கு?” என்று பேசியிருக்கிறார் அவர். பலத்த எதிர்ப்பு பற்றிக்கொள்ள, #RippedJeansTwitter என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள் பெண்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தப் பிற்போக்குத்தனமான உடையரசியலையும் உணவு அரசியலையும் பேசிக்கொண்டிருக்கப் போகிறார்கள் இவர்கள்?

கழுகார் பதில்கள்

பழனி மாணிக்கம், மடத்துக்குளம்.

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.2,60,000 என்று குறிப்பிட்டிருக்கிறாரே... எதிலிருந்து அந்த வருமானம் வருகிறது அவருக்கு?


அவருக்கு இருக்கும் கதை சொல்லும் திறமைதான் ஊரறிந்ததாயிற்றே... சினிமா கதை விவாதங்களில் கலந்துகொண்டிருப்பார்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

எம்.ஜி.ஆர்., கருணாநிதி இருந்த அரசியலில் பணப்பட்டுவாடா செய்ததுண்டா?


எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1982 பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வருக்காக ஆண்களுக்கு ஐந்து ரூபாயும், பெண்களுக்கு இரண்டு ரூபாயும் கொடுத்ததாக அன்றைய நாளிதழில் செய்திகள் வந்தன. பணம் எல்லாக் காலத்திலும் அங்கொன்றும் இங்கொன்று மாக அரசல்புரசலாக இருந்ததுதான். திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பிறகு ‘இதெல்லாம் சாதாரணம்’ என்பதுபோலப் பரவலாகப் பேசப்பட்டு வளர்ந்து நிற்கிறது!

கணேசன், சென்னை.

நடிகர் கார்த்திக், டி.ராஜேந்தர் ஆகியோர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து..?


ஓ... அதனால்தான் எடப்பாடி பழனிசாமி, ‘அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும்’ என்று தைரியமாகச் சொல்கிறார்போல!

@சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

இன்றைய தமிழகத் தேர்தல் களத்தில், எந்த அலையும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?


பண அலை கூடவா?

@திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் இல்லாத ஆட்சி இனி தமிழகத்தில் வருமா?


ஆனாலும், இவ்வளவு பேராசை கூடாது அர்ஜுனன்!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

அரசியல்வாதிகள் தங்களது பிரசாரத்தில், மக்களுக்கு கொரோனா தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அக்கறை காட்டுகிறார்களா?


அப்படி அக்கறையா இருக்கறவங்களா இருந்தா, இவ்வளவு கூட்டத்தைக் கூட்டவிட மாட்டார்களே!

@பொன்விழி, அன்னூர்.

அடுத்த துரைமுருகனா அன்பில் மகேஷ்?


தொன்றுதொட்டு அரசவைகளில் அரசரை மகிழ்விக்க ஒரு சிலர் இருப்பார்களே... கட்சிகளில் மட்டும் இருக்கக் கூடாதா என்ன!?