அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

ரஜினி - கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி - கமல்

அதெல்லாம் நிகழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. விளையாட்டு வெறும் விளையாட்டாக இருந்த வரைக்கும் பிரச்னை இல்லை.

ம.ரம்யா ராகவ், திருப்பூர்.

கமல் - ரஜினி இருவரில், தமிழ் சினிமாவில் அதிகம் சாதித்துக் காட்டியவர் யார்?

இருவரின் பாதைகள் வேறு, கருத்துகள் வேறு, நம்பிக்கைகள் வேறு, திறமைகளும்கூட வேறு வேறுதான். இருவருமே தங்கள் அளவில் தனித்துவமான சாதனையாளர்கள். சினிமாவைப் பொறுத்தவரை ஒருவர் சகலகலா வல்லவன்... ஒருவர் அதிசயப் பிறவி!

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

முந்தைய அரசியல்வாதிகளைப்போல் இன்றைய அரசியல்வாதிகள் தேனாகப் பேசுவதில்லையே ஏன்?

என்ன சொல்றீங்க மாடக்கண்ணு... நாட்டில் நடக்கும் தேர்தல் பிரசாரங்களையெல்லாம் கவனிப்பதில்லையா?

@அமுதவாணன், திருவாரூர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை முன்வைத்து அறிவிக்கப்பட்ட ‘முழு அடைப்புப் போராட்டத்தை மாநிலத் தலைமை அங்கீகரிக்கவில்லை’ என்று பல்டியடித்துவிட்டாரே அண்ணாமலை?

இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானா... ‘அண்ணாமலை அரசியலில்’ இதெல்லாம் சாதாரணமப்பா!

@வாசுதேவன், பெங்களூரு.

குஷ்புவிடம், கனிமொழி மன்னிப்புக் கேட்டிருப்பது..?

நல்ல பண்பு... மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு வழங்குவதும்தான் மனிதகுலம் இன்னும் அழிந்துவிடாமல் நிலைத்திருப்பதன் பிரதான காரணம்.

கா.கு.இலக்கியன், சென்னை.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கும் மனப்பக்குவத்தை இழந்துவருகிறோமா?

அதெல்லாம் நிகழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. விளையாட்டு வெறும் விளையாட்டாக இருந்த வரைக்கும் பிரச்னை இல்லை. அதில் பணம், விளம்பரம், வியாபாரம், அரசியல் என்று வரும்போது மக்கள் உணர்வுரீதியாகத் தூண்டப்படுகிறார்கள். ஒரு தேசத்தின் டீம் கிரிக்கெட்டில் ஜெயிப்பதை, பெரும் போரில் வென்றதுபோல மக்களைக் கொண்டாடவைப்பதே ஓர் உளவியல் விளையாட்டுதான்.

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி,

அறம் சார்ந்த வாழ்க்கை யாருக்கு இன்றியமையாதது... இல்லறவாசிகளுக்கா... ஆன்மிகவாதிகளுக்கா... அரசியல்வாதிகளுக்கா?

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும்! அதேசமயம், ஆன்மிகவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சற்றுக் கூடுதலாகவே இருக்க வேண்டும். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்கிறார் அரசியல் துறந்து ஆன்மிகவாதியான இளங்கோவடிகள்!

திலகர் ஈஸ்வரன், சேலம்.

காந்தாரா?

குழப்பமான அரசியல் பேசிய, சுவாரஸ்யமும் காட்சியனுபவமும் மிக்க புதிய அலை கன்னட சினிமா. படத்தைவிட அதன் வசூல் நம்மை வியக்கவைக்கிறது!

கழுகார் பதில்கள்

தே.மாதவராஜ், ராமநாதபுரம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனநிலைக்கு ஒரு பாட்டை டெடிகேட் செய்யச் சொன்னால், என்ன சொல்வீர்கள்?

‘புதிய பறவை’ படத்தில், கண்ணதாசன் எழுத, டி.எம்.சௌந்தரராஜன் குரல் கொடுக்க, சிவாஜி கணேசன் அற்புதமாக நடித்துப் பாடிய ‘எங்கே நிம்மதி?’ பாடலைத்தான். அதில் வரும் சில வரிகள், முதல்வர் சமீபத்தில் வெளிப்படுத்திய உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பவை. `என்னைக் கொஞ்சம் தூங்கவைத்தால், வணங்குவேன் தாயே... இன்று மட்டும் அமைதி தந்தால், உறங்குவேன் தாயே..!’

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத் தலைப்பு `கழகத் தலைவனா’மே?

அது அவர் ஆசையாக இருக்கும். படத்தின் தலைப்பு ‘கலகத் தலைவன்’. ழகரம் அல்ல லகரம்!

தே.மாதவராஜ், கோயமுத்தூர்.

நாட்டில் நடக்கும் சண்டையைவிட ‘பிக் பாஸில்’ நடக்கும் சண்டை பெரிதாக இருக்கிறதே?

நாடு என்பது மிகப்பெரிய `பிக் பாஸ்’ வீடு. `பிக் பாஸ்’ என்பது ஒரு குட்டி சாம்பிள் நாடு. கவலைப்படாதீர்கள் மாதவராஜ்... `பிக் பாஸ்’ சண்டைகளெல்லாம் 100 நாள்களில் முடிந்துவிடும். நாட்டில்தான்...

@கார்த்திக், மதுரை.

நடிகை நயன்தாரா எப்படி இருக்கிறார்?

ரெட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!