Published:Updated:

கழுகார் பதில்கள்

ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
ராமதாஸ்

விசுவாசம் என்பது கேள்விகளே அற்ற நம்பிக்கை என்றுதான் பார்க்கப்படுகிறது.

கழுகார் பதில்கள்

விசுவாசம் என்பது கேள்விகளே அற்ற நம்பிக்கை என்றுதான் பார்க்கப்படுகிறது.

Published:Updated:
ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
ராமதாஸ்

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

அரசியல் எந்தத் தருணத்தில் களங்கமடைகிறது?

ஜனநாயகக் கடமையைச் செய்ய ஒருவன் காசு வாங்க ஆரம்பிக்கும்போது!

வண்ணை கணேசன், சென்னை-110.

முதல்வர் ஸ்டாலின், அடிக்கடி சைக்கிள் பயணம் மேற்கொண்டு அதிரடி காட்டுகிறாரே?

அவர் தேகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உடற்பயிற்சிக்காகவும்தான் செல்கிறார். இதில் என்ன பாஸ் அதிரடி?

மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை’ என்பது மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வின் பிரசாரமாக இருக்கிறதே?

ஐந்தாண்டுகளுக்கு முன்பு வாக்கு கொடுத்து நிறைவேற்றாதவர்கள், ஆறு மாதங்களுக்கு முன்பு வாக்கு கொடுத்து நிறைவேற்றாதவர்களைக் குறை கூறுகிறார்கள். பாவம் மக்கள்!

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

‘வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து’ என்று கேரளாவில், கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது பற்றி..?

இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகமுள்ள மாநிலம், கடவுளின் தேசம் என்றெல்லாம் கொண்டாடப்படும் கேரளா, வரதட்சணை விஷயத்தில் மட்டும் இன்னும் பின்தங்கி பிற்போக்காக இருப்பது வேதனை. ஆனால், அதை உணர்ந்து, மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இது போன்ற அறிவிப்புகள் மூலம் அதைக் குறைக்கும் முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும்!

சுப்ரமணியன், ஆயக்குடி, பழனி.

மனதளவில் காயப்பட்டிருக்கும் எனக்கு ஆறுதலாக ஒரு வரி?

உங்களை அதிகம் காயப்படுத்திய விஷயம் எதுவோ, அதுவே உங்களுக்கு, உங்கள் வாழ்வுக்குத் தேவையான மிகச்சிறந்த பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்!

மாணிக்கம், திருப்பூர்.

தலைவன் தப்பு செய்தாலும், சகித்துக்கொண்டு இருப்பதற்குப் பெயர்தான் விசுவாசமா?

இல்லவே இல்லை. விசுவாசம் என்பது கேள்விகளே அற்ற நம்பிக்கை என்றுதான் பார்க்கப்படுகிறது. ஆனால், அதையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்கிறது நவீன அறிவுலகம்!

கழுகார் பதில்கள்

டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.

டாக்டர் ராமதாஸின் அரசியல் இலக்குதான் என்ன?

இலக்கா... அது மாறிக்கிட்டே இருக்கறதால நமக்கும் அது என்னான்னு தெரியலை. அவராலயும் அதை அடைய முடியலை!

பாரதி, மேட்டுப்பாளையம்.

“எனது பேச்சால் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால், வருத்தப்பட வேண்டிய விஷயம்” என்று ஹெச்.ராஜா கூறியுள்ளாரே?

வாய்க்கு வந்த எதையாவது பேசிட்டு, பிறகு வருத்தம் தெரிவிக்கறதையே வழக்கமா வெச்சுருக்கறவங்களைப் பத்தியெல்லாம் கேள்வி கேட்டு ஏன் பாரதி உங்க நேரத்தை வீணாக்குறீங்க?!

கழுகார் பதில்கள்

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவருடைய கணவர் உள்ளிட்ட மூவர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறதே?

இந்திரகுமாரி அ.தி.மு.க-வில் இருந்தபோது, 1991-1996 காலகட்டத்தில் நடந்த ஊழல் வழக்கு இது. 1997-ல் சி.பி.சி.ஐ.டி விசாரிக்கத் தொடங்கி, 2003-ல் வழக்கு தொடர அரசு அனுமதி அளித்தது. 16 ஆண்டுகள் கழித்து 2019-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இப்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 24 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வந்துள்ள தீர்ப்பு இது. இந்திரகுமாரி இப்போது தி.மு.க-வில் மாநில இலக்கிய அணிச் செயலாளராக இருக்கிறார். 24 ஆண்டுகள் கழித்துத்தான் ஒரு தீர்ப்பு வருகிறது என்பது காவல்துறை மற்றும் நீதித்துறையின் ஆமை வேகத்தைக் காட்டுகிறது என்பது வேதனைதான்!

கழுகார் பதில்கள்

ப.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

தற்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் கழுகாரே?

வங்கதேச எழுத்தாளர் காலித் ஹுசைனி எழுதிய ‘ஆயிரம் சூரியப் பேரொளி’. தமிழில் ஷஹிதா மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடாக வந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இதற்கு முந்தைய தாலிபன் ஆட்சியின்கீழ், பெண்கள் பட்ட அல்லல்களையும், அவற்றைத் துணிவுடன் அவர்கள் எதிர்கொண்டு கடந்ததையும் இந்நாவல் மூலம் விவரித்திருக்கிறார் காலித் ஹுசைனி. தாலிபன்கள் மீண்டும் அங்கே ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் நாவலை வாசிக்கும்போது, நிகழ்கால அரசியலோடு அதைப் பொருத்திக்கொள்ள முடிகிறது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!