
தன்னைப் புகழ்வதை விரும்பாமல், இப்படியொரு கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கும் எங்கள் நிரந்தர முதல்வரே... சின்னக் கலைஞரே...
இல.கண்ணன், நங்கவள்ளி.
``சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் புகழ் பாடக் கூடாது’’ என்றும், ``கூட்டத்தொடர் முழுவதும் கலந்துகொள்ள வேண்டும்’’ என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருக்கிறாரே?
“தன்னைப் புகழ்வதை விரும்பாமல், இப்படியொரு கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கும் எங்கள் நிரந்தர முதல்வரே... சின்னக் கலைஞரே... உளங்கவர் ஓவியமே... உற்சாகக் காவியமே...” என இதற்காகவே புகழ்ந்து தள்ளுவார்கள் பாருங்கள்!

கிடையூர் மாணிக்கம், சேலம்.
‘அமைதிப் பூங்கா, அமைதிப் பூங்கா’ என்று அடிக்கடி சொல்கிறார்களே... அப்படியென்றால் என்ன?
ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சட்டம்-ஒழுங்கு பற்றிப் பேசும்போது அடிக்கடி குறிப்பிடும் அந்த அமைதிப் பூங்காவை நானும் உங்களைப்போல வெகுகாலமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
உதயநிதி ஸ்டாலின் முதல்வராக இருப்பதுபோலவும், மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பதுபோலவும் கனவு கண்டேன். பலிக்குமா?
கனவு காணும்போது, தலையை வடக்குப் பக்கமாக வைத்திருந்தீர்களா... தெற்குப் பக்கமாக வைத்திருந்தீர்களா?
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
இளமைக்கு வேகத் தடையாக அமைவது எது..?
வறுமை... நோய்மை!
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
எந்தப் புள்ளிவிவரத் தகவல் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது?
‘கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் (2018 - 2021), தலித் மக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக நாடு முழுவதும் 1,89,945 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன’ என்ற தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளிவிவரத் தகவல்.
பா.ஜெயப்பிரகாஷ், தேனி.
‘2024, இந்தியாவுக்குக் கொடுக்கப்படும் இறுதி வாய்ப்பு’ என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எச்சரித்திருப்பது பற்றி..?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் காலமிருக்கிறதே..!
இல.கண்ணன், நங்கவள்ளி.
“மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே மோதல் இல்லாமல் இருந்தால், டெல்லி பத்து மடங்கு முன்னேறியிருக்கும்” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லியிருப்பது குறித்து..?
டெல்லி மட்டுமா?
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
“ஓட்டைப் பிரிப்பதல்ல... நாட்டைப் பிடிப்பதுதான் என் வேலை” என்ற சீமானின் பேச்சு..?
எதுகை மோனை ஒலிக்கப் பேசுவதில் கெட்டிக்காரர் சீமான். நேரமிருந்தால், மரபுக் கவிதைகள் எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தலாம்.
அன்னூரார் பொன்விழி, அன்னூர்.
‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்ற பட்டினத்தார் பாடலை யார் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்?
பணம்... பொருள்... பதவி... அதிகாரம்... இன்னும் இன்னும் வேண்டும் எனப் பேராசையில், நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக நினைவில்கொள்ள வேண்டிய வரிகள்.
தே.அண்ணாதுரை, தேனி.
உண்மையில் திருச்சி தி.மு.க கோஷ்டியில் சண்டை முடிந்துவிட்டதா?
நேரு பூத்த நெருப்பாக... சாரி, ‘நீறு பூத்த நெருப்பாக’ உள்ளே இன்னும் கனன்றுகொண்டிருப்பதாகத்தான் சொல்கிறார்கள்!

டி.சிவக்குமார், திண்டுக்கல்.
உட்கட்சிப்பூசல் இல்லாத கட்சி, எந்தக் கட்சி?
நகைச்சுவை நடிகரும், வில்லன் நடிகருமான மன்சூர் அலிகான் நடத்திவரும் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’யைச் சொல்லலாம்!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!