அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

பேரரசு, நித்தியானந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
பேரரசு, நித்தியானந்தா

வெற்றிபெற்ற ஒருவர், நமது தேசப் பின்புலம்கொண்டவர் என்று சந்தோஷப்படுகிற மனநிலையில் பெரிய ஆபத்தில்லை.

வைகை சுரேஷ், தேனி.

இயக்குநர் பேரரசுவுக்கு ‘கைலாசா தர்ம ரட்சகர்’ விருது அறிவித்திருக்கிறார் நித்தியானந்தா. விருது விழா எங்கே நடக்கும், பேரரசு இயக்கும் அடுத்த படத்தின் பெயர் `கைலாசா’வாக இருக்குமா கழுகாரே?

இந்த நேரத்தில் எனக்கு பேரரசு இயக்கிய கடைசி படமான ‘திகார்’ டைட்டில்தான் நினைவுக்கு வருகிறது.

கழுகார் பதில்கள்

@வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“பிரதமர் மோடி ஓர் அவதாரத்தைப் போன்றவர். அவர் விரும்பினால், அவர் உயிருடன் இருக்கும்வரை பிரதமராக இருக்கலாம்” என்ற உ.பி பெண் மந்திரி குலாப் தேவியின் பேச்சு?

அரசியலை, தேர்தலை, ஜனநாயகத்தை, மக்களை, இந்த தேசத்தை இவர்கள் எப்படிப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது, சிரிப்பாகவும் இருக்கிறது; வேதனையாகவும் இருக்கிறது.

பெ.பச்சையப்பன், கம்பம்.

‘தன்வினை தன்னைச் சுடும்’ என்பதற்குச் சமீபத்திய உதாரணம்?

இரண்டு ஆணைய அறிக்கைகள்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

“நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படத்தை அச்சடிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் யோசனை தெரிவித்திருக்கிறாரே?

அந்த யோசனைகளை அவர் மீடியா முன்னிலையில் சொல்லும்போது, அவருக்குப் பின்னாலிருந்த சுவரில் அம்பேத்கர் படமும், பகத் சிங் படமும் மாட்டப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இருவருமே இந்தியப் பொருளாதாரம் குறித்த நுட்பமான, நவீனமான பார்வையைக்கொண்டவர்கள், அக்கறைகொண்டவர்கள். அவர்களை நினைத்துப் பாவமாக இருந்தது.

சரவணக்குமார் சின்னசாமி, தாராபுரம்.

ரிஷி சுனக்கின் பூர்வீகத்தை அகழ்வாராய்ச்சி செய்து, அவர் இந்தியரா, பாகிஸ்தானியரா என்று கண்டுபிடிப்பதில் நமக்கு என்ன லாபம்?

வெற்றிபெற்ற ஒருவர், நமது தேசப் பின்புலம்கொண்டவர் என்று சந்தோஷப்படுகிற மனநிலையில் பெரிய ஆபத்தில்லை. ஆனால் அவர் என்ன மொழி, என்ன மதம், என்ன சாதி என அகழ்வாராய்ச்சி செய்வது நல்ல விஷயம் அல்ல!

@தேவ் ஆனந்த், நெல்லை.

‘தன்னைவிடச் சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள்’ என்று கவிஞர்கள் ஒப்புக்கொள்வார்களா?

ஜாய்ஸ் கில்மர் எனும் அமெரிக்கக் கவிஞரின் கவிதைதான் உங்களுக்கான பதில்.

மரம்

அறிவேன் மரத்தைப் போலும்

அழகானதொரு கவிதையைக்

கண்டதில்லை நான்.

மரத்தின் பசித்த வாய்

அழுந்தப் பதிந்திருக்கும்

மண்ணின் தாய்மையூறும் மார்பில்.

தனது இலைக்கரங்களைக் கூப்பித் தொழுத வண்ணம்

நாள் முழுவதும் கடவுளைப் பார்த்தவாறே நிற்கிறது மரம்.

கோடையில் ராபின் பறவைகளின் கூட்டினை

தனது கூந்தலில் சூடியிருக்கும் அது.

பனி உறைந்திருக்கும் அதன் நெஞ்சில்

மழையுடன் கூடி அணுக்கமாக அது உயிர்வாழும்.

கவிதை என்னைப் போன்ற முட்டாள்களால்

எழுதப்படுகிறது...

ஆனால் கடவுளால் மாத்திரமே

மரத்தினைப் படைக்க முடியும்.

@வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

வடமாநிலம் ஒன்றில், இந்தி நடிகர்களின் பெயர்களில் கழுதைகள் விற்பனை நடந்திருக்கிறதே?

தீபாவளி சமயத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த கழுதைச் சந்தையில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் சிங், ஹிர்த்திக் ரோஷன் பெயர்களிலெல்லாம் கழுதைகள் விற்கப்பட்டிருக்கின்றன. கழுதையின் சுமக்கும் தன்மையை அதாவது, அதன் பலத்தைக் குறிப்பிடும்விதமாகவும் சுவாரஸ்யத்துக்காகவும் அப்படிப் பெயர்வைத்ததாகச் சொல்கிறார்கள் வியாபாரிகள். சுமார் 15,000 கழுதைகள் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. 1,000 ரூபாயில் தொடங்கி 5 லட்ச ரூபாய் வரை விலைபோயிருக்கின்றன. வடக்கில் பல மாநிலங்களில் கட்டடப் பணிகள் முதல் சுமக்கும் வேலைகள் பலவற்றுக்கும் கழுதைகளே பயன்படுத்தப்படுவதால், இந்தக் கழுதைச் சந்தை இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

கழுகார் பதில்கள்

@வாசுதேவன், பெங்களூரு.

‘காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விடுபட்டது நிம்மதியாக இருக்கிறது’ என சோனியா காந்தி கூறியிருக்கிறாரே?

மைண்ட் வாய்ஸைச் சத்தமாகப் பேசிவிட்டார்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!