Published:Updated:

கழுகார் பதில்கள்

கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, லட்சக்கணக்கான மக்களின் ரத்தம் இந்த மண்ணை நிறைத்தது

கழுகார் பதில்கள்

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, லட்சக்கணக்கான மக்களின் ரத்தம் இந்த மண்ணை நிறைத்தது

Published:Updated:
கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

‘பத்தல பத்தல’ பாட்டில் ஒன்றிய அரசை விமர்சித்திருக்கிறாரே கமல்..?

மேடையில் முழங்கி விமர்சிக்கவேண்டியதை, பாட்டுக்கிடையே வைத்தால் சினிமா ரசிகர்களுக்குள்ளேயே முடங்கிவிடாதா..? `குழாயடில உருண்டு என்ன பண்றது..?’ என்ற வடிவேலு டயலாக்தான் நினைவுக்கு வருகிறது!

எஸ்.இராமதாஸ், வாணரப்பேட்டை, புதுச்சேரி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அற்புதம்!

கழுகார் பதில்கள்

திருப்பூர். அர்ஜுனன். ஜி, அவிநாசி.

அமைச்சர்கள் சிலர் தங்கள் பேட்டியின்போது, அடிக்கடி `மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி...’ என்கிறார்களே... ஏன்?

வணக்கம் வைக்காததால் பதவி இழந்த வரலாறெல்லாம் அரசியலில் உண்டு அர்ஜுனரே... அதெல்லாம் கண்ணுல வந்துபோகுமால்லியா!

கௌசிக் சௌந்தர், அரியலூர்.

நச்சென ஒரு பழமொழி?

“உன்னை யாரேனும் முட்டாள் என்று சொன்னால், அமைதியாக இரு. பேசி, அதை நிரூபித்துவிடாதே!”

காவ்யா, அரியலூர்.

பிரிவினைகள், கலவரம், போர் போன்றவற்றில் தொடர்ந்து மனிதர்கள் நம்மைச் சுற்றி இறந்து கொண்டிருக்கிறார்கள். நாம் எதை உணராததால், மௌனமாக இருக்கிறோம்?

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, லட்சக்கணக்கான மக்களின் ரத்தம் இந்த மண்ணை நிறைத்தது. அவற்றைத் தன் படைப்புகளில் எடுத்துவைத்தவர்களில், மிக முக்கியமானவர் சாதத் ஹசன் மண்ட்டோ. அவரது ஒரு மேற்கோள், உங்கள் கேள்விக்கு விடையாக இருக்கும். “ஒரு லட்சம் இந்துக்களும் ,ஒரு லட்சம் முஸ்லிம்களும் இறந்துபோனார்கள் என்று சொல்லாதீர்கள். இரண்டு லட்சம் மனிதர்கள் இறந்துபோனார்கள் என்று சொல்லுங்கள்.” - நாம் உணரவேண்டியது இதைத்தான்!

கழுகார் பதில்கள்

இரா.அருண்குமார், புதுச்சேரி.

“தி.மு.க பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது” என்று அண்ணாமலை பேசியிருப்பது?

அண்ணாமலை ‘வெங்காயம்’ குறித்து இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும். ‘வெங்காயத்துக்கு’ இந்திய அரசியலில், வரலாற்றில் பெரிய இடமுண்டு!

உஷா, தஞ்சாவூர்.

விளம்பரங்களை ஏன் மக்கள் அப்படியே நம்பிவிடுகிறார்கள்?

ஒளிப்பதிவாளர் செழியன் இந்த விளம்பரங்களைப் பற்றிப் பேசும்போது, பிளாட்டோவின் மேற்கோள் ஒன்றைக் குறிப்பிட்டிருப்பார்: “அவசரத்திலிருக்கும் மனிதனால் எதையும் சிந்திக்க முடியாது!” அதனால்தான்.

மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

நீதிமன்றம் ஏன் அவசியமாகிறது?

சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், ‘தாஜ் மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வுசெய்ய வேண்டும்’ என பா.ஜ.க இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சொன்னவற்றின் சுருக்கம்:

“தாஜ் மஹால் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஆய்வுசெய்ய எம்.ஏ., நெட், ஜே.ஆர்.எஃப் உள்ளிட்ட படிப்பு படித்து ஆய்வு செய்யுங்கள். இன்று தாஜ் மஹால் அறையைத் திறக்கச் சொல்கிறீர்கள், நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா? பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையைக் கேலிக்கூத்தாக்காதீர்கள்!” - இப்படிச் சொல்லிக் குட்டுவதற்கு!

சண்முக சுந்தரம், துடியலூர்.

நாம சொல்றதைக் கேட்காம, பேசிக்கிட்டே இருக்கற நண்பனுக்கு என்ன சொல்லலாம்?

ஏழு சொற்கள் உள்ள திருக்குறளில், ஐந்து முறை செல்வம் என்ற சொல்லைப் பயன்படுத்தி, செவியால் கேட்டறிவது எப்பேர்ப்பட்ட செல்வம் என்று வள்ளுவரே கூறியதை நண்பனுக்குச் சொல்லுங்கள். `கற்றலின் கேட்டல் நன்று’ என்று அவரே கூறியுமிருக்கிறார். வாயை மூடிக்கொள்ளலாம், கண்ணை மூடிக்கொள்ளலாம், நுகர்வதைத் தடுக்க மூச்சை நிறுத்தி மூக்கின் செயல்பாட்டைக்கூட இன்னோர் உறுப்பின் துணையின்றி மூடிக்கொள்ளலாம். ஆனால் கேட்டுக்கொண்டே இருக்க எப்போதும் திறந்திருக்கும் காதை, அதிகம் உபயோகப்படுத்தச் சொல்லுங்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!