Published:Updated:

கழுகார் பதில்கள்!

சார்லஸ், ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
சார்லஸ், ஓ.பி.எஸ்

மக்கள் காவல்துறையுடன் எப்போதுமே கைகோக்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் காவல்துறையில் பெரும்பாலானோர் மக்கள்மீது அதிகாரம் செலுத்தவே விரும்புகிறார்கள்.

கழுகார் பதில்கள்!

மக்கள் காவல்துறையுடன் எப்போதுமே கைகோக்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் காவல்துறையில் பெரும்பாலானோர் மக்கள்மீது அதிகாரம் செலுத்தவே விரும்புகிறார்கள்.

Published:Updated:
சார்லஸ், ஓ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
சார்லஸ், ஓ.பி.எஸ்

மாணிக்கம், திருப்பூர்.

இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லஸும், ஓ.பி.எஸ்-ஸும் சந்தித்துக்கொண்டால் என்ன பேசுவார்கள்?

‘ராணி இல்லாததால இந்தப் பதவி உங்களுக்குக் கெடைச்சுருக்கு. எந்தக் காரணத்தைக்கொண்டும் இணை மன்னர்னு ஒரு பதவியைக் கொண்டுவர ஒப்புக்காதீங்க’னு இவரு அட்வைஸ் பண்ணுவார். ‘வாட் ஈஸ் தர்மயுத்தம்?’னு அவர் கேட்டு வெச்சுப்பார்!

கழுகார் பதில்கள்!

யாழினி முரளிகுமார், திருப்பூர்.

தீர்ப்புகளைத் திருத்த முடியுமா?

சீனத்துப் பயணி கொடுத்த விலையுயர்ந்த மூன்று பீங்கான் ஜாடிகள் மன்னர் வசம் இருந்தன. அரண்மனைப் பணியாள் ஒருவர் அதைச் சுத்தப்படுத்தும்போது, ஒரு ஜாடியை உடைத்துவிட்டார். மன்னர் கோபம்கொண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தார். தண்டனை நாளன்று அவரிடம், “உன் கடைசி ஆசை என்ன?” என்று கேட்டார் மன்னர். “மீதமுள்ள இரண்டு ஜாடிகளை இப்போது நான் பார்க்க வேண்டும்” என்று கேட்டார் பணியாள். அந்த ஜாடிகள் வந்ததும், அவற்றைக் கீழே போட்டு உடைத்தார் பணியாள். மன்னர் கோப மிகுதியில் சத்தமிட்டு “ஏனிப்படிச் செய்தாய்?” என்று கேட்டார். “உடைந்துபோகிற ஜாடிக்காக மனித உயிரை எடுக்கச் சொன்ன உங்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இவற்றை உடைப்பதன் மூலம், குறைந்தபட்சம் இரு உயிர்களைக் காப்பாற்ற முடியுமே... அதனால் இப்படிச் செய்தேன்” என்றார். உடனடியாகத் தன் தவறை உணர்ந்து, தீர்ப்பைத் திருத்தி, அவரை விடுவித்தார் மன்னர். இப்படி, மன்னர் காலத்திலிருந்தே பல தீர்ப்புகள் திருத்தப்பட்டிருக்கின்றன. திருத்தத்துக்கான அவசியத்தை உணர்த்துகிறவிதத்தில் உணர்த்த வேண்டும்.

பெ.பச்சையப்பன், கம்பம்

மின் கட்டணம்?

ஷாக்!

அன்னூரார் பொன்விழி, அன்னூர்.

சீமான், அண்ணாமலை இருவரையும் வைத்து தீபாவளிக்கு அன்னூரில் பட்டிமன்றம் நடத்த ஆசை. என்ன தலைப்பில் பேச அழைக்கலாம்?

‘அரசியல் என்பது கதை விடுவதா... உதார் விடுவதா?’

@சரோஜா பாலசுப்ரமணியன்

ஜனநாயக ஆட்சி பரவிவரும் நிலையில், இங்கிலாந்தில் மன்னராட்சி தேவையா... மக்கள் வரிப்பணம் வீண்தானே?

இருங்க... இருங்க... நம்ம ஊர்ப் பிரச்னை, நம்ம மாவட்டப் பிரச்னை... நம்ம மாநிலப் பிரச்னை, நம்ம நாட்டுப் பிரச்னைனு வரிசையா முடிச்சுட்டு அந்தப் பக்கம் போவோம்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“நான் பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறாரே இ.பி.எஸ்?

சண்டைன்னா சட்டை கிழியத்தான் பாஸ் செய்யும்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

அழுவது மன அழுத்தத்தைக் குறைக்குமாமே. ஆனால், அழுவது கோழைத்தனம் என்கிறார்களே?

மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்ல, மன அழுத்தத்தின் மூலம் வரும் கடுமையான தலைவலியும் அழுவதால் வராமல் தடுக்கப்படும். கண்களைத் தூய்மைப்படுத்த உதவும் கிருமிநாசினியாகவும் கண்ணீர் செயல்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அழுபவர்களெல்லாம் கோழைகள் அல்ல, அதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

“காவல்துறையும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால், குற்றமே நிகழாமல் தடுக்கப்படும்” என்ற ஸ்டாலினின் பேச்சு?

மக்கள் காவல்துறையுடன் எப்போதுமே கைகோக்கத்தான் விரும்புகிறார்கள். ஆனால் காவல்துறையில் பெரும்பாலானோர் மக்கள்மீது அதிகாரம் செலுத்தவே விரும்புகிறார்கள். பெரும்பாலும் காக்கி உடைகளைக் கண்டாலே ‘எதுக்கு வம்பு?’ என்று மக்கள் ஒதுங்கிச் செல்வதுதான் யதார்த்த நிலை. இது மாற வேண்டும். அதற்கான யோசனைகளை அந்தத் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின்தான் முதலில் முன்னெடுக்க வேண்டும்.

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

கொடுப்பதில்தான் இன்பம் என்பது தெரிந்தும், அரசியல்வாதிகள் எடுப்பதில் மட்டுமே ஆர்வமாக இருப்பது ஏன்?

அப்படியெல்லாம் இல்லையே. வாக்குறுதிகளைக் ‘கொடுப்பதில்’ இன்பமும், தன்மீதான விமர்சனங்களை எடுத்துக்கொள்வதில் ஆர்வமில்லாமலும்தான் இருக்கிறார்கள்!

@வேல் ரவீந்திரன்

சசிகலா - தினகரன் வசம் கட்சியின் லகானும், பழனிசாமி - பன்னீர் வசம் ஆட்சியின் லகானும் இருக்க, அ.தி.மு.க பீடு நடை போடுவதுபோல் கனவு கண்டேன். என் கனவு நனவாகுமா?

அப்பவும் ரெட்டைத் தலைமையா?

அம்ரீந்தர் சிங்
அம்ரீந்தர் சிங்

தே.மாதவராஜ், இராமநாதபுரம், கோவை.

பஞ்சாப்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் பா.ஜ.க-வுக்குத் தாவிவிட்டாரே?

“இதுக்குத்தான் யு டர்ன் போட்டு... டேபிளை ஒடச்சு... ரத்தக்களரி ஆக்கினீங்களா...” என்று அந்தக் கட்சி ஆதரவாளர்களே பஞ்சாப்பில் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!