Published:Updated:

கழுகார் பதில்கள்

‘வியூகங்கள் சரியில்லை’ என்று அடிமட்டத் தொண்டன் சொன்னால், ‘யாருடைய வியூகங்கள்?’ என்று கேட்கலாம்.

பிரீமியம் ஸ்டோரி

D.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘உ.பி., லக்கிம்பூரில் நடந்த வன்முறைச் சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் செயல்பாடு நாடகம்’ என்று பா.ஜ.க குற்றம்சாட்டுகிறதே?

‘நமது ஆட்சிக்காலத்தில் இப்படியெல்லாம் நடந்துவிட்டதே’ என்று வெட்கப்படுவதை விட்டுவிட்டு, ‘பிரியங்காவும் ராகுலும் ஆறுதல் சொல்லச் சென்றது நாடகமா இல்லையா’ என்ற ஆராய்ச்சி அக்கப்போரை நடத்திக்கொண்டிருக் கிறார்கள். அமைதியாக நடந்து செல்பவர்களை இடித்துக் கொல்லும் அளவுக்கு வெறி கொண்டவர்களைக் கண்டுபிடித்து, சரியான தண்டனை வழங்கி பா.ஜ.க தன்மீதான விமர்சனத்தைத் துடைத்துக்கொள்ள வேண்டும்!

நடராஜன் கணேசன், விழுப்புரம்.

மம்தா பானர்ஜி, நந்திகிராமில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்றதையும், பவானிப்பூரில் நின்று வென்றதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நந்திகிராமில் சுவேந்து அதிகாரியை எதிர்த்து நின்று, `அரசியலில் எதற்கும் அஞ்ச மாட்டேன்’ என்கிற இமேஜை உருவாக்கிக்கொண்டார். பவானிப்பூரில் 58,832 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து, `பா.ஜ.க-வுக்கு காங்கிரஸைவிட நான்தான் மாற்று’ என்று தன்னை மேலதிகமாக முன்னிறுத்துவது விமர்சனத்துக்குரிய ராஜதந்திரம்!

கழுகார் பதில்கள்

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

தி.மு.க அரசை மதிப்பீடு செய்ய எவ்வளவு காலம் தேவை?

ஒவ்வொரு நாளும் மதிப்பீடு செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்... மக்கள்!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

அரசியல் தந்திரம் தெரியாத அரசியல்வாதி யார்?

அந்தத் தந்திரம் தெரியாதவர் எப்படி அரசியல்வாதியாக முடியும்?!

ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்.

தேர்தலில் தனக்கு சீட் வழங்கவில்லை என்று உள்ளடி வேலை செய்து தோற்கடிக்கப்படுகிற நிகழ்வை, கட்சித் தலைமையால் கட்டுப்படுத்த முடியாமல் போவது ஏன்?

தகுதியின் அடிப்படையில் சீட் வழங்கப்பட்டால், உள்ளடியே இருக்காதே!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

ஆன்மிகத்துக்கும் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம்?

எது... ஆன்மிகம், அரசியலா... மறுபடி அதையெல்லாம் ஏன் ஞாபகப்படுத்தறீங்க... கதம் கதம்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

“பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, மூன்று கோடி பேருக்குத்தான் பேங்க் அக்கவுன்ட் இருந்தது. இப்போது 43 கோடி பேருக்கு பேங்க் அக்கவுன்ட் இருக்கிறது!’’ என்று ஒருவர் சொல்லியிருக்கிறாரே?

எத்தனை கோடிப் பேருக்கு அக்கவுன்ட் இருக்கிறது என்பது விஷயம் இல்லை. அக்கவுன்ட்டில் என்ன இருக்கிறது என்பதுதான் விஷயம்!

கழுகார் பதில்கள்

மாணிக்கம், திருப்பூர்.

“அ.தி.மு.க-வின் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம், அதன் வியூகங்கள் சரியில்லாததுதான்” என்று யாருடைய வியூகங்களைச் சொல்கிறார் ஓ.பி.எஸ்?

‘வியூகங்கள் சரியில்லை’ என்று அடிமட்டத் தொண்டன் சொன்னால், ‘யாருடைய வியூகங்கள்?’ என்று கேட்கலாம். அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே சொன்னால்? மேலும், பன்னீர் யாரை முன்வைத்துச் சொல்கிறார் என்பது ஊரறிந்த ரகசியம்!

குணசேகர், மடத்துக்குளம்.

கழுகாரின் பாராட்டு யாருக்கு?

மாநிலங்களவையில் நடந்து முடிந்த, ஏழு கூட்டங்களிலும், 245 உறுப்பினர்களில் ஒரே ஒருவராக, 138 வேலை நாள்களில் ஒரு நாள்கூட கூட்டத்தைத் தவறவிடாமல் 100% கலந்துகொண்டிருக்கிறார் அ.தி.மு.கழக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். 75 வயதான அவரின் இந்தப் பொறுப்புணர்வுக்கு பாராட்டுகள்!

கழுகார் பதில்கள்

இல.செ.வெங்கடேஸ்வரன், சத்துவாச்சாரி.

‘ஜூனியர் வாக்கி டாக்கி’ படிக்கும்போது, அதிகாரிகள்மீது அவ்வளவு கோபம் வருகிறது. இதற்குத் தீர்வு என்ன?

இந்தக் கோபத்தை விரயமாக்கிவிடாமல் தேக்கிவைத்துக்கொண்டு, உங்கள் கண்முன்னே அப்படியான அநியாயங்கள் நடக்கும்போது உங்களால் முடிந்த ஏதாவது ஒரு வழியில் அதை வெளிப்படுத்தினால் நன்று!

வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி.

மகாத்மா காந்தி உயிருடன் இருந்திருந்தால், தற்போதைய இந்தியாவின் நிலை பற்றி என்ன கருதுவார்?

சில விஷயங்களுக்காகப் புன்னகைத்து, பல விஷயங்களுக்காகக் கண்ணீர்விடுவார்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு