அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

இன்றைய சமூக ஊடக காலத்தில், அவ்வளவு எளிமையாக எதையும் மூடிமறைத்துவிட முடியாது

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கட்சிகளுக்கு வாக்களித்து, ஆட்சிக்குக் கொண்டுவரும் முறைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்” என்ற மோடியின் பேச்சு?

அவரது அதீத ஆசையைத்தான் காட்டுகிறது. காலகாலத்துக்கும் அவரே பிரதமராக இருக்க நினைக்கிறார்போல. ஜனநாயகத்தில் அதற்கெல்லாம் ஒருபோதும் இடமில்லை.

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘`மக்கள் தொடர்புக்குப் பாலமாக இருக்கும் ஊடக நண்பர்களுக்குப் பக்கபலமாக இருப்பது நம் கடமை’’ என அண்ணாமலை தெரிவித்திருக்கிறாரே கழுகாரே?

அப்பாடா... இப்பவாவது புரிந்ததே!

சரவணகுமார் சின்னச்சாமி, தாராபுரம்.

இந்தி எதிர்ப்பு என்பதில், அ.தி.மு.க-வின் நிலைப்பாடு மர்மமாகவே இருக்கிறதே?

பாவம்... அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் எதிர்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

@சரோஜா பாலசுப்ரமணியன்.

தொட்டதற்கெல்லாம் தற்கொலை, கொலை என... இளைய சமுதாயம் எங்கே போகிறது?

காத்திருக்கக் கற்றுத் தர வேண்டும். வீடும் கல்விக்கூடங்களும் இன்னும் லகுவாக, அழகாக, நட்பாக மாற வேண்டும். அனைத்துக்கும் மேலாக, இளைஞர்களுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கை தருகிற சமுதாயச் சூழல் வேண்டும்.

மாணிக்கம், திருப்பூர்.

கட்சியின் தலைவர், மாநிலத்தின் முதல்வர் மேடையில் ஆதங்கப்படும்போதே அமைச்சர் பொன்முடி அசால்ட்டாகச் சிரித்துக்கொண்டிருக்கிறாரே... சாதாரண மக்களின் ஆதங்கத்தைக் கேட்கும்போது என்ன செய்வார்?

நினைத்துப் பார்க்கவே திகிலாக இருக்கிறது!

கழுகார் பதில்கள்

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

மாணவி சத்யப்ரியா கொலை தொடர்பான நடிகர் விஜய் ஆண்டனியின் ட்வீட் சரிதானே?

நிச்சயம் குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒரு பெண்ணுக்கு நடந்திருக்கும் கொடூரத்தின் மீதான விஜய் ஆண்டனியின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவரது பதிவு உணர்ச்சிவசமானது; நிதானமற்றது. நீதித்துறையின் தாமதங்கள் குறித்த அவரது ஆதங்கத்தை மறுப்பதற்கில்லை!

இல.கண்ணன், நங்கவள்ளி.

“அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்புக்கொண்டிருக்கிறாரே?

வேறு வழியே இல்லாமல் ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்றைய சமூக ஊடக காலத்தில், அவ்வளவு எளிமையாக எதையும் மூடிமறைத்துவிட முடியாது. பட்ஜெட் வெளியானபோதே இந்தப் பிரச்னை வரும் என்று மருத்துவச் செயற்பாட்டாளர்கள் எச்சரித்தார்களே!

கி.சீனிவாசன், சிவகங்கை - 630 104.

``சர்வாதிகாரியாக மாறவும் தயங்க மாட்டேன்’’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், மாறவே இல்லையே... இன்னும் அதற்கான நேரம் வரவில்லையா?

நேரமெல்லாம் கடந்து, ரொம்ப தூரம் போய்க்கொண்டிருக்கிறது. அவர் சர்வாதிகாரியாகவெல்லாம் மாற வேண்டாம். ஒரு கட்சித் தலைவராக அவரது அதிகாரத்தையும் கண்டிப்பையும் காட்டினாலே போதும். பார்ப்போம்.

@கிருஷ்ணா, கோவை.

ஆன்மிகத்திலும் சுயநலம், பொதுநலம் உண்டா?

ஒரு கதை சொல்லவா... ஞானமடைந்த புத்தர் சொர்க்க வாசலுக்கு வந்து சேர்கிறார். ஆகப்பெரும் பிரமாண்டத்தை அடையும் தருணம் அது. ஆனாலும், வாசலுக்குள் நுழையாமல் வந்த வழியையே பார்த்துக்கொண்டிருக்கிறார். “இதற்காகத்தானே இத்தனை ஆண்டுகளாக யாத்திரையும் பிரார்த்தனையும் மேற்கொண்டீர்கள். பிறகு ஏன் உள்ளே வருவதில் தயக்கம்?” என வாயிற்காப்பாளன் கேட்கிறான். “எல்லோரும் தமக்காகப் பிரார்த்தனையும் யாத்திரையும் மேற்கொண்டனர். நானோ, எனக்குப் பின்னாலும் பலர் இந்த இடத்தை அடைவதற்காக மேற்கொண்டேன். எனவே, எனக்குப் பின்னால் யாராவது வருகிறார்களா என ஆவலோடு பார்க்கிறேன்” என்றார். மற்றவர்கள் மீதான அக்கறையும் அன்பும்தான் உயர்ந்த ஆன்மிகம்!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

“பட்ஜெட் பணி கடுமையாக இருக்கும்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறாரே?

பட்ஜெட் பணி மட்டுமா... பட்ஜெட், பட்ஜெட்டுக்குப் பிறகான நமது நிலையும்கூட கடுமையாகத்தான் இருக்கும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!