அரசியல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

கடந்தகால, நிகழ்கால ஊழல்வாதிகள் களையெடுக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில்தான், ஸ்டாலினுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தார்கள்.

குணசேகரன், பொள்ளாச்சி.

ரெய்டு, விசாரணையெல்லாம் வருமென்று தெரிந்தும், தவறு செய்பவர்கள் குற்றம் செய்ததை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சமூகத்தில் பெரிய மனிதர்கள்போலவே சுற்றித் திரிகிறார்களே?

அதைத்தான் ‘அகப்படும்வரை ஒருவன் அரசனைப்போல் சுற்றித் திரிவான்’ என்கிறது பாரசீகப் பழமொழி!

தமிழரசிமணி, வெள்ளக்கோவில்.

இதுவரையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றதில்லை என்கிற சாதனையை தவறவிட்டதுமில்லாமல், நியூசிலாந்துடனான போட்டியிலும் தோற்றிருக்கிறதே இந்தியா?

வெற்றி தோல்வி நிரந்தரமானதல்ல. சாதனைகள் எல்லாமே முறியடிக்கத்தான். இது மாதிரியான போட்டிகளில் விளையாட்டுதான் வெல்கிறது. இப்போதாவது தோல்வியடைந்த வர்கள், வெற்றிக்காகத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பலாம்!

தே.மாதவராஜ், ராமநாதபுரம், கோவை.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் கேள்வி கேட்க யாருமே இல்லையா?

பதில் சொல்லத்தான் யாரும் இல்லை!

கழுகார் பதில்கள்

இல கண்ணன், நங்கவள்ளி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் ஸ்டேஷன், அரசுப் பேருந்து, அரசுப் பள்ளிகள் எனத் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார். இவற்றை கழுகார் எப்படிப் பார்க்கிறார்?

ஆய்வுகள் செய்வது அரசனுக்கு அழகு. அந்த ஆய்வு, ஒரு நாள் விழாவாக இல்லாமல், அங்கு நடக்கும் தவறுகளுக்குத் தீர்வு தருவதாக அமைந்தால் சிறப்பு!

சொக்கலிங்க ஆதித்தன், திருநெல்வேலி.

அமைச்சர்களின் ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகிவருகின்றனவே? ஸ்டாலின் தைரியமாகக் களையெடுப்பாரா?

கடந்தகால, நிகழ்கால ஊழல்வாதிகள் களையெடுக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில்தான், ஸ்டாலினுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

அரசியல்வாதிகள் ‘மக்களுக்காக உழைக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டாலும், உண்மையில் அவர்கள் உழைப்பது பொதுமக்களுக்கா... தங்களின் ‘மக்களு’க்கா என்று அறிந்துகொள்வது எப்படி?

நடக்கற ரெய்டு, விசாரணை, ஊழல் குற்றச்சாட்டெல்லாம் பார்த்துமா இந்தக் கேள்வி மூர்த்தி?

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

இனி பா.ம.க-வின் எதிர்காலம் யார் கையில் இருக்கிறது?

தனக்கு அன்பானவரின் கையில் இருக்க வேண்டும் என்பது ராமதாஸின் எண்ணம்!

@சரோஜா பாலசுப்ரமணியன்

நாட்டு மக்களை ஒற்றுமையுடன் கொண்டுசெல்வதை விட்டுவிட்டு, அவர்களைப் பிரித்து வேற்றுமையைப் புகுத்துகிறார்களே தலைவர்கள்?

இதுக்கெல்லாம் மக்கள் பலியாகிவிடக் கூடாது என்றுதான், பள்ளியின் முதல் வகுப்பிலேயே ‘ஒரு சிங்கமும் நான்கு எருதுகளும்’ கதை சொல்லி வளர்க்கப்பட்டிருக்கோம்!

ராமகிருஷ்ணன், மடத்துக்குளம்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “நாங்க எல்.கே.ஜி படித்தபோதே பல ரெய்டுகளைப் பார்த்தவர்கள். இப்போ நாங்க டபுள் டிகிரி. எங்களை யாரும் பயமுறுத்த முடியாது” என்கிறாரே?

‘ஆரம்பத்துலருந்தே நாங்க இப்படித்தான்’னு சொல்றதெல்லாம் ஒரு பெருமையா மகாபிரபு?

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

முருகேசன், தஞ்சாவூர்.

‘பிரதமர் எதற்கும் பதில் சொல்வதில்லை’ என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறதே?

மக்களைக் கையாள்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலம், போவா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜோகிந்தர் பால், பிரசாரப் பொதுக்கூட்டத்தில் “ஐந்து வருடங்களாகத் தொகுதிக்கு என்ன செஞ்சீங்க?” என்று தன்னிடம் கேள்வி கேட்ட இளைஞனைச் சரமாரியாக அடித்திருக்கிறார். பா.ஜ.க-வைக் கேள்வி கேட்கும் காங்கிரஸ், இதற்கான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். இவர்களுக்கு நடுவில் மக்கள்தான் பாவம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!