Published:Updated:

கழுகார் பதில்கள்

அண்ணா - எம்.ஜி.ஆர் - கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
அண்ணா - எம்.ஜி.ஆர் - கருணாநிதி

கேள்வி கேட்பதும், கண்டனம் செய்வதும், கிடுக்குப்பிடி போடுவதும்கூட நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்கச் செயல்பாடுகள் தான்

கழுகார் பதில்கள்

கேள்வி கேட்பதும், கண்டனம் செய்வதும், கிடுக்குப்பிடி போடுவதும்கூட நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்கச் செயல்பாடுகள் தான்

Published:Updated:
அண்ணா - எம்.ஜி.ஆர் - கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
அண்ணா - எம்.ஜி.ஆர் - கருணாநிதி

குணசேகர், தூத்துக்குடி.

“மு.க.ஸ்டாலின் நல்ல திட்டங்களைக் கொண்டுவந்து சிறப்பாக ஆட்சி செய்கிறார்” என்று விஜய பிரபாகரன் பாராட்டியிருக்கிறாரே?

ஓ... தேவாவே சொல்லிட்டாரா?

மஞ்சு வாசுதேவன், பெங்களூரு.

விரைவில் முடியப்போகும் 2021 எப்படி இதுவரையில்?

‘2022 எப்போ வரும்?’ என்று எதிர்பார்க்கும்படி செய்திருக்கிறது!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அன்றைய காலங்களில் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி பேசும் கூட்டங்களில், கட்சி வேறுபாடின்றி மக்கள் கூட்டம் அலைமோதும். இப்போதெல்லாம் அப்படியில்லையே?

பொத்தாம் பொதுவாக ‘அப்படியான மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் இன்று இல்லை’ என்று சொல்லிவிட முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்த மாற்றத்தில் பங்கிருக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி, இரவெல்லாம் விழித்திருந்து தலைவர்களைப் பார்க்க ஏங்கிய சூழல் மாறி, இன்று தங்களது உள்ளங்கையிலேயே தலைவர்களைப் பார்த்துக்கொள்கிறது இந்தத் தலைமுறை!

கழுகார் பதில்கள்

பி.மணி, வெள்ளக்கோவில்.

ஆட்சியில் இருப்பவர்கள், தங்கள் ஆட்சியைப் பற்றி எல்லை மீறிப் புகழ்வது குறையவே குறையாதா?

அரசியல் வியாபாரமாகிவிட்ட சூழலில், அதிலிருப்பவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளக் கூவித்தானே ஆக வேண்டும்?!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

அரசியல்வாதிகளின் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கும் நிகழ்வைப் பார்க்கும்போது என்ன நினைப்பீர்கள் கழுகாரே?

அரசியல்வாதிகளின் பல மரியாதை நிமித்தச் சந்திப்புகளில், மரியாதையைத் தவிர மீதமெல்லாம் இருக்கும் என்பதுதான் சுவாரஸ்யம்!

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

சில வழக்குகளின் விசாரணையின்போது வெளியாகும் செய்திகளில், ‘நீதிபதிகள் சரமாரி கேள்வி’, ‘நீதிமன்றம் கடும் கண்டனம்’, ‘நீதிமன்றம் கிடுக்குப்பிடி’ போன்ற வார்த்தைகள் தரும் நம்பிக்கைகளும் ஆறுதலும் அந்த வழக்குகளுக்கான தீர்ப்பு வரும்போது முற்றிலும் நீர்த்துப்போய் ஏமாற்றத்தை அளித்துவிடுகின்றனவே ஏன்?

கேள்வி கேட்பதும், கண்டனம் செய்வதும், கிடுக்குப்பிடி போடுவதும்கூட நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்கச் செயல்பாடுகள் தான். பல நேரங்களில் நீதிமன்றம் தன் வரம்புக்கு உட்பட்டே தீர்ப்புகளை வழங்க முடிகிறது. ஆனாலும், ஜனநாயக அமைப்பில், நீதிமன்றத்துக்கு அப்பால் நாம் நம்புவதற்கு என்ன இருக்கிறது?

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

மக்கள் குறித்து அரசியல்வாதிகள் என்ன நினைக்கிறார்கள், அரசியல்வாதிகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அரசியல்வாதிகள் மக்களை நினைக்கிறார்கள். ‘ஐந்து வருடங் களுக்கு ஒரு முறையாவது அரசியல் வாதிகள் நம்மை நினைக்கிறார்களே?’ என்று மக்கள் நினைக்கிறார்கள்!

தே.மாதவராஜ், ராமநாதபுரம்.

‘`பா.ஜ.க-வுக்குப் புயல் வேகத்தில் உயிரூட்டுபவர் அண்ணாமலை’’ என்று முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியிருக்கிறாரே?

ஏது... புயல் வேகத்தில் உயிரூட்டுறதா? பாண்டியராஜன் பாடுன பாட்டுல... அண்ணாமலையே வெட்கத்தில் முகம் சிவந்து விட்டாராம்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

டி.ஜெய்சிங், கோவை.

லக்கிம்பூர் வன்முறை மிகவும் கொடுமையானது. அந்தச் சம்பவம் குறித்து எதுவும் கூறாமல் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்?

மக்கள் பிரச்னைகளில் இதுவரை எப்போது அவர் மௌனம் கலைத்தார்?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!