அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

இயந்திரங்களோடு அதிகாரிகளும் டிஜிட்டல் வேகத்தில் செயல்படுவார்கள் என்று நம்புவோம்.

இல.கண்ணன், நங்கவள்ளி.

சர்வதேச அளவில் பிரதமரால் இந்தியில் பேச முடிகிறது என்றும், பிறகு எது நம்மைச் சங்கடப்படுத்துகிறது என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா கேட்கிறாரே..?

“ஒருவனிடம், உனக்குத் தெரிந்த மொழியில் பேசும்போது செய்தி அவன் காதுக்குள் மட்டும் செல்லும். அவனுக்குத் தெரிந்த மொழியில் பேசும்போது. அவன் இதயத்துக்குள் செல்லும்” என்று ஒரு பொன்மொழி உண்டு. என்ன மொழியில் பேசுகிறோம் என்பதல்ல, நம் பேச்சு எங்கு சென்றடைகிறது என்பதே முக்கியம்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

‘பிரதமர் மோடி நேரடியாக வந்தால்தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’ என்று மத்தியப்பிரதேச கிராமவாசி அடம்பிடித்து மறுத்திருக்கிறாரே?

மத்தியப்பிரதேச மாநில ‘தார்’ மாவட்டத்தில், கிக்காவாஸ் கிராமத்தில்தான் இது நடந்திருக்கிறது. அதேபோல பீகாரிலும் ஒன்று நடந்தது. பீகாரின் ககாரியா மாவட்ட கிராம வங்கியில் கணக்குவைத்திருந்த ரஞ்சித் தாஸ் என்பவருக்கு, மார்ச் மாதம் 5.5 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் வந்திருக்கிறது. தவறுதலாக அவர் கணக்கில் பணம் போடப்பட்டதை ஆறு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள், நடந்ததைச் சொல்லி திருப்பிக் கேட்டிருக்கிறார்கள். “பிரதமர் தருவதாகச் சொன்ன 15 லட்சத்தின் முதல் தவணை என்று நினைத்துச் செலவழித்துவிட்டேன். என்னிடம் பணம் இல்லை” என்று சொல்லியிருக்கிறார் ரஞ்சித் தாஸ். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இப்படியான சம்பவங்களை கவனித்துப் பார்க்கும்போது, மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

தலைமைச் செயலகம் ஜனவரிக்குள் ‘டிஜிட்டல்’ மயமாகப்போகிறதாமே?

இயந்திரங்களோடு அதிகாரிகளும் டிஜிட்டல் வேகத்தில் செயல்படுவார்கள் என்று நம்புவோம்.எதுவாக மாறினாலும், மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்!

ம.ரம்யாரமணி, குப்பம், ஆந்திரா.

பொதுவாகவே தேர்தலில் கூட்டணி வைக்கின்ற கட்சிகள், அந்தத் தேர்தலோடு கூட்டணியை முறித்துக்கொள்ள முனைப்புக் காட்டுவது ஏன்?

கொள்கை அடிப்படையில் வைத்துக்கொள்வதுதான் கூட்டணி. இப்போது நடப்பதெல்லாம் சீட் பங்கீட்டுக்கான தேர்தல் உடன்படிக்கை மட்டுமே. அப்பறம்... சுமையை இறக்கினதும் சும்மாட தலையிலயேவா வெச்சுருப்பாங்க?

கழுகார் பதில்கள்

தே.மாதவராஜ், ராமநாதபுரம்.

ஏழாவது முறையாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதைக் கொண்டுவந்தார்?

ஆறு முறை என்ன கொண்டு வந்தாரோ அதையேதான்..!

இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.

இன்று இருப்பதிலேயே நன்றாக நடிக்கும் அரசியல்வாதி யார்?

அதுக்குத்தான் இந்திய அளவுல ஒரே போட்டா போட்டியா இருக்கே பாஸ்! யாரு யாரை மிஞ்சுறாங்கனு வெயிட் பண்ணிப் பார்ப்போம்!

கே.விஸ்வநாதன், கோயமுத்தூர்.

‘உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி’ என்று சொல்பவர்கள், கூட்டணிக் கட்சிகள் தவிக்கவிட்டதால்தானே தனித்துப் போட்டியிடுகிறார்கள்?

உள்ளாட்சி அளவில் தங்கள் தொண்டர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களையும் திருப்திப்படுத்தி, கட்டமைப்பை வலுப்படுத்துவது என்பது ஒவ்வொரு கட்சிக்கும் முக்கியம் அல்லவா!

த.சிவாஜி மூக்கையா, சென்னை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ரொம்பவும் நல்லவராக இருக்கிறாரே?

நல்லதுதான். ஆனால் நல்லவராக மட்டுமல்லாமல் வல்லவராகவும் இருக்க வேண்டும்!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், சென்னை.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த இத்தனை ஆண்டுகளில் கட்சித்தாவல் அதிகரித்துவிட்டது எனவும், அதில் அதிகம் பாதித்தது காங்கிரஸ்தான் என்றும் தோன்றுகிறதே?

2016-ல் அருணாச்சல பிரதேசம், 2017-ல் கோவா, மணிப்பூர், பீகார், 2018-ல் மேகாலயா. 2019-ல் சிக்கிம், 2020-ல் மத்தியப்பிரதேசம், 2021-ல் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்ததன் புள்ளிவிவரங்கள் நீங்கள் சொன்னதைத்தான் சொல்கின்றன!

மாணிக்கம், திருப்பூர்.

ஓ.பி.எஸ்-ஸும் இ.பி.எஸ்-ஸும் தி.மு.க-வை எதிர்க்கும் மனநிலையில் இருப்பதுபோலத் தெரியவில்லையே?

என்ன பாஸ் இப்படிச் சொல்லிட்டீங்க? ‘கொடநாடு மறு விசாரணை’னு செய்தி வந்ததும், கறுப்பு பேட்ஜெல்லாம் குத்திக்கிட்டு சட்டமன்றத்துலயே எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணுனாங்களே பாக்கலியா நீங்க?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!