அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

வடிவேலு
பிரீமியம் ஸ்டோரி
News
வடிவேலு

காதல் என்றால் என்ன என்பதில் தெளிவான புரிதல் வந்துவிட்டால், இருவருக்குமே காதல் தோல்வி வராது.

க.பாலகிருஷ்ணன், சுரண்டை.

இந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியிலாவது, பேரழிவை உருவாக்கும் மழை வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மக்களுக்கு இந்த முறை விடியல் வருமா?

அது மழையின் கையில்தான் இருக்கிறது!

எஸ்.சோமசுந்தரம், கும்பகோணம்.

தமிழகத்தில் இப்போது இருக்கும் கூட்டணி 2024 தேர்தலிலும் நீடிக்குமா?

அடுத்த ஆண்டின் (2023) இறுதியில், காட்சிகள் நிறைய மாற வாய்ப்பிருக்கிறது.

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

சாமானிய மக்களைப் பண்டிகைகள் கடனாளியாக மாற்றுகின்றனவா?

நிச்சயமாக. ஆனால், அதையும் தவிர்க்கச் சொன்னால், பாவம் இந்த வாழ்க்கையில் எதை, எப்போது, எப்படித்தான் கொண்டாடுவார்கள்?

வாசுதேவன், பெங்களூரூ.

`எதுவும் நிரந்தரமற்றது’ என்பதை அறிந்தும் மனிதர்கள் பற்று வைப்பதன் காரணம்?

பற்று இல்லாத வாழ்வில் ஒரு சுவாரஸ்யமும் இல்லை என்பதால்!

  கோடந்தூர் மனோகரன், கரூர்.

காதல் தோல்வியில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா, பெண்களா?

காதல் என்றால் என்ன என்பதில் தெளிவான புரிதல் வந்துவிட்டால், இருவருக்குமே காதல் தோல்வி வராது. இதில் எல்லோருக்கும் வர வேண்டிய முதல் புரிதல் என்னவென்றால், காதல் என்பது ஒருவரை அடைவது மட்டுமே அல்ல.

இரா.வளையாபதி. தோட்டக்குறிச்சி.

விரைவில் டிஜிட்டல் கரன்சி வருதாமே..?

ஏற்கெனவே பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தபடி, சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி (நவம்பர் 1-ம் தேதி) அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இது போன்ற முன்னெடுப்புகளை வரவேற்கத்தான் வேண்டும். டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி கண்காணிப்பதால், மோசடிகளும் ஊழலும் குறையலாம் என்கிறார்கள். பார்ப்போம்!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், சென்னை.

“பா.ஜ.க டிக்கெட் கொடுத்தால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று நடிகை கங்கனா ரனாவத் சொல்லியிருக்கிறாரே?

“1947-ல் கிடைத்தது பிச்சை... இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் மோடி பிரதமரான 2014-ல்தான் கிடைத்தது” என்று பேசியவர் கங்கனா. அவர் சீட் கேட்பதிலும், அவருக்கு சீட் கிடைத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

கழுகார் பதில்கள்

கிருஷ்ணா, சென்னை.

‘தி வயர்’ பத்திரிகை அலுவலகத்தில் போலீஸ் சோதனை நடத்தியிருக்கிறதே?

பா.ஜ.க-வின் தேசிய தகவல் தொழில்நுட்பத்துறையின் பொறுப்பாளர் அமித் மால்வியா, ‘தன்னைப் பற்றிப் பொய்ச் செய்தி வெளியிட்டதாக’க் கொடுத்த புகாரின்பேரில், டெல்லி போலீஸார் ‘தி வயர்’ பத்திரிகை அலுவலகம், அதன் ஆசிரியர்களின் வீடுகள் ஆகியவற்றில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். ‘பத்திரிகை அலுவலகத்திலிருந்து பல்வேறு டிவைஸ்களை போலீஸ் எடுத்துச் சென்றதாகவும், மிக மோசமான முறையில் நடந்துகொண்டதாகவும்’ சொல்கின்றனர் ‘தி வயர்’ பத்திரிகைத் தரப்பினர். சர்ச்சைக்குரிய செய்திக்கான விளக்கம் கொடுக்கப்பட்டு, அந்தச் செய்தி நீக்கப்பட்ட பிறகும், ‘ஆளும் புள்ளிகளைத் திருப்திப்படுத்த காவல்துறை இப்படி நடந்துகொள்வது, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர் டெல்லி பத்திரிகையாளர்கள். அதிகாரத்தால் ஒருபோதும் பேனாக்களை மௌனிக்கச் செய்ய முடியாது!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

வடிவேலு மீண்டும் ஒரு ரவுண்டு செமயாக வருவாரா?

அதற்கு உக்கிரமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்!

கழுகார் பதில்கள்

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

ஒரு மனிதன் உண்மையையும் பொய்யையும் ஒரு நாளைக்கு எத்தனை முறை கூற வேண்டும்?

அந்த மனிதர் யார், என்ன தொழில் செய்கிறார் என்பதைப் பொறுத்தது அது. ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் மனிதர் அரசியல்வாதி என்றால், பாவம் அவரால் எப்படி உண்மை கூற முடியும்?

வண்ணை கணேசன், சென்னை.

‘பொன்னியின் செல்வன்’ நூலின் அட்டையில், பாரம்பர்யமாக இடம்பெற்று வந்த ஓவியங்களை மாற்றி, நடிகைகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது சரியா?

புதிய புதிய விளம்பர உத்திகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், அப்படியான முயற்சிகளும் நாவலின் தரத்தைக் குறைக்காதவாறு அமைய வேண்டும்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்.

அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஏன் அரசியலை மட்டுமே தேர்வுசெய்கிறார்கள்?

தன் அப்பா சேர்த்துவைத்திருக்கும் ‘விஷயங்களை’ப் பார்த்துத்தான்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!