அலசல்
அரசியல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

அரசியல்வாதிகள் என்ன கணக்கு போட்டாலும், மக்கள் எப்போதுமே தாங்கள் விரும்புவதை அதிரடியாகச் செய்துவிடுகிறார்கள்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

“இதோ வர்றேன்... அதோ வர்றேன்...” என்று உதார்விட்டு கடைசிவரை ரஜினி ஏமாற்றியதுபோல், தளபதி விஜய்யும் ஏமாற்றிவிடுவாரா?

இந்த விஷயத்தில், ரஜினியைவிட விஜய் புத்திசாலி என்று நினைக்கிறேன்.

ப.பாலசுப்பிரமணியம், திருவள்ளூர்.

‘வாக்குவங்கி’ என்கிறார்களே... அதில் எப்படிப் பணம் போடுவது, எடுப்பது?

அந்த வித்தை தெரிந்துவிட்டால் 2026-ல் நீங்கள்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்.

விஜய்
விஜய்

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

யாருக்கெல்லாம் படுத்தவுடன் தூக்கம் வரும்?

தினசரி உடற்பயிற்சி செய்பவர்கள், நல்ல முதலாளியிடம் வேலை செய்பவர்கள், கடன் இல்லாதவர்கள், புரிந்துணர்வுள்ள இணையரும், குழந்தைகளும், நண்பர்களும் வாய்க்கப்பெற்றவர்கள்.

அருமை நாயகம், நாகூர்.

சபரீசன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?

எண்ணிக்கொண்டிருக்கிறார். எதிர்காலம் குறித்துச் சொன்னேன் பாஸ்!

நூல்: வாவரக்காச்சி
நூல்: வாவரக்காச்சி

கோதண்டபாணி, திருநள்ளாறு.

அரசியல் கவிதைகள் பரிந்துரைத்து நாளாச்சே கழுகாரே..?

பொச்சாட்டிக் குருவிகள்

எத்தனை பெரிய தோகை

அரிதாகத்தான்

விரிக்கிறது மயில்

இந்தப் பொடிக்குருவி பாருங்கள்

தம்மாத்துண்டு நீளம்

வெடுக் வெடுக்கெனப்

பொழுதுக்கும்

ஆட்டுகிறது

ஆட்டுவதில்தான்

எத்தனை பெருமிதம்

அதிகாரப் படிநிலை

சின்ன அதிகாரம்

பெரிய அலட்டல்

எங்கணும்.

- லிபி ஆரண்யா

(நூல்: வாவரக்காச்சி)

மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை.

மரணம் மரியாதையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

வாழ்வு மரியாதையாக இருக்க வேண்டும்.

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி.

இப்போதும் நீங்கள் விளையாட நினைக்கிற சிறுவயது விளையாட்டு என்ன கழுகாரே?

கிச்சுக் கிச்சுத் தாம்பூலம்!

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை கழுகார் பார்ப்பதுண்டா..?

வி.ஐ.பி பாக்ஸில் அப்பாவிபோல் அமர்ந்தபடி சினிமா புள்ளிகள், அரசியல் புள்ளிகளின் கொண்டாட்டங்களை, சேட்டைகளை ரசித்துப் பார்ப்பதுண்டு.

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

எது வீரம்..?

பகைவரையும் நேசிக்க முயல்வது!

மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை.

கனவுகளுக்கு உயிர் கொடுப்பது எப்படி?

கனவுகளை விதைகள் என நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வியர்வையை எவ்வளவுக்கு எவ்வளவு அதில் சிந்துகிறீர்களோ, அவை நிச்சயம் உயிர்கொண்டு முளைத்து எழும்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

எம்.எஸ்.விஸ்வநாதன் - இளையராஜா இருவரும் இணைந்து இசையமைத்தது மாதிரி, ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா இணைந்து ஒரு படத்துக்கு இசையமைத்தால் எப்படி இருக்கும்?

பாரதிராஜாவும் மணி ரத்னமும் இணைந்து ஒரு படமெடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும்.

நாகராஜன், அம்பை.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் குறித்து கழுகாரின் கருத்து..?

அரசியல்வாதிகள் என்ன கணக்கு போட்டாலும், மக்கள் எப்போதுமே தாங்கள் விரும்புவதை அதிரடியாகச் செய்துவிடுகிறார்கள்!

ஓ.பி.எஸ், டி.டி.வி, இ.பி.எஸ்
ஓ.பி.எஸ், டி.டி.வி, இ.பி.எஸ்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“ஓ.பி.எஸ் - டி.டி.வி சந்திப்பு மாயமான், மண்குதிரை போன்றது” என்ற இ.பி.எஸ்-ஸின் விமர்சனம்?

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தில்தானே ‘மாயமான்’ இடம்பெறுகிறது?!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!