
கடவுளுக்கு அடுத்து மனிதர்கள் பயப்படும் பொருளாக கேமரா மாறிக்கொண்டிருக்கிறது, நல்ல விஷயம்தான்.
எச்.மோகன், மன்னார்குடி.
காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க, ராகுல் காந்தி தயக்கம் காட்டுவது ஏன்?
தாங்கமுடியாத தலைவலியை ஏற்றுக்கொள்ள, யார்தான் உடனே முன்வருவார்கள்?

ஸி.சம்பத்குமார், சென்னை-34.
`பஞ்சாப் சிறைக் கைதிகள், சிறை வளாகத்தில் குளியலறையுடன்கூடிய தனி அறையில், தன் கணவன் / மனைவியுடன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனிமையில் செலவிடலாம்’ என்று கூறியிருக்கிறதே பஞ்சாப் அரசு?
ஆமாம். பஞ்சாப் மாநிலத்தில் கோவிந்த்வால் சாஹிப் மத்திய சிறை, பதிண்டா பெண்கள் சிறை, நபா மாவட்ட சிறை ஆகிய மூன்று சிறைகளில் செப்டம்பர் 20-ம் தேதி முதல் கைதிகள் தங்கள் இணையருடன் தாம்பத்யம் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது. அமிர்தசரஸ் உட்பட மேலும் சில மத்திய சிறைகளிலும், மாவட்ட சிறைகளிலும் இத்தகைய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது நடைமுறைக்கும் வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
மாற்றங்கள் வரவேற்கத்தக்கவைதான். ஆனால், சில குற்றவாளிகளையும், சில சிறை நிர்வாகங்களையும், சில காவலர்களையும் நினைத்துப் பார்க்கும்போது ‘பகீர்’ என்கிறது!
கிருஷ்ணா, தி.நகர், சென்னை.
சமீபகாலமாக அரசியலில் ஏகப்பட்ட வீடியோக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றனவே?
கடவுளுக்கு அடுத்து மனிதர்கள் பயப்படும் பொருளாக கேமரா மாறிக்கொண்டிருக்கிறது, நல்ல விஷயம்தான். ஆனால், சின்னச் சின்ன வீடியோக்களை வைத்து அரசியல் செய்வதன் மூலம், பெரிய பெரிய பிரச்னைகளின் பக்கம் மக்களின் கவனம் போய்விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள் அரசியல்வாதிகள்.
அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.
மத்தியிலும் மாநிலத்திலும் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலை பற்றி?
எதிர்க்கட்சி இல்லாத அரசு, கடிவாளம் இல்லாத குதிரையைப் போன்றது. இஷ்டத்துக்குச் செல்லும். நிலைமை இப்படித்தான் தொடரப்போகிறது என்றால், மக்களும் ஊடகங்களும்தான் எதிர்க்கட்சி வேலைகளைப் பார்க்க வேண்டும்.
எச்.மோகன், மன்னார்குடி.
அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்று எதைக் கூறுவீர்கள்?
‘அரசியல்’ என்று நான் சொல்ல வேண்டும் என்பது உங்களின் எதிர்பார்ப்பு. அப்படித்தானே?
வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு, சென்னை-110.
இன்றைய அரசியலில் பாராட்டும் வகையில் நடந்துகொள்பவர் யார்?
இதோ பூதக்கண்ணாடி வாங்கப்போகிறேன்... வாங்கி வந்து தேடிவிட்டுச் சொல்கிறேன்.

சத்தியமூர்த்தி, கோவை.
“ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை” என்கிறாரே போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்?
சொத்து வரி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வே ஏழைகளை பாதிக்காது என்று சொல்பவர்கள், ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழைகளை பாதிக்கும் என்று ஒப்புக்கொள்வார்களா?

ஆனந்த், கான்சாபுரம், நெல்லை.
கவிஞர்களின் கண்கள் தனித்துவமானவை என்கிறார்களே ஏன்?
எத்தனையோ முறை அம்மாக்களோ அக்காக்களோ விளக்கேற்றுவதை, அந்த விளக்கின் சுடரை நாம் பார்த்திருக்கிறோம். இந்தக் கவிதையை எழுதிய கவிஞனின் கண்களால் நம்மால் பார்க்க முடிவதில்லையே... அதனால்தான்!
மிகச்சரியான அளவில்
திரியில் சுடர் வைப்பது ஒரு கலைதான்.
அம்மா எப்போதும் ஒரு நீர்த்துளிபோல
மின்னும்படி சுடர் வைப்பார்.
தூரத்து உறவுப்பெண் ஒருத்தி
மயில்தோகையைப்போல
எப்படியோ மஞ்சளும், பச்சையுமாகத் தழல வைப்பாள்.
பெரிதும் யாருடனும் பேசாத
கூட வேலைபார்க்கும் பெண்
வைக்கின்ற சுடர்
யோசித்து யோசித்து உதிரும் ஒரு சொல்லைப்போல
திக்கித்
திக்கி
நிற்கிறது எப்பொழுதும்.
- பா.திருச்செந்தாழை
****
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!