Published:Updated:

சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் விசிட்; காங்கிரஸ் புள்ளியின் காலில் விழுந்த நயினார் -கழுகார் அப்டேட்ஸ்

``இன்ஸ்டாகிராமில் செய்திகள் அனுப்பியிருக்கிறேன்!” - கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் தகவல் வரவே இன்ஸ்டாகிராமை ஓப்பன் செய்தோம்.

``என்னைத் தொட்டா ஷாக் அடிக்கும்!”
பத்து பர்சன்ட் ஆபீஸரின் மிரட்டல்...

சென்னை அருகேயுள்ள ‘மலர்’ நகராட்சியின் முக்கிய அதிகாரியை ‘பத்து பர்சன்ட் ஆபீஸர்’ என்றே அழைக்கிறார்கள் துறையின் புரோக்கர்கள். ``பத்து சதவிகித கமிஷன் இல்லாமல் ஃபைலையே ஓப்பன் பண்ண மாட்டார்’’ என்று சொல்லும் ஒப்பந்ததாரர்கள் சிலர், இவர் அமைச்சருக்கு பி.ஏ-வாக இருந்ததால், தற்போதுள்ள மாவட்டத்தின் ஆளுங்கட்சியினர் யாரையுமே மதிப்பதில்லை.

சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் விசிட்; காங்கிரஸ் புள்ளியின் காலில் விழுந்த நயினார் -கழுகார் அப்டேட்ஸ்
Representational Image

அதேநேரத்தில் பழைய பாசத்தில் அ.தி.மு.க-வினர் அளிக்கும் பில்லை மட்டும் உடனுக்குடன் பாஸ் செய்து கமிஷனை வாங்கிக்கொள்கிறார். இவருக்குத் துறையின் பொன்னான அதிகாரியின் ஆசி இருப்பதால், ‘என்னைத் தொட்டால் ஷாக் அடிக்கும்’ என்று சொல்லி மிரட்டுகிறார்” என்று புலம்புகிறார்கள்!

தி.மு.க-வில் இணைந்த அ.தி.மு.க புள்ளி...
ஜெர்க் ஆன செந்தில் பாலாஜி!

கரூர் வடக்கு நகர அ.தி.மு.க செயலாளராக இருந்தவர் பாண்டியன். இவர், கடந்த வாரம் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்த நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் உடனிருந்தார். சட்டவிரோத லாட்டரித் தொழிலில் இவர் பெயர் அடிபட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே இவர் தி.மு.க பக்கம் வருவதற்குக் காய்நகர்த்தினார்.

சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் விசிட்; காங்கிரஸ் புள்ளியின் காலில் விழுந்த நயினார் -கழுகார் அப்டேட்ஸ்

ஆனால், பாண்டியனை தி.மு.க-வுக்குள் சேர்க்க செந்தில் பாலாஜிக்கு விருப்பம் இல்லையாம். இதனால், லாட்டரித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் மேலிடத்து நபரின் ஆசியோடு தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் பாண்டியன். பாண்டியனின் இந்த ‘லாபி’யைப் பார்த்து ஜெர்க் ஆன செந்தில் பாலாஜி தரப்பு, ``இவரிடம் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறதாம்!

விழாக் கொண்டாட்டத்துக்கு ரூ.50 லட்சம் வசூல்...
ஆட்டம்காணும் நாகை கலெக்டர் அலுவலகம்!

நாகை மாவட்டம் உதயமான 30-வது ஆண்டு தொடக்கவிழா, அக்டோபர் 18-ம் தேதி, முதல் ஒரு வார காலம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்தான், ‘‘விழாவைக் கொண்டாட மாவட்ட நிர்வாகத்திலுள்ள சில அதிகாரிகள் பொதுத்துறை நிறுவனங்கள், அறக்கட்டளைகள், கல்வி நிலையங்கள், லயன்ஸ் மற்றும் ரோட்டரி கிளப்புகள் உள்ளிட்டவற்றிலிருந்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள்.

சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் விசிட்; காங்கிரஸ் புள்ளியின் காலில் விழுந்த நயினார் -கழுகார் அப்டேட்ஸ்

இதில், மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது. இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இருவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்கத்தினர், தமிழக ஆளுநர் வரை புகார் அனுப்பியிருக்கிறார்கள். ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெற்று ஆதாரங்களுடன் புகார் அனுப்பியிருப்பதால், ஆட்சியர் அலுவலகமே ஆட்டம்கண்டுள்ளது.

காலில் விழுந்த நயினார்...
கடுப்பில் பா.ஜ.க-வினர்!

வ.உ.சி-யின் 85-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை வ.உ.சி மணிமண்டபத்திலுள்ள வ.உ.சி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் கட்சியினர் மரியாதை செய்துவிட்டு வெளியே வந்தார்கள். அப்போது, பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் கட்சியினருடன் அங்கு வந்தார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோது, தன் பி.ஏ-விடம் சால்வை எடுத்துவரச் சொன்ன நயினார் நாகேந்திரன், திடீரென்று தனுஷ்கோடி ஆதித்தனுக்கு அணிவித்து, தடாலென காலில் விழுந்து வணங்கினார். ``நான் வெற்றிபெற்றதும் தனுஷ்கோடி ஆதித்தனை வீட்டுக்குச் சென்று சந்திக்க விரும்பினேன். அதற்கு நேரம் வாய்க்கவில்லை. இப்போது நேரில் பார்த்ததால், வயதிலும் அனுபவத்திலும் பெரியவரான அவரிடம் ஆசிபெற்றேன்’’ என்று நயினார் பெருந்தன்மையுடன் சொன்னாலும், இதைப் பார்த்து ஏக கடுப்பில் இருக்கிறார்களாம் பா.ஜ.க புள்ளிகள்.

‘‘பல்கலைக்கழகம் விற்பனைக்கு...’’
முதல்வர் விசிட் கிளப்பிய சர்ச்சை!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே, குமாரகோவில் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான என்.ஐ பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றோடு செயல்படும் இந்தப் பல்கலைக்கழகத்தை ஆளுங்கட்சிக்கு தொடர்புடைய குழுமம் ஒன்று விலைக்கு வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம். இந்த நிலையில், நவம்பர் 15-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மழைச்சேத பாதிப்புகளைப் பார்க்க வந்த முதல்வர், குமாரகோவிலில் கல்லூரி வளாகம் அமைந்துள்ள இடத்தில் ஒரு கால்வாய் உடைப்பைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில், வைக்கல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தன.

சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டாலின் விசிட்; காங்கிரஸ் புள்ளியின் காலில் விழுந்த நயினார் -கழுகார் அப்டேட்ஸ்

இதையடுத்து, “வீடுகளே இல்லாத குமாரகோவில் பகுதிக்கு முதல்வர் சென்றது கல்லூரியைப் பார்வையிடத்தான்!” என்று முதல்வர் விசிட்டுக்கும், பல்கலைக்கழக விற்பனைக்கும் முடிச்சுப்போட்டு பேசுகிறார்கள் உள்ளூர் மக்கள். இது பற்றி தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டால், ``அந்தக் குழுமத்துக்கும், முதல்வர் தரப்புக்கும் எப்பவுமே ஆகாது; முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடலாமா!” என்கிறார்கள் நக்கலாக!

அ.தி.மு.க பொன்விழா ஆண்டு...
கிடப்பில் மாநாட்டுப் பணிகள்!

அ.தி.மு.க-வின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அந்தக் கட்சியின் சார்பில் பிரமாண்ட பொன்விழா மாநாடு, கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது என்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான எந்தப் பூர்வாங்கப் பணியையும் கட்சியின் தலைமை எடுக்கவில்லை.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

குறிப்பாக, மாநாட்டுச் செலவை யார் ஏற்பது என்பதில் இரட்டைத் தலைமைகளுக்குள் கருத்து மோதல் உருவாகவே... பொன்விழா நிகழ்வுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது தெரியாமல், ‘மாநாடு எப்போது நடக்கும்?’ என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் அப்பாவி அ.தி.மு.க தொண்டர்கள்.

மிஸ்டர் கழுகு: நீதிமன்றம் மூலம் நெருக்கடி... உஷாராகும் ஆளுங்கட்சி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அவசரம் வேண்டாம்!’’
அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!

அ.தி.மு.க மாஜிக்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரெய்டு நடவடிக்கைக்குப் பிறகு, அவர்கள்மீது அடுத்தகட்டமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தி.மு.க மீதே விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து சமீபத்தில் கோட்டையில் ஆலோசனை நடந்தபோது அதிகாரிகளிடம் பேசிய முதல்வர், ‘‘ஆக்‌ஷன் எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முழுமையான ஆதாரங்களைத் திரட்டிய பிறகே நடவடிக்கை எடுங்கள். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிவிடக் கூடாது’’ என்று அறிவுரை சொன்னாராம். குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் துறையில் நடந்த பல முறைகேடுகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தோண்டி எடுத்துள்ளனர். ஆனால், மேலிடத்திலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்காததால், அமைதி காக்கிறதாம் லஞ்ச ஒழிப்புத்துறை.

சென்னை மாநகராட்சிக்குப் பெண் மேயர்?
புலம்பும் தி.மு.க நிர்வாகிகள்!

வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறது ஆளுங்கட்சி. இதனால், வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகள் சுறுசுறுப்பாகியிருக்கின்றன. இந்த நிலையில், உள்ளாட்சியில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால், எந்தெந்த மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடம் எழுந்திருக்கிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி

நீண்டகாலமாக பொதுப்பிரிவிலுள்ள சென்னை மாநகராட்சி மேயர் பதவி, இந்த முறை சுழற்சிமுறையில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. அதிலும் பட்டியல் சமூகப் பெண்களுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பதவி ஒதுக்கப்படலாம் என்று தகவல் பரபரக்கும் நிலையில்,``சென்னை சிட்டியில நம்ம கட்சியில அதுக்கேத்த ஆளே இல்லையேப்பா!” என்று முணுமுணுக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்!

ஸ்டாலின் அழைப்புக்காகக் காத்திருக்கும் மாஜி; நீலகிரியின் அடுத்த கலெக்டர் யார்? | கழுகார் அப்டேட்ஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு