Published:Updated:

கழுகார் பதில்கள்

விவசாயிகள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் போராட்டம்

ஏற்கெனவே அரசியல்வாதிகள் என்றாலே மக்கள் ஒருவித வெறுப்புணர்ச்சியோடு விலகிச் செல்கிறார்கள்.

கழுகார் பதில்கள்

ஏற்கெனவே அரசியல்வாதிகள் என்றாலே மக்கள் ஒருவித வெறுப்புணர்ச்சியோடு விலகிச் செல்கிறார்கள்.

Published:Updated:
விவசாயிகள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள் போராட்டம்

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி, சேலம் மாவட்டம்.

மத்திய அமைச்சரே ‘பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள்’ என்கிறபோது, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை ‘தடையை மீறி ஊர்வலம் நடைபெற்றே தீரும்’ என்கிறாரே?

அமைச்சர் செய்வது அறிவார்ந்த செயல். அண்ணாமலை செய்வது அரசியல்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

சாதனை புரிய ஆசையிருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் எனக்கு என்ன சொல்வீர்கள்?

“விழிப்புடன் இருங்கள். உங்கள் விரலிடுக்கில்கூட வாய்ப்புகள் நழுவிப்போகக்கூடும்” என்ற பொன்மொழியைச் சொல்வேன்.

வண்ணை கணேசன், சென்னை-110.

அரசியலில் உண்மையான நண்பன், உண்மையான எதிரி இவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

அதைப் புரிந்துகொள்ளும் போராட்டம்தான் அரசியல்!

ப.திருக்காமேஷ்வரன், புதுச்சேரி.

“மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மண்டையை உடைக்கச் சொல்லியிருக்கிறாரே கர்னல் மாவட்ட உதவி கலெக்டர்?

ஹரியானா மாநிலம், கர்னல் மாவட்ட உதவி கலெக்டர் ஆயூஷ் சின்ஹாதான் இப்படிப் பொறுப்பில்லாமல் பேசியுள்ளார். போகிறபோக்கில் அல்ல. மிகத் தெளிவாகவே இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். ``மண்டையை உடையுங்கள்’’ என்று சொல்லிவிட்டு “சந்தேகம் இல்லையே... குழப்பம் இல்லையே...” என்றெல்லாம் வேறு கேட்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, அவர் படித்தது இந்திய ஆட்சிப் பணிக்கா... இந்திய அராஜகப் பணிக்கா என்று சந்தேகம் வருகிறது. இது போன்ற அநாகரிக அதிகாரிகள்மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது!

கழுகார் பதில்கள்
Mayank Makhija

தே.மாதவராஜ், ராமநாதபுரம், கோவை.

பாராலிம்பிக் போட்டியில் இந்தியா வெற்றிகளைக் குவித்திருப்பது பற்றி..?

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கும் அவர்களின் வெற்றி, கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. வெற்றிகளைக் குவிப்போருக்கு மட்டுமல்ல, பங்குபெற்ற அனைவரும் பாராட்டுக்குரியவர்களே!

இல.கண்ணன், நங்கவள்ளி.

ஓடும் ரயிலில், பீகார் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ கோபால் மண்டல் என்பவர் உள்ளாடையுடன் உலவியதாக வெளியான செய்தி பற்றி..?

என்ன சொல்ல! ஏற்கெனவே அரசியல்வாதிகள் என்றாலே மக்கள் ஒருவித வெறுப்புணர்ச்சியோடு விலகிச் செல்கிறார்கள். இது போன்ற செயல்பாடுகள், மக்கள் மனதில் அரசியல்வாதிகள் குறித்த மோசமான சித்திரத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும்!

குரு சண்முகம், தேனி.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிறார்களே... ஓர் உதாரணம் தர முடியுமா கழுகாரே?

ஒரு விலையுயர்ந்த காரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான் ஒரு சிறுவன். காரின் சொந்தக்கார இளைஞன், அந்தச் சிறுவனின் அருகில் அமர்ந்திருந்தான். “என் அண்ணன் கொடுத்த கார் இது” என்று சொன்னான் அந்த இளைஞன். சிறுவன் சிரித்தபடி மீண்டும் காரையே பார்த்துக்கொண்டிருந்தான். “அப்படி ஓர் அண்ணன் உனக்கும் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறாய் அல்லவா?” என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்குச் சிறுவன் சொன்னான். “இல்லை. அப்படி ஓர் அண்ணனாக நான் வளர விரும்புகிறேன்!” இதைத்தான் உயர்வுள்ளல் என்றார் வள்ளுவர்!

கழுகார் பதில்கள்

சுகன்யா, சென்னை.

பா.ஜ.க-வால்தான் அ.தி.மு.க தோற்றது என்பது தெரிந்தாலும், பா.ஜ.கவை ஓ.பி.எஸ் புகழ்ந்து தள்ளுவது ஏன்?

தேர்தல் தோல்வியைச் சொல்றீங்களா... அது வேற டிபார்ட்மென்ட்! புகழாவிட்டால் வரும் பின்விளைவுகள் அவருக்கும் தெரியும்தானே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism