Published:Updated:

கழுகார் பதில்கள்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பிரீமியம் ஸ்டோரி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திடீரென்று அரசியலுக்குள் பிரவேசித்து, முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகிவிட்டால் அது ‘அதிசய’ ராகம்.

கழுகார் பதில்கள்

திடீரென்று அரசியலுக்குள் பிரவேசித்து, முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகிவிட்டால் அது ‘அதிசய’ ராகம்.

Published:Updated:
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பிரீமியம் ஸ்டோரி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அ.யாழினி பர்வதம், சென்னை-78

அரசியலில் நடிகை ரோஜா, குஷ்புவைவிட வேகமாக முன்னேறுகிறார்போல இருக்கிறதே!

குஷ்பு அரசியலில் நுழைவதற்கு ஒரு தசாப்தத்துக்கு முன்பிருந்தே அரசியலில் இறங்கியவர் ரோஜா. கடந்த 14 வருடங்களாக ஒரே கட்சியில் இருக்கிறார். அதற்கான பலனை அவர் அறுவடை செய்துகொண்டிருக்கிறார்!

கழுகார் பதில்கள்

வாசுதேவன், பெங்களூரு.

ஒருகாலத்தில் ஐந்து நாள்கள் நடைபெற்ற திருமணவிழா, எதிர்காலத்தில் ஐந்து நிமிடங்களில் முடிந்துவிடும்போலிருக்கிறதே?

90-ஸ் கிட்ஸ்ல பல பேர் இன்னும் கல்யாணமே ஆகலைன்னு கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்க. நீங்க என்னடான்னா, அஞ்சு நாள் நடக்க மாட்டேங்குதேன்னு ஃபீல் பண்றீங்க!

தே.மாதவராஜ், இராமநாதபுரம், கோவை.

`இரவில் விசாரணைக் கைதிகளைக் காவல் நிலையத்துக்கு அழைத்துவரக் கூடாது’ என்று டி.ஜி.பி பேசியது சாத்தியமா?

ஏன் சாத்தியமில்லை? மனித உரிமை என்கிற அடிப்படை உரிமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் இல்லை, அக்கறையும் இல்லை. தொடர்ந்து, காவல் நிலையங்களில் அதிகார வன்முறை தலைவிரித்தாடும் இந்த நேரத்தில், டி.ஜி.பி-யின் வார்த்தைகளைப் பத்தோடு பதினொன்றாகக் கடந்து போய்விடாமல், அதை நடைமுறைப்படுத்த நாம் வலியுறுத்த வேண்டும். காவல்துறைக்குள்ளிருந்தே இப்படி ஒரு குரல் வரும்போது, நாமே சாத்தியமா என்று அதைச் சந்தேகிக்கலாமா?

உஷா, அரியலூர்.

ஜென் கதை சொல்லி ரொம்ப நாளாச்சே கழுகாரே?

‘The Golden Wind’ என்பது ஜென் துறவிகள் சொல்லும் ஒரு முக்கியமான ஆன்மிகக் கூற்று. உம்மான் என்ற ஜென் குருவிடம் “இலைகளெல்லாம் கீழே விழுந்து மரங்கள் மொட்டையாக இருக்கும்போது, என்ன நடக்கும்?” என்று ஒரு சீடர் கேட்டபோது, அவர் சொன்ன பதில்தான், “பொன்னான காற்று!” அதாவது, உங்கள் மனதிலிருக்கும் எண்ணங்கள், முழுமையாக மனதிலிருந்து விழுந்து உங்கள் உள்ளுணர்வு வெறுமையாக நிற்கும் நிலையில், இலைகளற்ற மரம், தன் வேரைப் பார்ப்பதுபோல உங்களுக்குள் நீங்கள் உங்களைப் பார்த்துக்கொள்வீர்கள். அப்போது வீசுவது ‘பொன்னான காற்று’ என்கிறது ஜென்!

சிவாஜி, சென்னை.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் பனிப்போர் முடிவுக்கு வர வாய்ப்பு உண்டா?

“ரெண்டு பேரும் தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தாத்தான், மூணாவதா யாரும் வராம இருப்பாங்கங்கற ஸ்ட்ராட்டஜிதான் இது”னு தொண்டர்கள் மத்தியில ஒரு பேச்சு உண்டு பாஸ்... யுத்தம் முடியாது!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

அரசியல்வாதி வாழ்வில் அதிசயராகம் எது... ஆனந்தராகம் எது... அழகியராகம் எது... அபூர்வராகம் எதுங்க சார்?

திடீரென்று அரசியலுக்குள் பிரவேசித்து, முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகிவிட்டால் அது ‘அதிசய’ ராகம். அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தால், அது ‘ஆனந்த’ராகம். களத்தில் இறங்கி மக்கள் குறைகளைத் தீர்த்து, நல்லபெயர் எடுத்தால் அது அவருக்கும்... மக்களுக்குமே ‘அழகிய’ராகம். அப்படி நல்லபெயர் எடுக்க முடிகிற அரசியல்வாதியாக இந்த சமூகத்தில் இருப்பதே ஓர் ‘அபூர்வ’ராகம்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

“நாள் முழுவதும் உழைக்கிற பிரதமர் மோடியை எதிர்கொள்ள, அவரைவிட இரண்டு மடங்கு உழைக்கிற நபரை விரைவில் காங்கிரஸ் தலைமைப் பதவிக்குக் கொண்டுவர வேண்டும்!” என்று ப.சிதம்பரம் கூறியிருப்பது பற்றி?

மோடியை வாயாரப் புகழ்கிறபோது, லேசாக காங்கிரஸ் பற்றியும் பேசியிருக்கிறார்!

கழுகார் பதில்கள்

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

‘பள்ளிகளில் மூர்க்கமாக நடந்துகொள்ளும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் திருத்த வேண்டும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறாரே?

எப்படித் திருத்துவது என்பதில்தான் பிரச்னையே. கல்வித்துறை, மாணவர்களை உளவியல்ரீதியாக இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘அட்சய திருதியை’க்கு தங்கம் வாங்கினால், கோடீஸ்வரர் ஆகிவிடலாமா?

சென்ற அட்சய திருதியைக்கு உங்கள் பகுதியில் தங்கம் வாங்கி கோடீஸ்வரரானவர்கள் எத்தனை பேர் என்று ‘எண்ணி’ப் பார்த்தாலே தெரியுமே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism