அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

தமிழிசை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழிசை

மகாராஷ்டிராவின் உஸ்மானாபாத் மாவட்டத்திலுள்ள அந்த கிராமத்துக்கும், குரங்குகளுக்குமிடையே மிக அற்புதமான பிணைப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கி.சீனிவாசன், கண்டனூர்.

“தமிழகத்தில் தவறுகள் நடந்தால், தலையையும் நுழைப்பேன், மூக்கையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன்” என்கிறாரே தெலங்கானா ஆளுநர் தமிழிசை?

ஏன்... இங்குதான் ஆர்.என்.ரவி இருக்கிறாரே?!

கழுகார் பதில்கள்

@சத்தியமூர்த்தி, சென்னை.

இன்றைய அரசியலில், தனக்குப் பிறகு தன் வாரிசுதான் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என நினைப்பது, கடந்தகால மன்னராட்சியை நினைவுபடுத்துகிறதே?

போஸ்டர்களிலும் பேனர்களிலும் பல அரசியல் தலைவர்கள் அரச உடைகளில் காட்சியளிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்களே... அதெல்லாம் சும்மா என்று நினைத்துவிட்டீர்களா?

தே.அண்ணாதுரை, கம்பம் புதுப்பட்டி.

சென்னை போக்குவரத்து போலீஸார், போக்குவரத்து விதிகளில் தண்டனைத் தொகையை அதிகரித்து, மக்களை அச்சத்தில் உறையவைத்திருக்கிறார்களே?

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சாலையில் பைக் சாகசம் செய்வது, அச்சுறுத்தும் ஹாரன் ஒலிகளை எழுப்புவது எனப் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும், பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணமாயிருக்கும் ஆசாமிகளுக்கு இந்தத் தண்டனைத் தொகை அதிகரிப்பு அவசியம்தான். ஆனால், விதிகளை ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு ‘வசூலில்’ இறங்கும் சில காவலர்களை நினைத்தால்தான் ‘பகீர்’ என்கிறது.

இல.கண்ணன், நங்கவள்ளி.

மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில், குரங்குகள் பெயரில் 32 ஏக்கர் நிலம் இருக்கிறதாமே... உண்மையா கழுகாரே?

மகாராஷ்டிராவின் உஸ்மானாபாத் மாவட்டத்திலுள்ள அந்த கிராமத்துக்கும், குரங்குகளுக்குமிடையே மிக அற்புதமான பிணைப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த மக்கள் குரங்குகளைத் தங்கள் அன்றாடத்தின், வாழ்வின் ஒரு பகுதியாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கிறார்கள்; அவற்றுக்கு உதவுகிறார்கள். அவையும் மக்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுப்பதில்லையாம். தொன்றுதொட்டு நம் மண்ணில் இருந்துவரும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனும் இயற்கை நேயத்தைத்தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. அந்த கிராமத்துக்கு உட்பட்ட நிலத்தில் 32 ஏக்கர் குரங்குகளுக்காகப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகச் சொல்லும் அந்த கிராமத் தலைவர், ‘எங்கள் முன்னோர்களில் யார், எப்போது அந்த ஏற்பாட்டைச் செய்தது என்று தெரியவில்லை’ என்கிறார்.

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

போராட்டங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டு, கல்யாண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லையே... ஏன்?

எதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது.

@பெ.பச்சையப்பன், கம்பம்.

யாருக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்ல ஆசைப்படுகிறீர்கள்?

உங்களுக்கும், உங்களைப் போன்ற ‘ஜூனியர் விகடன்’ வாசகர்களுக்கும்!

@வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சட்டசபைத் தேர்தல் வந்தால், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஒன்று சேர்வார்களா?

இடையில் ஒரு நாடாளுமன்றத் தேர்தல் இருப்பதை மறந்துவிட்டீர்களே!

@ஜீவன், காரைக்கால்.

‘காங்கிரஸில் எனது பங்களிப்பை கார்கே முடிவுசெய்வார்’ என்ற ராகுலின் பேச்சு?

பக்குவமானது.

@இல.கண்ணன், நங்கவள்ளி.

“எனது பார்வையில், தற்போதைய காலம், பாதுகாப்புத்துறைக்கு பொற்காலம்” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகிறாரே?

அதை மற்றவர்கள் சொல்ல வேண்டும். குறிப்பாக, மக்கள் சொல்ல வேண்டும்.

@சரோஜா பாலசுப்ரமணியன்.

இந்த ஆறுமுகசாமி ஆணையம், அ.தி.மு.க ஆட்சியில் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

அ.தி.மு.க-வுக்குள் இன்னும் நிகழ்வுகள் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கும்!

கழுகார் பதில்கள்
DANIEL LEAL

@வைகை சுரேஷ், தேனி.

பொருளாதார நெருக்கடி காரணமாக, பதவியேற்ற 45 நாள்களில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியை ராஜினாமா செய்திருக்கிறாரே... இந்தியாவில் பொருளாதார நெருக்கடி இல்லையா?

ஹாஹா... உங்கள் ஆசை என்னவென்று நன்றாகப் புரிகிறது சுரேஷ்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!