அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்

மன்சூர் அலிகான்
பிரீமியம் ஸ்டோரி
News
மன்சூர் அலிகான்

நம் இந்தியச் சமூகத்தின் முக்கிய நோய்களில் ஒன்றான மத மூடநம்பிக்கைகளின் நீட்சிதான் அந்தச் சம்பவம்.

பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

அ.தி.மு.க-வின் இன்றைய நிலை குறித்தும், தற்போதைய தலைவர்கள் குறித்தும் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன நினைப்பார்?

`அடப்பாவிகளா... உள்ளுக்குள் இவ்வளவு வைத்துக்கொண்டா பவ்யமாகக் குனிந்து நின்றீர்கள்?’

கழுகார் பதில்கள்

தே.மாதவராஜ், கோயமுத்தூர் - 45.

அ.தி.மு.க பொன்விழாவில் ஓ.பி.எஸ் சமாதானப் புறாவைத் தூது விட்டாரே?

அந்தப் புறாவைக் காணவில்லை என்றுதான் இரு தரப்பும் தேடிக்கொண்டிருக்கிறது!

மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை.

விசுவாசம் - அடிமைத்தனம் என்ன வித்தியாசம்?

இரண்டுமே ஒன்றையொன்று பிரிக்க முடியாதது. விசுவாச உணர்ச்சியைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருப்பதுதான் அடிமைத்தனத்தின் மூலதனம்.

இல.கண்ணன், நங்கவள்ளி.

பஞ்சாப்பில் 13 வயது மாணவனை ஓர் ஆசிரியை, திருமணம் செய்திருக்கிறாரே?

நம் இந்தியச் சமூகத்தின் முக்கிய நோய்களில் ஒன்றான மத மூடநம்பிக்கைகளின் நீட்சிதான் அந்தச் சம்பவம். பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் அந்த ஆசிரியை. அவருக்குத் திருமண தோஷம் இருப்பதாகவும், அதை நிவர்த்தி செய்ய ஓர் இளைஞரை பொம்மைத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் ஒரு ஜோசியர் சொல்லியிருக்கிறார். அதை நம்பி, தன்னிடம் டியூஷன் படித்த 13 வயது மாணவனைத் திருமணம் செய்திருக்கிறார் அந்த ஆசிரியை. இதில் கொடுமை என்னவென்றால், அந்த மாணவனை ஒரு வாரம் வீட்டில் தங்கவைத்து முதல் நாள் மருதாணி வைக்கும் நிகழ்வு, திருமணத்துக்குப் பிறகு தேனிலவு, பிறகு வெள்ளைப் புடவை அணிந்து விதவைக் கோலம் பூண்டு, வளையலை உடைத்து, தாலியை அறுத்து என மொத்தக் குடும்பமும் சேர்ந்து சடங்கு செய்து கூத்தடித்திருக்கிறார்கள். மாணவன் நடந்ததைச் சொன்ன பிறகுதான் அவனின் பெற்றோருக்குத் தெரிந்திருக்கிறது. இதில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. நம் கல்விமுறை இன்னும் அறிவியல்பூர்வமானதாக மாற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இந்தச் சம்பவம்.

இன்றைய அரசியலில் எதற்கும் கவலைப்படாமல் இருக்கும் அரசியல்வாதி யார்?

வேறு யார்... மன்சூர் அலிகான்தான்!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

கட்சித் தலைவருக்கான இலக்கணம் பேச்சாற்றலா... நிர்வாகிகளைக் கட்டுப்படுத்துவதா?

பேச்சாற்றலால் நிர்வாகிகளைக் கட்டுப்படுத்துவது.

பெ.பச்சையப்பன், கம்பம்.

காங்கிரஸ் கட்சியில் மட்டும் ஏன் இத்தனை கோஷ்டிப்பூசல்?

அதை மட்டும் கண்டுபிடித்துவிட்டால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்துவிடும்.

@பிரபு, நெல்லை.

“மின்கட்டண உயர்வால் ஆத்திரத்திலுள்ள மக்களை திசைதிருப்ப தி.மு.க நடத்தும் கபட நாடகம்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம்” என்று அண்ணாமலை சொல்கிறாரே?

மின்கட்டண உயர்வு ஒரு பிரச்னை. இந்தித் திணிப்பு ஒரு பிரச்னை. இரண்டையும் போட்டுக் குழப்பி இருவருமே மக்களைத் திசைதிருப்ப வேண்டாம்.

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

ஊர் சுற்றுவதால் எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா?

எதற்காகச் சுற்றுகிறோம் என்கிற தெளிவான புரிதலோடு வாயை நன்கு மூடிக்கொண்டு, கண்களையும் காதுகளையும் நன்றாகத் திறந்துவைத்துக்கொண்டால் ஊரை... ஏன் ஒரு தெருவைச் சுற்றி வந்தால்கூட நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

சரவணன், திநகர், சென்னை.

தீபாவளியில் கழுகாருக்குப் பிடித்த விஷயம்?

விடுமுறையும் பலகாரமும்தான்!

கீதா, சரவணம்பட்டி. கோவை.

கோபத்தில் அழகான கோபம் உண்டா?

‘பின்னால் அமர்ந்திருக்கும் நிறைசூலி மனைவியுடன் சண்டையிட்டபடி, பதனமாக சைக்கிள் மிதிக்கிறான். அப்படி ஓர் அழகான கோபம் எங்கேயும் இல்லை’ என்கிறார் கவிஞர் திருச்செந்தாழை. உண்மைதானே?!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

கழுகார் பதில்கள்

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் பற்றி..?

உங்களுக்கான பதிலை அடுத்த இரண்டு பக்கங்களில் கொடுத்திருக்கிறோம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!