Published:Updated:

கழுகார் பதில்கள்

ஓ.பன்னீர் செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர் செல்வம்

ஃபின்லாந்தில் மக்கள் கட்டவேண்டிய வரிகள் அதிகம். ஆனால், வரியை மக்கள் நலனுக்கே உபயோகிப்பதால் மக்களிடம் வரி குறித்த புகார்கள் இல்லை.

கழுகார் பதில்கள்

ஃபின்லாந்தில் மக்கள் கட்டவேண்டிய வரிகள் அதிகம். ஆனால், வரியை மக்கள் நலனுக்கே உபயோகிப்பதால் மக்களிடம் வரி குறித்த புகார்கள் இல்லை.

Published:Updated:
ஓ.பன்னீர் செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர் செல்வம்

@சரோஜா பாலசுப்பிரமணியன்.

ஒரு வழியாக பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகிவிட்டார். இனியாவது ஜெ-யின் மரணத்தில் மர்மம் விலகுமா?

‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே... என்னமோ நடக்குது; மர்மமா இருக்குது...’ இப்போதைக்கு இந்தப் பாட்டு மட்டும்தான் பதில்!

கழுகார் பதில்கள்

வாசுதேவன், பெங்களூரு.

குடும்பச் சண்டை - உட்கட்சிப் பூசல்... ஒப்பிடுங்களேன்?

சில உட்கட்சிப் பூசல்கள் குடும்பச் சண்டைக்கும், சில குடும்பச் சண்டைகள் உட்கட்சிப் பூசல்களுக்கும் காரணமாக இருக்கின்றன. அவ்வளவுதான்!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

உலக அளவில் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலலை எந்த அடிப்படையில் தயாரிக்கிறார்கள்? அதில் ஃபின்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதற்கு என்ன காரணம்? இந்தியாவுக்கு 136-வது இடம்தானாமே?

ஃபின்லாந்தில் மக்கள் கட்டவேண்டிய வரிகள் அதிகம். ஆனால், வரியை மக்கள் நலனுக்கே உபயோகிப்பதால் மக்களிடம் வரி குறித்த புகார்கள் இல்லை. உதாரணமாக, கல்விக்கும் பொதுச் சுகாதாரத்துக்கும் அந்த வரித்தொகை செலவழிக்கப்படுவதால் மிகக்குறைந்த செலவில் இவை இரண்டும் மக்களுக்குக் கிடைக்கின்றன. அளவுக்கு அதிகமாகப் பணம் சேர்க்க மக்கள் அங்கே ஆர்வம் காட்டுவதில்லை என்கிறது ஓர் ஆய்வு. குடும்பம், நண்பர்களோடு நேரம் செலவழிக்காமல், வேலை நேரத்துக்குப் பிறகும் அலுவலகத்தில் இருப்பவர்களை அலுவலகங்கள் ஊக்குவிப்பதே இல்லை. பிரசவகால விடுப்பு, தங்கள் பணியை, தங்கள் பணி நேரத்தை மக்களே தேர்வுசெய்யும் சுதந்திரம், ஊழலற்ற நிர்வாகம், மக்களுக்கு அரசு தரும் பாதுகாப்பு என்று நிறைய காரணிகள் சொல்லப்படுகின்றன. அதேசமயம், 140 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவை, 55 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஃபின்லாந்துடன் ஒப்பிட்டு ‘பின்தங்கியிருக்கிறோமே’ என்று வருந்துவதும் சரியல்ல!

கழுகார் பதில்கள்

கௌசிக் சௌந்தர், அரியலூர்.

தேர்தலில் வெற்றிபெற்ற பிறகாவது எதிராளியை மதிக்கும் போக்கு நம் நாட்டில் இல்லையே?

ஒரு காலத்தில் இருந்தது! 1967 தேர்தலில், காமராஜர் தோற்றுவிட்டார் என்று தகவல் வருகிறது. எதிர்முகாமில் இருந்த அண்ணா மிகவும் வருந்தினார். “காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்” என மனம் திறந்து சொன்னார் அண்ணா. அதோடு, காமராஜரே தோற்றுவிட்டதால் சங்கடத்தி லிருக்கும் காங்கிரஸ்காரர்களை மேலும் சங்கடப்படுத்தக்கூடாது என்பதால் வெற்றிக் கொண்டாட்டங்களைச் சில நாள்கள் தள்ளிப்போடவும் தன் கட்சியினரைக் கேட்டுக்கொண்டார் அண்ணா.

கழுகார் பதில்கள்

சுகன்யா, சென்னை-110.

இன்றைய அரசியலில் ஜால்ரா போடுவது, சுயநலமாக இருப்பது... எது அதிகம் நடக்கிறது?

ஜால்ரா போடுவதே சுயநலனுக்குத் தானே!

மாணிக்கம், திருப்பூர்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ் கூறிய பதில்களைக் கேட்டு, ஜெயலலிதாவின் ஆன்மா என்னவெல்லாம் நினைத்திருக்கும்?

தெரியாது!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

வருமானத்துக்குள் வாழ்க்கை நடத்த அரசியல்வாதிகளால் முடியாதா?

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்... அரசியல்வாதிகளும் வருமானத்துக்குள்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஆனால், என்ன வருமானம், எப்படி வருமானம் என்பதை மட்டும் நாம் ஆராயக் கூடாது!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ விவகாரத்தில், ‘இந்தத் திரைப்படத்தின் முக்கிய விளம்பரதாரர் பிரதமர்தான்’ என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளாரே?

அவரின் விமர்சனத்தை முழுமையாகப் புறக்கணிக்க முடியாது. போகிற போக்கைப் பார்த்தால், தயாரிப்பாளர்கள் தங்களின் பட புரொமோஷனுக்கு இனி சினிமா நடிகர்களை நாடாமல் அரசியல்வாதிகளைத்தான் நாடுவார்கள்போலிருக்கிறது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!